பிருந்தாவனம்  படம் எப்படி?

பிருந்தாவனம் படம் எப்படி?

நடிகர்கள் : அருள்நிதி, விவேக், தன்யா
கதை,திரைக்கதை, இயக்கம் : ராதாமோகன்
வசனம் : பொன் பார்த்திபன்
தயாரிப்பு : ஷான் சுதர்சன்
தயாரிப்பு நிறுவனம் : வன்சன் மூவீஸ்
படவிநியோகம் : ஆரஞ்சு கிரியேஷன்ஸ்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : எம்.எஸ். விவேகானந்த்
படத்தொகுப்பு : டி. எஸ். ஜெய்
கலை : கே. கதிர்
வெளியீட்டு நாள் : 26.05.2017
தணிக்கை சான்றிதழ் : யூ
காலஅளவு : 2 மணி 10 நிமிடங்கள்
படவகை : டிராமா

கதை
சிரிப்பு நடிகர் விவேக்கின் ரசிகரான காதுகேட்காத, பேசமுடியாத அருள்நிதி ஒரு சலூனில் வேலைசெய்கிறார். விவேக் நடிகராகவே நடித்துள்ளார். பல்வேறு சந்திப்புகள் இருவரையும் நண்பர்களாக்குகிறது. தன்யா அருள்நிதியை காதலிக்கிறார் அதனை அருள்நிதியிடம் வெளிப்படுத்தும்போது அவர் கோபப்பட்டு தன்யாவின் காதலை நிராகரித்து தன் கடந்த கால வாழ்க்கையைப்பற்றி அவளிடம் மனம் திறக்கிறார். அடுத்தது என்ன ?

நிறை
விவேக்கின் நகைச்சுவை சிரிப்பை வரவழைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது அதுவே படத்துக்கு பக்கபலமாக அமைகிறது. அருள்நிதி நடிப்பில் அசத்தி இருப்பது படத்தில் கண்கூடு. தன்யா தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை தனக்கு சாதகமாக்கி நேர்த்தியாக நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், டவுட்டு செந்தில், செல் முருகன் போன்றவர்கள் படத்துக்கு அழகு. படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ராதாமோகனின் திரைக்கதை பின்னி பெடலெடுக்கிறது. அவரின் இயக்கமும் காட்சியமைப்பும் ரசிகர்களை ஆர்ப்பரிக்கிறது. பொன் பார்த்திபனின் வசனங்கள் பெரிய பலம். நகைச்சுவையிலும், உணர்ச்சிவசத்திலும் வசனங்கள் தெறிக்கின்றன. விஷால் சந்திரசேகரின் அமைதியும் நுட்பமும் சேர்ந்த கலவையான பின்னணி இசை அருமை. எம். எஸ். விவேகனந்த் ஒளிப்பதிவில் ஒளித்தென்றல் வீசுகிறது. கதிரின் கலைநுட்பம் படத்துக்கு பொலிவு. இரண்டாம் பாதியில் அருள்நிதி கதாபாத்திரம் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை வலுக்கிறது. நகைச்சுவை காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறது. விவேகின் கதாபாத்திரத்தை வடித்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

குறை
இயக்குநர் ராதாமோகனின் கதை சாதாரணமானது. ஹீரோவின் உணர்சிகரமான முன்கதை படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டி சில இடங்களில் ஏற்படும் தொய்வினை தடுத்திருக்கலாம். விஷால் சந்திரசேகரின் பாடல்கள் படத்தில் வர்த்தகரீதியில் திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. புதுமை இன்றி சாதாரணமான டி.எஸ். ஜெய் -யின் படத்தொகுப்பில் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்பத்தகாத சில காட்சிகளும், விவேக்குடன் தன்யா நடித்த சில நம்பமுடியாத நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட கட்சிகளையும் நெறிப்படுத்தி இருக்கலாம்.

கருத்து
படத்தின் பின்பாதி சுமாராக இருந்தாலும் மொத்தத்தில் ஒரு இனிமையான உணர்வை ஏற்படுத்தும் படம். விவேக்கின் நகைச்சுவை படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

மதிப்பீடு 3/5

Share