தரை மட்டமான தனி நபர் வழிபாடு

சவூதி மன்னர் மரணம் நமக்கு உணர்த்தும் நெறி

திருமறைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத் அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்! உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர். சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு.

இந்த அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் பெற்ற மன்னர் இறந்ததும் அந்த நாட்டில் அரசு விடுமுறை இல்லை. அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவும் இல்லை. இதற்குக் காரணம் அந்த நாட்டுக் கொடியில் ஏற்றப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் வார்த்தைகள்.

“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என்று அந்தக் கொடியில் பொறித்திருப்பது அந்த நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் பிரகடனமாகும். அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும் அந்த நாட்டின் கொடி சாயவில்லை.
குடியும் சாகவில்லை!

s1

இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்கி விட்டது.

ஒருவர் இறந்து விட்டால் அவரை உரிய முறையில் அடக்கம் செய்வது கடமையாகும். இதைத் தான் அந்நாட்டு மக்கள் செய்யப் போகின்றனர். விமானப் போக்குவரத்து நிற்கவில்லை. பஸ், கார், ரெயில் போக்குவரத்து பாதிக்கவில்லை. அரசு அலுவலகங்களுக்கு மூடு விழா நடத்தப்படவில்லை. அந்நாட்டு முடி சாய்ந்ததால் எந்த ஒரு குடியும் சாகவில்லை. எந்த ஒரு குடியும் எதுவும் கிடைக்காமல் நோகக் கூட இல்லை. ஒரு மன்னர் இறந்து விட்டார் என்று கூடத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டைப் போன்று எந்தப் பேருந்தும் அங்கு பற்றி எரியவில்லை.

சாதாரண அடக்கம்

இந்த அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும் பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம் என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே! இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம் கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர் இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப் பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை. ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் தான் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்படுவார்.

s2

மன்னரின் அடக்கத்தலத்தில் ஒரு கல் (அடையாளத்துக்காக) வைக்கப்படும். அதில் மன்னர் என்ற பெயர் கூட பொறிக்கப்படாது. ஆண்டியும் இங்கே! அரசனும் இங்கே! என்ற கவிஞன் கூற்றுப்படி சமரசம் உலாவும் இடமாக சவூதி மன்னரின் சமாதி பொது அடக்கத்தலத்தில் அமைக்கப்படும் . இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால் அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும் கருதி விடக் கூடாது. பல இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் அவரது ஜனாஷாவிற்கு வருகை தரவிருக்கின்றனர்.

தரை மட்டமான தனி நபர் வழிபாடு

இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமையப் போகிறது. . பல கோடிக்கணக்கான பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. அரசுப் பணம் சாம்பலாகும் வகையில் அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக் காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம் தகர்த்தெறிந்தது தான்.

முஸ்லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி, மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட மேலானவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

அவர்கள், தாம் இறந்த பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும் வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக தமது வாழ்நாளில் எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க புகாரி 1390)

அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன் அடிப்படையில் தான் சரியான முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள் எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!

“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1609

இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்

பொதுவாக கடந்த காலம் தொட்டு இன்று வரை இறந்து விட்ட பெரியார்களுக்காக நினைவாலயங்கள் எழுப்புவது மக்களின் இரத்தத்தில் ஊறிப் போன உணர்வாகி விட்டது. அதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உடைத்தெறிகின்றார்கள்.

பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது, இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம் செய்யும் அரக்க குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.

சரியான சிந்தனைத் தெளிவோட்டம், பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான் சரி காணும்.
இதே போல் தன் இவருடைய அண்ணண் பஃஹது பின் அப்துல் அஜிஸ் இறந்த போதும்!!!!

மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும் இந்த வழி காட்டுதலைத் தான் தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும்.

Share