“உசுரே” விமர்சனம்

“உசுரே” விமர்சனம்

ஆந்திரா எல்லையை மையமாக கொண்டு உருவான ஒரு வித்தியாசமான காதல் கதை தான் “உசுரே”. படத்தின் கதாநாயகன் டீஜே அருணாச்சலம், குவாரியில் வேலை பார்க்கும் அருணாச்சலம் – எதிர்புற வீட்டில் குடியேறும் ஜனனி மீது காதலில் விழுகிறார். ஆனால், ஜனனியின் அம்மா மந்த்ராக்கு இது பிடிக்கவில்லை. இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் டீஜேவை அவமானப்படுத்தும் சூழல் உருவாகிறது. இறுதியில், இந்த காதல் வெற்றியடையுமா? என்பதே இப்படத்தின் கதை.

டீஜே அருணாச்சலம், ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு இங்கு இளம் ஹீரோவாக மென்மையான காதல் காட்சிகளில் மெருகேற்றி நடித்து இருக்கிறார். பேசாமல் பார்வை மூலம் காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் பார்வையாளர்களை உருக வைக்கும் அளவுக்கு உள்ளது.

பிக் பாஸ் பிரபலம் ஜனனி, இளமையும் அழகும் கொண்ட காதல் கதாநாயகியாக சிறப்பாக பொருந்தியுள்ளார். நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், அவரது திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம். மந்த்ரா, முன்பு கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தவர், இப்போது மாற்றிய முக அமைப்பிலும் அம்மா கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தியுள்ளார். கிரேன் மனோகர், வழக்கமான காமெடி பாணியை தவிர்த்து, சீரியஸ் அப்பா கதாபாத்திரத்தில் திகழ்ந்துள்ளார்.

படத்தில் செந்தி குமாரி, தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் போன்றோர் தங்கள் வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இசையில் கிரண் ஜோஷ் – காதல் பாடல்கள் ஜோடியின் ரசனைக்கு உயிரூட்ட, பின்னணி இசை கதை சொல்லும் பாணிக்கு வலிமை சேர்க்கிறது. மார்க்கி சாய்யின் ஒளிப்பதிவு, கிராமத்தின் அழகையும் காதலர்களின் உணர்வுகளையும் இயல்பாக காட்சிப்படுத்துகிறது. மணிமாறன் படத்தொகுப்பு, கதையை சுவாரஸ்யமாக நகர்த்தும் விதத்தில் இருக்கிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதி இயக்கியுள்ள நவீன் டி. கோபால், சாதாரண காதல் கதையை குடும்ப பின்னணியோடு நாகரீகமாக சொல்லியிருக்கிறார். கிளைமாக்ஸ் பகுதியில் எதிர்பார்க்காத திருப்பம், பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தருவதோடு, மனதை கனக்கச் செய்கிறது.

Star Rating : 3.2/5

Share