‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையில் நடிகர் சங்கத்துக்கு லைக்கா ரூ.1 கோடி நிதியளித்தது

‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையில் நடிகர் சங்கத்துக்கு லைக்கா ரூ.1 கோடி நிதியளித்தது

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் முதலாவதாக பேசிய நாசர் இந்த நடிகர் சங்க வளாகத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கிவைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்கவிழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இவ்விழாவை நடத்த வாடகையாக ருபாய் 2.5 – லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கான விளம்பரங்களில் “மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா ?? “என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அதுவல்ல படத்தின் தலைப்பு, அந்த வாசகம் “ மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா ?? என்பதை குறிக்கும். நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இங்கே காத்துகொண்டு இருக்கிறது என்று கூறியவர் நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார்.

விழா மேடையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு லைகா குழுமதத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் 1-கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்த விழாவை இங்கு நடத்தி நடிகர் சங்கத்திற்கு பெருமை சேர்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைகா குழும தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். என்று கூறிய விஷால் ‘இந்த பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்’ என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார்.

Share