Ranganatha Perumal Temple Thiruneermalai – அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை

Ranganatha Perumal Temple Thiruneermalai – அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை 

 

thiruneer malai shruti-cover copy

திருநீர்மலை – தலச் சிறப்பு

எம்பெருமானினி 108 திவ்விய தேசங்களுள் திருநீர்மலைக்கு பல சிறப்புகள் உண்டு. திருமாலின் எட்டு வித சயனங்களில் இந்தச் க்ஷேத்திரத்தின் அரங்கருக்கு மாணிக்க சயனம் என்று பெரியோர் குறிப்பிட்டுவர். மற்ற ஏழு வித சயனங்கள் எங்கே என்னவெனில். ஸ்ரீ வில்லிபுத்தூரில் – வடபத்ர சயனம், திருவள்ளுரில் – வீரசயனம், திருக்கடல் மல்லையில் – தலசயனம், திருக்குடந்தையில் – உத்தான சயனம், திருப்புல்லாணியில் – தர்ப்ப சயனம், ஸ்ரீரங்கத்தில் – புஜங்க சயனம், திருச்சித்ர கூடத்தில் (சிதம்பரம்) – போக சயனம் என அவை ஏழாகும்.

இது ஒரு ‘ஸ்வயம் – வ்யக்த’ ஷேத்திரமாகும். அதாவது, மனிதயத்தினமின்றி தானே ஏற்பட்டது. திருவுக்கும் திருவாகிய செல்வன் அனைத் துலகமும் காப்பதன் பொருட்டு தானாக ஆவிர்ப்பவித்து சேவை சாதிக்கும் இடங்களே ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரமாகும். அப்படி முன்னோரால் போற்றப்பட்ட தலங்கள் எட்டாகும். அதில் திருநீர்மலை ஒன்றாகும். ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி மற்றும் ‘கோதாத்ரி’ எனப்படும் திருநீர்மலை என அவை எட்டாகும்.

திவ்ய தேசங்களில் பலவிதமாக நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் என ஏதோ ஒரு நிலையில் சேவை சாதிப்பார் – லக்ஷ்மீபதி. ஆனால், இங்கோ இந்த நான்குவிதமான நிலைகளிலும் அருள்பாலித்ப்பது எங்குமே இல்லாத தனித்தன்மை கொண்டதாய் விளங்குவது, நீர்வண்ணனாக நின்றும், சாந்த நரசிம்மனாக இருந்தும், மாணிக்க சயனத்திலி ஸ்ரீரங்கனாதனாக் கிடந்தும், திரிவிக்கிரமானாக நடந்தும், இப்படி நான்கு நிலைகளிலும் அருள்பாலிக்கிறார் திருமால்! இதுதவிர ஸ்ரீராமர், ஆண்டாள், அணிமா மலர் தேவி, ஆஞ்சநேயர் இவர்களது சந்நிதிகளும் இங்கே அமைந்திருப்பது விசேஷம். வால்மீகி மகரிஷிக்கும், தொண்டைமான் சக்ரவர்த்திக்கும் ப்ரத்யக்ஷமானதாக ஐதீகம்.

தர்மார்த்த காம மோட்ச மென்கின்ற நான்கு புருஷார்த்தங்களை நல்கும் மேதகுபதி திருநீர்மலையாகும்.
இங்குள்ள எம் பெருமான்கள் நான்கு:
நீர்வண்ணன்,
நரசிம்மர்,
ரங்கநாதர்,
உலகளந்த பெருமாள்.
நான்கு வேதங்களின் ஸ்வரூபமாக (மனுமறை நான்குமானார் பெரிய திருமடல்) இறைவன் விளங்குகிறார் என்பது ஆழ்வார் வாக்காகும்.

புஷ்கரிணிகளும் இங்கு நான்கு:
சொர்ண புஷ்கரணி (வடக்கு),
காருண்ய புஷ்கரணி (மேற்கு),
க்ஷீர புஷ்கரணி (தெற்கு),
சித்த புஷ்கரணி (கிழக்கு).

விமானங்கள் நான்கு:
புஷ்ப விமானம்,
சாந்த விமானம்,
ரங்க விமானம்,
பிரும்மாண்ட விமானம்.

திருமலை, ஸ்ரீரங்கம், திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு க்ஷேத்திரங்களின் பெருமானைச் சேவிப்பதற்கு சமானமான க்ஷேத்திரம் இதுவாகும். இப்படி நான்கு வழிகளிலும் நாராயணன் சிறப்பு இங்கு நனி துலங்கும்.

புராண வரலாறு
திருநீர்மலையைப் பற்றி பல குறிப்புகள் பிரமாண்ட புராணத்தில் உள்ளன. அதன்படி இத்தலம், தோயாசலம், தோயாத்ரி, தோதாத்ரி என்று பலவிதமாய் வழங்குகிறது. தோயம் என்பது தண்ணீரையும் அத்ரி என்பது மலையையும் குறிக்கும். இது அமைந்துள்ள இடத்தை காண்டவ வனம் என அழைப்பர் முன்னாளில், இங்கு தானாக விரும்பி எழுந்தருளியுள்ள பெருமாளை எப்போதும் தேவர்களும் முனிவர்களும், மானுட பக்தர்களும் வணங்கி உய்ந்தனர்.

சுகப் பிரும்மருஷி தமது தந்தையுமான வேத வியாசரை அணுகி, ‘தோதாசலம்’ என்கிற திருநீர்மலையின் சிறப்பைக் கூறும்படி கேட்க, “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒரு சமயம் அர்ஜூனனுக்கத் தெரிவித்த திருநீர்மலை வரலாற்றை உனக்கு இப்பொது கூறுகிறேன், கேட்பாயாக!” என மொழிந்த நிகழ்வை பிரமாண்ட புராணம் தெரிவிக்கிறது.

பாரத யுத்தம் முடிந்தபின் தனது பாபங்களைப் போக்கிக் கொள்ள தீர்த்தயாத்திரை மேற்கொண்ட காண்டீபன், தனக்குப் புண்ணியம் சேர்க்கம் பூமியைப் பற்றிக் கேட்க, மாதவனும் மொழிந்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணன், பக்தர்களைக் காக்கும் பொருட்டு, அர்ச்சா ரூபத்தில், ஸ்ரீரங்கமென்னும் பெயருடைய விமானத்தில், எல்லாத் தேவர்களும், மானுட உயிர்களுக்கும் வேண்டியதை அருளக்கூடியவராய் திருநீர்மலையில் ஆவிப்பவித்தார். அப்பொழுது அந்த இடம் – காண்டவ வனம் என்கிற காடாக இருந்தது. கந்தர்வர்களும் முனிவர்களும் பரம பக்தியுடன் வணங்கிப் பரவும் அந்த மலை மீது, ஆதிசேஷனைப் பாயலாகக் கொண்டு தென்திசை இலங்கை நோக்கி அரங்கனாக எம்பெருமான் பள்ளிகொண்டார்.

அத்தகைய சிறப்புடைய பள்ளிகொண்ட பெருமாளை ஒரு முறை சித்திரை மாதத்தில் மார்க்கண்டேயரும், பிருகு முனிவரும் துதித்துப் பரவினர். அவர்களது பக்தியில் மகிழ்வுற்ற எம்பெருமான், ‘வேண்டிய வரங்களை கேளுங்கள்’ என்ற போது, உலக நன்மைக்காகவே தவமியற்றும் அந்த முனி புங்கவர்வள், “பிரபோ ! எவரெல்லாம் தேவரீரைச் சித்ரா பௌர்ணமி தினத்தில் வணங்குகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் சகல சௌபாக்கியங்களையும், சிரேயஸ்ஸையும் அளிக்க வேண்டும்” என்று வரம் கேட்க, “அப்படியே ஆகட்டும்!” என பரந்தாமன் பகர்ந்தார். இந்த முனிவர்கள் பல காலம், திருநீர்மலையிலேயே வசித்து பகவானை பக்தி செய்து வாழ்ந்தனர்.

திருநீர்மலையில் தண்ணீர் நிறைந்த சூழ்ந்ததற்கு ஒரு புராண வரலாறு உண்டு. முன் மூன்று யுகங்களில் யாகங்களை தேவர்களும் ரிஷிகளும் செய்து அக்னிக்கு ஆஹுதி அளிக்க, அதன் அபரிமிதத்தால் மந்த நிலையடைந்த அக்னி பகவான் பெருமாளை வேண்ட, அவர், “நீ சென்று திருநீர்மலையிலுள்ள ஔஷதாதிகளைக் புசித்து பலனடைவாயாக!” என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி அக்னி பகவானும் காண்டவ வனமடைந்து அங்குள்ள தாவரங்களைப் புசிக்க, புல் பூண்டில்லாமல் அந்த இடம் மிகவும் உஷ்ணமயமாக ஆகிவிட்டது. இதனால் ரிஷிகளின் தவத்திற்கு இடையூரு உண்டாக, அதனைக் கண்ட எம்பெருமான் திருநீர்மலையில் ஏகதேசம் மழை பொழிய வைத்து அதனைக் குளிர்ச்சியடையச் செய்தார். இந்த மலையைச் சுற்றிச் சூழ்ந்து, நீர் இருந்தமையால் திருமங்கையாரும் பூதத்தாழ்வாரும், ‘மாமலையாவது நீர்மலையே’ என்று மங்களாசாசனம் செய்தனர். வால்மீக முனிவர் இந்த ஸ்தலத்தில் நாராயணனை ஜலஸ்வரூபமாகவே தரிசனம் செய்தார் என்பதும் புராண வரலாறு. இந்த காண்டவ வனத்திலேயே வால்மீகியின் ஆசிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நீர்வண்ணப் பெருமாளே, வால்மீகிக்கு கல்யாணராமானாச் சேவை சாதித்ததா ஐதீகம் ! இந்தச் க்ஷேத்திரத்தின் மூர்த்திகளை வால்மீகியே ப்ரதிஷ்டை செய்ததாகவும் கூறுவர். சீதாராம விவாகத்தின்போது – ஆஞ்சநேயருக்க சந்நிதி மலையடிவாரத்தில் தனியாக அமைந்துள்ளது. நரசிம்மாவதாரத்தின்போது, ஹிரணியனைக் கொன்ற பிறகும் சீற்றம் தனியாத நரசிம்மரை பிரஹ்லாதனும், லக்ஷ்மியும் தேவர்களும் வேண்டிய பின்னர் அவர் சீற்றம் தணிந்து இரண்டு கரங்களோடு பால மூர்த்தியாக சினம் தணிந்து சாந்தமானது இந்த க்ஷேத்திரத்தில் என்றும் கூறப்படுகிறது. இருந்த நிலையில் இங்கு சாந்த நரசிம்மர் எழுந்தருளியிருப்பது விசேஷம். இவரை வழிபட்டு பயப்பிராந்திகள் ஒழிந்து நிம்மதி அடையலாம்.

ஈஸ்வரனின் வேண்டுகோளை ஏற்று, திரிவிக்கிரமனாகத் திருமால் காட்சி தந்ததாகவும், அதை நினைவூட்டும்படி உலகளந்தான் சந்நிதியும் ஏற்பட்டது என்பர். எம்பெருமானின் நான்கு நிலைகளில் ‘நடந்தானுக்குரியது’ இதுவாகும்.

இத்தலத்தில் அமைந்துள்ள புஷ்கரணி நான்கு தீர்த்தங்கள் சேர்ந்து மிகப் புனிதமானதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ண பகவான் கூறியபடி அர்ஜூனன் இதில் நீராடிப் பாவங்களைப் போக்கிக் கொண்டான் என்றும் பிரும்மாண்ட புராணம் கூறும்! க்ஷீராப்தியே (பாற்கடல்) இங்குள்ளதால் க்ஷீரபுஷ்கரணி என்றும், பிரஹ்லாதனை ஸ்ரீநரசிம்மர் ஆனந்த பாஷ்பத்தால் நனைத்ததால், காருண்ய புஷ்கரணி என்றும், நித்திய சூரிகள் கொண்டு வந்த விரஜா நதி ஜலத்தால் நிறைந்ததால் ஸ்வர்ண புஷ்கரணி என்றும் கங்காதி சர்வ தீர்த்தங்களிலும் நீராடுவதற்குச் சமமென்று பெரியோர் கூறுவர்!

Share