Thirumurai Aruchaganai Song
திருமுறை அருச்கனைப் பாடல்கள்
திருநாவுக்கரசர் அருளியவை
போற்றித் தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லல் அறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல் புலித்தோல் ஆடைக்குழகா போற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி
ஆலமர நீழல் அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக எந்நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்யைக்கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையாலன்று எயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறி ஏந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னி மிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலும் காணா அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான் பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி
நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கை சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
பிரன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கரம்நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமருந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும் சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
வடமொழியில் செய்யப்படும் அஷ்டதோத்திரம் அருச்சனை போலவே தமிழில் நம்சமயாசாரியர் அருளிய இதனை அன்பர்கள் மனம் உருக ஓதிச்சிவபிரான் திருக்கோயில்களில் திருமூலட்டான நாதருக்கு அருச்சனை செய்விப்பது சிறப்பாகும்.
Social