பூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா

பூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா

திரு.வே.சுப்பையா 1968-ல் பூங்கொடி பதிப்பகத்தைத் தொடங்கினார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, நாவலாசிரியை லட்சுமி இவர்களின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர்களின் இலக்கிய நூல்களும், புதினங்களும் பூங்கொடியில் வெளிவரத் தொடங்கின. பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பூங்கொடி பதிப்பகத்திற்கு உண்டு. சாகித்ய அகாதமி, தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் இவரது வெளியீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

 

 

சிலம்புச் செல்வர் ம.பொசி. அவர்களால் எழுதப்பட்ட, விடுதலைப் போரில் தமிழகத்திற்கான பங்கு பற்றி ஆணித்தரமாகப் பேசும் வரலாற்று ஆவணமான “விடுதலைப்போரில் தமிழகம்” நூல் அதன் முக்கியத்துவம் கருதி, 1983 ல் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்டது. பூங்கொடி பதிப்பகம் இதுவரை ஏறத்தாழ 4000-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

 

1970-களில் பலம் பெற்று விளங்கிய தமிழ்நூல் வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் 1980-களில் செயலாளராக இருந்து தமிழ்ப் பதிப்புலகின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்திருக்கிறார். இன்றைக்கு பதிப்புத் துறையின் முதல் வரிசையிலுள்ள பதிப்பாளர்கள் பலர் தாங்கள் பதிப்புத்துறைக்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் இவர் தங்களுக்கு அளித்த ஆதரவை, அரவணைப்பை, தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உதவியதை இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.

 

1976 ஆம் ஆண்டுதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) பிறந்தது. அதற்குப் பிறகுதான் முதலாவது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கப்பட்டது. பபாசியின் முதல் புத்தகக் காட்சியிலிருந்து அதில் பங்குபெற்ற ஒரு சில பதிப்பகங்களுள் பூங்கொடி பதிப்பகமும் ஒன்று. ஆனால் அதற்கு முன்பே 70-களிலேயே தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் வலிமைபெற்ற அமைப்பாக இருந்தது. இந்த அமைப்பு தமிழ்ப் பதிப்பாளர்களின் நலனுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தது. அவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டது. அதன் மற்றொரு செயலாளரான மூவேந்தர் முத்துவும் இவரும் இணைந்து செயலாற்றியபோது இவர்கள் செய்த சாதனைகள் இன்றும் பதிப்பாளர்களால் பேசப்படுகின்றன.

 

சிறுவர் நூல்கள் அதிகம் வெளிவரவேண்டுமென்ற நோக்கத்துடன் பாடுபட்ட இந்த அமைப்பு அதற்கு வழி அமைத்துக் கொடுக்கும் விதமாக 1970-களில் ஆண்டுதோறும் தேசிய நூலக வாரத்தை பொது நூலக இயக்ககத்துடன் இணைந்து முன்னாள் பாரதப் பிரதமர் நேரு பிறந்த தினத்தையொட்டி (நவம்பர் 14 வாக்கில்) கொண்டாடி வந்தது. புத்தக வெளியீடு, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு, இலக்கிய சொற்பொழிவுகள் என்று 10 நாட்கள் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி மண்டபத்தில் புத்தகக்காட்சியுடன் அப்போது பெரும் விழா நடக்கும். சென்னைப் புத்தகக்காட்சிக்கு முன்னோடி இதுதான் என்றும் சொல்லலாம்.

 

இவரது 60 ஆண்டு இனிய இல்லற வாழ்வின் வெற்றிக்குச் சான்றாக இவருக்கு 3 மகன்கள். 3 மகள்கள். 6 பேரன்கள், 3 பெயர்த்திகள். இவரது இளைய மகன் சிவகுமார் பூங்கொடி பதிப்பக நிர்வாகத்தை இவருடன் இணைந்து நடத்தி வருகிறார். தன் பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொண்ட இவர், அந்தப் படிப்பறிவை, தொழில் செய்வதற்கும் இவர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இவரைத் தொடர்ந்து இவரிடம் பயிற்சி பெற்று, இவரது மூத்த மகன் புகழேந்தி சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷனை நடத்தி வருகிறார். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த புகழேந்தியினுடைய மகன் பொறியாளர் திரு. கார்த்திகேயனும் பதிப்புத் துறையிலேயே ஈடுபட்டுள்ளார். இரண்டாவது மகள் மீனா – அவரது கணவர் நல்லதம்பி, தம் மூத்த மகன் பொறியாளர் ஜெயேந்திரனுடன் இணைந்து கற்பகம் புத்தகாலயம் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். பொறியாளரான இரண்டாவது மகன் இளங்கோ இரயில்வேயில் பெரும்பொறுப்பில் உள்ளார். பொறியாளரான மூத்த மகள் சிவகாமி தன் கணவர் அமல்ராயுடன் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடைசி மகள் சாந்தி புனேவில் கணவர் – பொறியாளர் முத்துக்குமார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 

Watch Event Video :

 

Share