காலா – படம் எப்படி?

காலா – படம் எப்படி?

இயக்கம் : பா.ரஞ்சித்
நடிப்பு : ரஜினிகாந்த்
நானே படேகர்
ஈஸ்வரி ராவ்
ஹுமா குரேஷி
சமுத்திரக்கனி
மணிகண்டன்
திலீபன்
சம்பத்
அஞ்சலி பட்டில்
அருள்தாஸ்
ஒளிப்பதிவு : முரளி.G
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்
இசை : சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு : தனுஷ்
நீளம் : 166 நிமிடங்கள்

வளர்ச்சி என்கிற பெயரில் அபகரிக்கப்படும் குப்பத்து நிலைகளும், அதில் வாழும் மக்களுக்கான உரிமைகளையும் அழுத்தமாக பதிவிடும் திரைப்பதிவே ‘காலா’

கதைக்களம் : தாராவி நிலப்பரப்பை ஆக்கிரமிக்க பல வழியில் திட்டம்போடும் மூத்த அரசியல்வாதி ஹரிதேவி’ன் (நானா படேகர்) திட்டங்களை துவம்சம் செய்து, அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் முன்னாள் ரவுடி காலா (ரஜினி). இவர்களிடையில் நடைபெறும் பண்ணிப்போர், எப்படி மக்களையும், கலாவின் குடும்பத்தையும் பாதிக்கிறது?, இறுதியில் என்ன ஆனது? என்று நீண்டு விவரிக்கிறது திரைக்கதை.

பலம் …

+ ரஜினி : பல வருடங்கள் கழித்து ரஜினி, திரையில் ரசிகர்களுக்கான ஜனரஞ்சக ரஜினியாக மிளிர்கிறார். முதல்பாதி முழுக்க மாஸ், பிற்பாதியில் நடிப்பு என்று தனது ரசிகர்களுக்கு முழு விருந்தளித்து குஷி படுத்தி இருக்கிறார். இரண்டாம்பாதி போலீஸ் ஸ்டேஷன் காட்சி, தனது மனைவியை பற்றி மெழுகு வெளிச்சத்தில் உருகும் காட்சிகளில் நடிப்பால் மிரளவைக்கிறார்.

+ நானா படேகர் : கண்ணிலேயே மிரட்டி வில்லத்தனத்தை ஆழமாக பதிவிடுகிறார் நானே. இரண்டாம்பாதியில் இவரும் ரஜினியும் சந்திக்கும் காட்சிகள் சரவெடி. அண்மைக்கால அரசியல் வாதிகள் உடல்மொழி கொண்டு இவர் உச்சரிக்கும் வசனங்கள், ரசிகர்களையே கலங்கடிக்கிறது.

+ இசை : டைட்டில் கார்ட்’க்கு முன்னரே ஒலிக்கத்துவங்கும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, இறுதிவரை நம்மை கட்டிபோடுகிறது. தேவைக்கேற்றார் போல் இசையை அளவாகவும், ஆழமாகவும் கையாண்டிருப்பது சிறப்பு. கண்ணம்மா பாடல் மயங்கடிக்கிறது, மற்ற பாடல்கள் சுமார் ரகம்.

+ ஒளிப்பதிவு : தாராவியை வட்டமிடும் ‘ட்ரான்’ காட்சிகளிலும், வண்ணங்களை மைய்யமாக கொண்ட காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. காட்சிக்கேற்ப ஒளி அமைப்பிலும் அத்தனை நேர்த்தி.

படத்தொகுப்பு : பரபரப்பான காட்சிகளுக்கு வேகமாகமாகவும், எதார்த்த காட்சிகளுக்கு தன்மைக்கேற்றார் போல் கத்தரித்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத். பல காட்சிகளில், இவரின் வெட்டுகளுக்கேற்றாற்போல ஒலிக்கும் இசை அம்சம்.

பலவீனம் …

– இரண்டாம்பாதி : முதல்பாதியின் வேகத்தையும், ஏற்றிவைத்த எதிர்பார்ப்பையும் மொத்தமாக இறக்கிவைத்து மெதுவாக அசைபோட்டுக்கொண்டே நகரும் இரண்டாம்பாதி, மிகப்பெரிய பலவீனம்.

– காட்சி அமைப்புகள் : முதல் பாதி மாஸ் காட்சிகள் உட்பட, எல்லா காட்சிகளும் ‘எங்கேயோ பார்த்த’ ரகம். இடையிடையே வரும் செண்டிமெண்ட் காட்சிகள் சீக்கிரமே மறைந்துவிடுவதால், பெரிதாக ஒட்டவில்லை. கிளைமாக்ஸ் கலவரத்தின் முடிவில், காலா குடும்பத்தாரின் நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்தவில்லை.

ஹுமா குரேஷி – ரஜினி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிக்கும் ரகம், மறுமுனையில் ஈஸ்வரி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரமாதம். லெனின் கதாபாத்திரத்தில் மணிகண்டன் முத்திரை பதிக்கிறார். குடிகார நண்பராக சமுத்திரக்கனி, சுமார். தீபன், அருள்ராஜ், சம்பத், அஞ்சலி பட்டில், அருள்தாஸ் ஆகியோர் கதாபாத்திரங்கள் கச்சிதம். வசனங்கள் சுளீர் ரகம்.

அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் கிளைமாக்ஸ், வில்லன் பக்கத்தில் இருக்கும் ராமர் சிலை, அனிமேஷன்’னில் வரும் பழைய ரஜினி, வில்லன் போடும் ‘கிளீன் மும்பை’ திட்டம் என்று பல இடங்களில் மக்களின் குரலாக காலா ஒளிந்திருப்பது கூடுதல் சிறப்பு. இடைவேளை காட்சி நமக்கு கிளைமாக்ஸ் உணர்வை கொடுக்கிறது. கிளைமாக்ஸ், படமாக்களில் அசத்தி இருந்தாலும், ஒரு முழுமைபெறாத உணர்வையே நம்மிடையே விட்டு செல்கிறது.

மொத்தத்தில் : மெதுவாக செல்லும் இரண்டாம்பாதி, தெளிவில்லாத முடிவு என்று ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தால், மேலும் வலுபெற்றிருப்பான் காலா. இருப்பினும், படம் விவாதிக்கும் சில விஷயங்களுக்காகவும், முன்வைக்கும் அரசியலுக்காகவும் இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

மதிப்பீடு : 3 / 5 …

AVK SANTHOSH

Share