கவிஞர் ராஜசுந்தரராஜன் பார்வையில் அராத்துவின் ‘நள்ளிரவின் நடனங்கள்’

கவிஞர் ராஜசுந்தரராஜன் பார்வையில் அராத்துவின் ‘நள்ளிரவின் நடனங்கள்’

இது அராத்து எழுதிய சிறுகதைகள் பன்னிரண்டின் தொகைநூல்.

இப்படியா தொடங்குறது? இதுக்கான என்னோட மொழிநடையை முடிவுசெய்ய முடியவில்லை.

புத்தகத்தோட தலைப்பு, அப்பழுக்கற்ற தமிழ். உள்ளார உள்ள கதைகளோ, ஆனால் தமிழும் பேச்சுவழக்கு இங்லீஷும் (வழக்குல இருக்குற ஒன்னுரெண்டு வடசொற்களும்) கலந்த மணிமிடைபவள அல்லது மணிப்பிரவாள, மன்னிக்கணும், மணிக்கோரல்த் தமிழ். ப்ரவால: = கோரல் (coral).

நானோ தனித்தமிழ் (பெருஞ்சித்திரனாரின் “தென்மொழி” வாசித்து, எழுதிய) வழியில் வந்தவன். என்றாலும் கவிஞர் பிரமிள் அறிவுறுத்தியபடி, அங்கங்கே, பிறமொழிச் சொற்கள் பொருத்தமென்றால் பொருத்தவும் தயங்கியதில்லை. {எனது “அவரோகணம்” கவிதையில், ‘அமைதி’ தவிர்த்து, ‘நிசப்தம்’ இட்டிருக்கிறேன். (‘அமைதி’யில் வாய் மூடுவதில்லை, அல்லவா?)}. பிறகும், அராத்து-இன் ஆரம்பகால மொழிநடை என்னை எரிச்சல்ப்படுத்தியது.

இந்த இடத்தில், ஒரு வரலாறு அல்லது சதி:

அராத்து, தன் மனைவியும் குழந்தை ஆழியும் கூட வர, எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். (எங்கள் டாக்டரம்மாவைக் கண்டு, முகமறிந்து, பேசிய ஒன்றிரண்டு நட்புகளில் அவரும் ஒருவர்.) அவருடைய முதல் நூலுக்கு என்னிடம் முன்னுரை கேட்டார். “சாருவிடம் கேட்கலாமே?” என்றேன், தப்பிக்க. அவரானால் விடவில்லை. எழுதித் தந்தேன். எதிர்பார்த்தது போலவே அவர் சாரு நிவேதிதா எழுதிய முன்னுரையையே ஏற்றிருந்தார். அந்தப் புத்தகத்தை, அதன் வெளியீட்டுவிழா அரங்கில் நான், என்னிடம் e-காப்பி இருந்தாலும், விலைகொடுத்து வாங்கினேன்.

(இதே சதியை இன்னொருவர்க்கும் செய்திருக்கிறேன். ஆனால் அந்த எழுத்தாளர்/ பதிப்பாளர், நுண்ணுணர்வற்று, என் தனித்தமிழ் வல்லடியை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.)

ஆனால் இப்போது:

அராத்து-இன் மொழிநடை அவ்வளவுக்கு மோசமில்லை. “உரையாடலில் பிறமொழிச் சொற்கள் வரலாம்; விவரணையில், கூடியமட்டும், அது கூடாது,” என்று சாரு இவர்க்குச் சொன்னதை வாசித்த ஞாபகம். விவரணையில் ஏன் கூடாது? என்ன செய்வது, ஆகப் பழையதொரு மொழியில் எழுதவந்து சிக்கிக்கொண்டோம்! பாட்டிக்கு லிப்ஸ்டிக், இன்னும் நமக்குப் பழகவில்லை.

இத் தொகுப்பில், எனக்குப் பிடித்த கதைகளில் நம்பர் 1, “சிக்னல்”. அந்தக் கதை, முதல் முப்பத்தைந்து வரி எடுப்பின் (prelude) முடிவில், குழலி சிகரெட்டை எடுத்துப் பற்றவைப்பதிலேயே பிடித்துவிட்டது. பிறகு புனேயில் ரஞ்சனியைக் காணநேர்கிற கட்டம்! குழலி காரின் பின்சீட்டிலிருந்து முன்சீட்டுக்குத் தாவுவது! அப்பன் பரதனின் திகைப்பும் ஏலாமையும்!

பரதன் //கிதாரில் இழுத்துக்கட்டிய கம்பிபோல அமர்ந்திருந்தான்.// என்கிறது கதை. நானானால் காரின் கதவைத்திறந்து, ரஞ்சனி பின்னால் ஓடியிருப்பேன். ஆனால் அதற்குப் பெயர் லட்சியவாதம். இது இல்லாததுதான் கதையின் மிகமிகக் கசப்பான யதார்த்தம்.

இந்தக் கசப்பான யதார்த்தத்தை சுட்டுவனவாகவே அராத்தின் அத்தனை கதைகளும் இருக்கின்றன. இதை, பெரும்பாலும், நகைச்சுவையோடு சொல்கிறார்.

 

இந்த இடத்தில் ஒரு சந்தேக நிவர்த்தி:

நக்கலிலிருந்து நகைச்சுவை வருகிறது. ஆனால் நக்கலும் கிண்டலும் ஒன்றல்ல, வேறுவேறு. நக்கலோடு ‘நாக்கு’ சம்பந்தப்பட்டு இருக்கிறது. கிண்டலோடு கிணை. அது மருதவயல்களில் அண்டும் பறைவைகளை வெருவியோட ஓட்டும் பறை. எனவே, கிண்டலால் விளைவதைக் ‘கிணைச்சுவை’ என்கலாமா?

விமர்சனம் என்பது நகையா? கிணையா? எனக்கென்னவோ கிணை என்றுதான் தோன்றுகிறது. அராத்து-இன் அத்தனை கதைகளும் கிணைச்சுவையால் ஆனவை. ஆனால் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அதுதான் அவரோட அழகியல்.

இந்தக் கதைகளில் ஒன்றில், ஓர் ஆளில்லாத தீவில் (தீப்பெட்டிகூட நாமேதான் எடுத்துச்செல்ல வேண்டும்) ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். என்றால் இவையெல்லாம் சத்தியமா? இல்லை.

“இமையா” கதையிறுதியில், //பின்னாலேயே ஓடிவந்து, அந்த ராக்கெட்டால் மென்மையாகத் தட்டிவிட்டுச் சிரித்தபடியே இருந்தாள்.// என்பதில் உருவகப்படும் ‘ஷட்டில்’கள்தாம் நாம்.

“ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த கதைகள்” என்றொரு பத்திருபது கதைகளை வாசித்து இருக்கிறேன், ‘அமெரிக்கன் சென்டர்’ நூலகத்திலிருந்து எடுத்து. அதில் ஒரு கதை:

ஒருவன் தன் மனைவியைக் கொலை செய்து, தன் காரில் மறைத்து, யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்று கவனமாக காரோட்டிச் சென்று ஊருக்கு அப்பால் ஓர் இடத்தில் புதைத்துவிட்டுத் திரும்பி, மறுநாள், தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் தருகிறான். ஆனால், முதல்நாள் போக்குவரத்து விதிகளை மதித்துக் காரோட்டிச் சென்றவர் என்று, பரிசுக்காக, அவனுடைய கார் நம்பர் தரப்பட்டுச் செய்தி வெளியாகி இருக்கிறது. கதை இங்கேயே முடிகிறது.

அராத்துவின் “பீச் வியூ ஃப்ளாட்”, அப்படி, அதில் வரும் ‘ஆள்க்காட்டி’ச் சிக்கலோடு முடிக்கப்பட்டு இருந்தால் நல்லா யிருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு காதலை, அதன் நிறைவேறமுடியாத ஏக்கத்தை, சுட்டவிரும்பி கதை நீட்டப்படுகிறது. இது மிகை. இப்படியொரு ஏக்கம் “புக்கட்” கதையிலும் வருகிறது.

“ஃபேமிலி கேர்ல்” நீட்சி ஆனால் இப்படி இல்லை, ‘அபத்தம்’ (absurdity) பற்றியது. என்றாலும் அதுகூட ‘எக்செஸ்’தான்.

நான் படித்து அனுபவித்த கதைகள் இதில் பல. “அபாயம்” அவற்றில் ஒன்று. “ப்ளே கேர்ள் ப்ளே பாய்”; இன்னொன்று. மற்றொன்று, “பரந்த மனப்பான்மை”.

“அறம்” எனப்படுவது கடந்தகாலத்தால் நிகழ்காலத்தை அல்ல, நிகழ்காலத்தால் கடந்தகாலத்தை அளப்பது.

ராஜசுந்தரராஜன் ஆகிய நான், பழைமை திரிந்த இதுவே நிகழ் என்பதாக நிற்கிறேன். சாரு நிவேதிதா, ‘பழைமை X நிகழ்’ இவற்றின் ஒவ்வாமை மீது கோபப்படுகிறார். இது என் புரிதல். அராத்து, “இனி இப்படித்தான்; we are all hollow men,” என்கிறார்.

அத்தனையும் பகடி; நிகழ்வின் சாராம்சம்; ஆனால் ஒரு positiveness. அதுதான் அராத்து

– கவிஞர் ராஜசுந்தரராஜன்

 

Share