கோலி சோடா 2 – படம் எப்படி ?

கோலி சோடா 2 – படம் எப்படி ?

இயக்கம் : SD.விஜய் மில்டன்

நடிப்பு : வினோத்
பரத் சீனி
இசக்கி பரத்
சுபிக்க்ஷா
ரக்க்ஷிதா
கிரிஷா குரூப்
ரோகினி
ரேவதி
சமுத்திரக்கனி
செம்பன் வினோத்
சரவணா சுப்பைய்யா

ஒளிப்பதிவு : SD.விஜய் மில்டன்படத்தொகுப்பு : தீபக்
இசை : அச்சு ராஜாமணி
தயாரிப்பு : பரத் சீனி
நீளம் : 130 நிமிடங்கள்

 

கதை :
ஆதரவற்று இருக்கும் மூன்று இளைஞர்கள், வாழ்வில் முன்னேற வழி இருந்தும், தனக்கு தடையாக இருக்கும் மூன்று பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில், இவர்கள் மூவரும் ஒன்று சேர்கின்றனர், இவர்களின் எதிரிகளும் சந்தர்ப்பவசத்தால் சேர்கிறார்கள், பின்னர் நடப்பதே படத்தின் திரைக்கதை.

 

பலம் …

+ படத்தொகுப்பு : மூன்று பெரிய கதைகளை ஒன்றுசேர்த்து, 2 மணி நேர படமாக தொகுப்பது, சாதாரண விஷயமன்று. இடைவேளைக்கு கொண்டுசெல்லும் 20 நிமிட நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்தமைக்கு, படத்தொகுப்பாளர் தீபக்கிற்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. சம்பிரதாய காட்சிகளை தவிர்க்க, காட்சிக்கு இடையில் சேர்க்கப்பட்டிருக்கும் மின்னல் வேக வெட்டுக்கள் பாராட்டுக்குரியவை.

+ இடைவேளை : மூன்று வெவ்வேறு கதைகளாக தெரியும் காட்சிகளை ஒரே கதையாக கோர்க்க பட்டிருந்த விதம் ரசிகர்களை ஈர்க்க வல்லது.

+ இசை : அச்சு ராஜாமணியின் பின்னணி இசை சிறப்பு. பொண்டாட்டி பாடலும். அதை படமாக்கிய விதமும் மிகச்சிறப்பு.

பலவீனம் …

– இரண்டாம் பாதி : இடைவேளைக்கு பின் வரும் காட்சிகளில் செயற்கைத்தனம் தூக்கல். ஒரு கட்டத்திற்குமேல், தெலுகு சினிமா பார்ப்பதைப்போன்ற உணர்வை கொடுக்கிறது சண்டைக்காட்சிகள். கிளைமாக்ஸ் காட்சிகள் நம்பும்படியாக இல்லை.

– நடிகர்கள் தேர்வு : ரோகினி, ரேவதி, சமுத்திரக்கனி போன்ற சீனியர் நடிகர்கள் இருந்தும், அவர்களின் கதாபாத்திரங்கள் பலவீனமாக போக, பெரிதாக எடுபடாமல் போகிறார்கள். கவுரவ வேடத்தில் கவுதம் மேனன், படு பலவீனமான பாத்திரப்படைப்பு.

வினோத், பரத் சீனி, இசக்கி பரத் ஆகிய மூவரின் நடிப்பிலும் தெலுகு மசாலா வாடை தூக்கல். சுபிக்க்ஷா, ரக்க்ஷிதா மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரின் பங்களிப்பு நன்று. பக்கா ரவுடி வில்லனாக செம்பன் வினோத், அரசியல்வாதியாக சரவணா சுப்பைய்யா, ஜாதிக்காட்சி தலைவர் கதாபாத்திரம் என மூவரும் அவரவர் பங்கை செய்திருக்கிறார்கள்.

* மூன்று வில்லன்களும் சேரும் காரணம் சரிவர சொல்லப்படாதது.
* திரையில் அப்பட்டமாக தெரியும் டப்பிங் பிரச்சனைகள்.
* சண்டைக்காட்சிக்கு நடுவில் வரும் ஓவர்லேப் வசனங்கள்.
* ஒரு வரையறையின்றி இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லும் இரண்டாபாதி திரைக்கதை
– என்று படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். இருந்தும், வசனங்கள் அனைத்தும் ‘நறுக்’ வகை. மூன்று மாஸ் ஹீரோக்கள் ஒன்று சேந்து இழுக்கவேண்டிய தேரை, மூன்று பரிச்சயமில்லாத இளைஞர்களை வைத்து இழுக்க வைத்திருக்கிறார்கள். கோலிசோடாவின் முதல்பாகத்திற்கும் இப்படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும், முதல்பாகம் தந்த பிரமிப்பு ஈர்ப்பு ஆகியவற்றில் கால் பங்கு கூட தொடமுடியாத அளவுக்கே வந்துள்ளது இந்த கோலிசோடா.

மொத்தத்தில் : இரண்டாம்பாதியின் போக்கு, மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதீத நடிப்பு, பலவீனமான கதாபாத்திரங்கள் ஆகியவற்றை கவனித்திருந்தால், இன்னும் பலமாக பொங்கிஇருக்கும் இந்த கோலிசோடா.

மதிப்பீடு : 2.5 / 5 …

Santhosh AVK

Share