ஒரு குப்பைக்கதை – படம் எப்படி ?

ஒரு குப்பைக்கதை – படம் எப்படி ?

நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பது காளி ரங்கதாஸ். எப்போதோ எடுத்து முடித்த படம். ஆனால் தடைகளைத்தாண்டி தற்போதுதான் திரையை தொட்டுள்ளது. அசல் தயாரிப்பாளரிடமிருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது.

சென்னையில் குப்பை அள்ளும் தொழிலாளி குமார். கூவம் நதியோரம்தான் வசிப்பிடம். உண்மையை சொன்னால் பெண் கிடைக்காது என்பதால் பொய் சொல்லி மணம் முடிக்க வேண்டிய கட்டாயம். ஒவ்வாத சூழலைக்கண்டு அதிர்ச்சியாகும் மனைவி எடுக்கும் முடிவென்ன? அது எப்படி இருவரின் வாழ்வையும் திசைமாற்றுகிறது என்பதுதான் கதை.

திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல நடிப்பதற்கு சிரமப்பட்டுள்ளார் தினேஷ். சில இடங்களில் ஸ்கோர் செய்திருப்பினும் இன்னும் நிறைய ஹோம் ஒர்க் செய்திருக்கலாம். ஓவர் ஆக்டிங் செய்யாதது ஆறுதல். ‘வழக்கு எண் 18/9’ புகழ் மனிஷா யாதவ் ஆங்காங்கே நன்றாய் நடித்திருப்பினும், அதற்கிணையாக வேறு இடங்களில் தடுமாறியுள்ளார். இரண்டாம் பாதியில் படிந்திருக்கும் நாடகத்தன்மை இன்னொரு குறை.

இவற்றைத்தாண்டி இதில் உள்ள ப்ளஸ்கள்:

* நகைச்சுவை, வீண் பரபரப்பு, பிரச்சார வகுப்பு போன்ற இம்சைகளை மொத்தமாக குப்பையில் போட்டு விட்டு மையக்கதையில் மட்டுமே பயணிப்பது.

* முதல் பாடல் தவிர்த்து மற்றவை இடையூறாக இல்லாமல் மாண்டேஜ் காட்சிகளுடன் கதையை நகர்த்தியது. அதற்கு பக்கபலமாக இருந்த நா.முத்துக்குமாரின் வரிகள்.

* ‘என் புள்ளை இங்க பொறந்தா ***ன்னு கெட்ட வார்த்தை பேசித்தான் வளரும் என மனிஷா சொல்வது, ‘பாண்டிச்சேரியா?’ என கஸ்தூரி பாட்டி சிரிக்க வைப்பது, மனிஷாவிடம் தினேஷின் தாயார் மன்னிப்பு கேட்பது, மனிஷாவிற்கும் எதிர்வீட்டு நபருக்கும் இடையே துளிர்க்கும் ‘நட்பை’ இயல்பாக கடத்துவது.

* க்ளைமாக்ஸ்.

சாலச்சிறந்த படைப்பாக இல்லாவிடினும் கதையம்சம் உள்ள சீரியஸான படத்தை பார்க்க தயாராக இருப்போருக்கு இப்படம் குறைந்தபட்ச உத்திரவாத்தை தரும். கடந்த பத்தாண்டுகளாக இதுபோன்ற சீரியஸ் படங்களை எடுக்காமல் பெரும்பாலும் வெத்து நகைச்சுவை, தேவையற்ற பரபரப்பு காவியங்களை எடுத்தே பழகிய தமிழ் சினிமாவின் போதை மருந்து சப்ளைக்கு ஆட்படாமல் இருப்போர் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு காளி, செம போன்ற படங்கள் காத்திருக்கின்றன. நீங்கள் தயவு செய்து இதை தவிர்த்து விடுங்கள்.

பொதுவாக மலையாளப்படங்களில் மட்டுமே இப்படியான நேர்க்கோட்டு படைப்புகள் அவ்வப்போது வரும். அவற்றில் பெரும்பாலானவை சீரியஸ் வகைகள்தான். தமிழில் அதுபோல எப்போதோ ஒன்றிரண்டுதான் வரும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமல்ல. நம்மூர் மல்லிகையும் மணத்துடன் வந்துள்ளது. திரையில் இருந்து பறித்து விடுவதற்குள் முகர்ந்து பார்த்தல் நன்று.

நல்ல படத்தை தேர்வு செய்து வெளியிட்டுள்ள ரெட் ஜெயண்ட் உதயநிதி, தயாரிப்பாளர் அஸ்லாம், இயக்குனர் காளி ரங்கதாஸ், தினேஷ் மாஸ்டர் & டீம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

– AG.சிவகுமார்

Share