இரவுக்கு ஆயிரம் கண்கள் – படம் எப்படி?

இரவுக்கு ஆயிரம் கண்கள் – படம் எப்படி?

இயக்கம் : மு.மாறன்
நடிப்பு : அருள்நிதி
மஹிமா நம்பியார்
அஜ்மல்
ஆனந்தராஜ்
ஜான் விஜய்
சுஜா வருணி
ஆடுகளம் நரேன்
சாயா சிங்
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
இசை : சாம்.C.S
தயாரிப்பு : G.தில்லி பாபு
நீளம் : 121 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : ஒரு நள்ளிரவில் அரங்கேறும் கொலை சம்பவம், அதைசுற்றி நிகழும் ஒரு நாள் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை.


பலம் …

+ எழுத்து : ஒரு கொலை சம்பவத்திலிருந்து துவங்கும் கதையில், சிறு சிறு முடிச்சிகளாக கோர்த்து முன்பாதியை அலங்கரிக்க, அவற்றை அவிழ்க்கும் விதமாக பல்வேறு திருப்பங்களை கொண்டு பிற்பாதி பயணிக்க, ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத்தாளவில் ஒரு முழுநீள Hyperlink திரில்லராக வடிவமைக்கபப்ட்டுள்ளது.

+ படத்தொகுப்பு : ஒரு Hyperlink திரைக்கதையை குழப்பமில்லாமலும், ஆழமாகவும் சொல்ல முயற்சித்து இருக்கிறார் சான் லோகேஷ். கதை ஒருவரிடத்திலிருந்து மற்றொருவர் கண்ணோட்டத்திற்கு பயணிக்கும் இடங்களில் மிளிர்கிறார்.

+ இசை : ஒரு திரில்லர் படத்திற்குரிய தொனியில் மிகச்சரியாக அமர்கிறது சாம்.C.S’ஸின் பின்னணி இசை. ‘உயிர் உருவாத’ பாடல் காதுக்கு இனிமை.


பலவீனம் …

– படமாக்கல் : ‘இவ்வளவு ஆழமான கதையை இவ்வளவு அனாயசமாக கையாள்வதா??’ என்று ஆச்சரியவைக்கிறது படத்தின் படமாக்கல். இறுதிக்காட்சிகளில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேற, எந்த திருப்பமும் ரசிகர்களுக்கு பாதிக்காத வண்ணம் மெல்லிதாகவே நடைபோடும் திரைக்கதை, படத்தின் பெரும் பலவீனம்.

– நடிப்பு : படத்தில் உலாவும் 10 கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் செயற்கைத்தனமாக தெரிகிறது. ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், அஜ்மல் உட்பட சீனியர் நடிகர்கள் கூட அவ்வப்போது சொதப்புவது எரிச்சல்.

போலீஸ் சந்தேகிக்கக்கூடிய ஒரு நபர், சம்பவ வீட்டிற்குள்ளேயே அலேக்காக நுழைவதும், எல்லோரிடத்தில் சுதந்திரமாக வழக்கை விசாரிப்பது, கதைக்கு சம்பந்தமே இல்லாத எழுத்தாளர், திடீர் என முழுக்கதையும் ஒன்றுவிடாமல் ஒப்பிப்பது என லாஜிக் ஓட்டைகள் ஏராளமாக இருப்பினும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை ரசிகர்களின் மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்து, இறுதியில் ரசிகர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுப்பதுபோல், இறுதிக்கட்டத்தில் முழு கதையையும் மாற்றுவதே எல்லாம் வேற லெவல் புத்திசாலித்தனம். இருப்பினும், இயக்குனர் மு.மாறன் படமாக்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் : வலுவான கதையும், அதற்க்கு பக்கபலமாக திறமையான எழுத்து இருந்தும், படமாக்களில் சரிவு கண்டதால், சிறிது சரிவை காண்கிறது இந்த இரவுக்கு ஆயிரம் கண்கள். பார்த்தால் குத்தமில்லை ரகம்.

மதிப்பீடு : 2.5 / 5 …

Share