நாச்சியார் – படம் எப்படி ?

நாச்சியார் – படம் எப்படி ?

திரைக்கதை, இயக்கம் : பாலா

கதை : ராஜா

நடிப்பு : இவனா

ஜிவி. பிரகாஷ்

ஜோதிகா

Rockline வெங்கடேஷ்

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

படத்தொகுப்பு : சதிஷ் சூரியன்

இசை : இசைஞானி இளையராஜா

தயாரிப்பு : பாலா

நீளம் : 100 மினுடேஸ்ட்

 

கதைச்சுருக்கம் :

மைனர் பெண்ணான அரசி’யை (இவனா) கற்பழித்த வழக்கில் கைது செய்யப்படும் காத்தவராயன் (ஜிவி.பிரகாஷ்) தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படுகிறார். கர்ப்பிணியான அரசி’க்கு குழந்தை பெரும்வரை அடைக்கலம் தரும் காவல் அதிகாரி நாச்சியாருக்கு (ஜோதிகா), அரசியின் குழந்தைக்கு தந்தை காத்தவராயன் அல்ல என்று தெரியவர, பின்னர் நடக்கும் நிகழ்வுகளே திரைக்கதை.

 

பலம் . . .

+ கதாபாத்திரங்கள் : நாச்சியார், காத்து, அரசி என அனைத்து கதாபாத்திரங்களும் நன்று. ஜிவி.பிரகாஷ் திரையில் நடித்திருக்கும் முதல் படம் எனலாம். இவனா, பாராட்டத்தக்க நல்வரவு, இவரின் உடல்மொழியும், முகபாவனைகளும் அற்புதம். ஜோதிகாவின் பாத்திரப்படைப்பு நன்று என்றாலும், சில இடங்களில் செயற்கை. படம் நெடுக ஆங்காங்கே வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள், மனதில் நிற்கும் ரகம்.

 

+ ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் : கண்களுக்கு நெருடல் இல்லாத ஒரு Non-Linear படத்தை பார்த்த அனுபவத்தை தருகிறது, சதிஷ் சூர்யா’வின் படத்தொகுப்பு. திரையில் பளிச்சிடும் ‘தேனி’ ஈஸ்வரின் ஒளிப்பதிவு, சில இடங்களில் அட போட வைக்கிறது.

 

+ வசனங்கள் : மேல்தட்டு மக்களை சீண்டும் வசனத்தோடு சேர்த்து, ‘பெருமாளே பிச்சையெடுக்குது’, ‘மாட்டுக்கறி பிரியாணி எடுத்துட்டு வா’ , ‘கடவுளுக்கும் போர் அடிக்காதா?’, போன்ற அரசியல் மற்றும் நாத்திகம் சார்ந்த நையாண்டி வசனங்கள் நச்.

 

பலவீனம் . . .

-ஜோதிகா கதாபாத்திரம் : முதலில் நல்ல போலீஸ் அதிகாரியாக சித்தரிக்கப்படும் நாச்சியார் கதாபாத்திரம், விசாரிக்காமலேயே ஒருவரை அடிப்பது, ஸ்டார் ஹோட்டலில் ஜட்டியுடன் அடித்தபடியே குற்றவாளியை வாகனத்தில் ஏற்றுவது போன்ற காட்சிகளில் அவரின் கதாபாத்திரத்தின் முந்தயசெயலுக்கு நேர்மாறாக தெரிகிறது.

 

– இசை : வழக்கமாக பாலா படங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் இளையராஜா, இம்முறை வழக்கமான இசையை மட்டுமே வழங்கி இருக்கிறார். சேஸிங் காட்சிகளை தவிர, மற்ற இடங்களில் பின்னணி இசை சுமார்.

 

– முதல்பாதி : இடைவேளை வரை எந்த வித பாதிப்புமின்றி மெதுவாக நகரும் முதல்பாதி காட்சிகள், படத்திற்கு பலவீனம்.

 

ஜோதிகாவின் காவல்துறை உயரதிகாரியாக வரும் ‘Rockline’ வெங்கடேஷ், கவனிக்க வைக்கிறார். ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் ‘மீனாக்ஷி மிஷன்’ மருத்துவர் குருஷங்கர், சுவாரசியம். திரைக்கதையளவில், ஒரு குறும்படத்தின் கதையை நீட்டி முழக்கி 100 நிமிடங்களில் சொன்னதுபோன்ற தொய்வை பல இடங்களில் ஏற்படுத்தினாலும், கடைசீ 20 நிமிடங்கள் நன்று. கிளைமாக்ஸ் உட்பட, பல காட்சிகள் கணிக்கக்கூடிய விதத்திலேயே அமைந்திருப்பதால், உச்சகட்ட காட்சி என்று எதையும் வரையறுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை.

 

பாலா படத்துக்கே உரித்தான எந்த ஒரு பாதிப்பையும் நிகழ்த்தாத இப்படம், உங்களுக்கு பெரிதாக போர் அடிக்காது. நாச்சியார் கதாபாத்திரத்தை தவிர, வேறெந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.

 

மொத்தத்தில் :  பாலா படங்களை வெறுப்பவர்கள் கூட ஒரு முறை பார்க்கலாம் ரகம் இந்த நாச்சியார். இருப்பினும், அந்த trademark பாலாவின் முத்திரை மிஸ்ஸிங்.

 

மதிப்பீடு : 2.75 / 5 . . .

Share