கொடிவீரன் – படம் எப்படி ?

கொடிவீரன் – படம் எப்படி ?

இயக்கம் : முத்தைய்யா

நடிப்பு : சசிகுமார்

பசுபதி

விதார்த்

மஹிமா நம்பியார்

சனுஷா

பூர்ணா

பாலசரவணன்

விக்ரம் சுகுமாரன்

ஒளிப்பதிவு : SR.கதிர்

படத்தொகுப்பு : வெங்கட் ராஜன்

இசை : NR.ரகுநந்தனின்

தயாரிப்பு : சசிகுமார்

நீளம் : 154 நிமிடங்கள்.

 

கதைச்சுருக்கம் : ஊருக்கே குறிசொல்லும் சசிகுமார், ஆபத்திலிலிருந்த RDO அதிகாரி சுபாஷ் சந்திரபோஸின் (விதார்த்) உயிரை காப்பாற்றுகிறார். சுபாஷ் நடத்தும் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் சகோதரர்கள் வெள்ளைக்காரன் (பசுபதி) மற்றும் அதிகாரம் ஆகியோர் சுபாஷை பழிவாங்கக்காதிருக்க, கொடிவீரனின் தங்கை பார்வதி (சனுஷா), சுபாஷை மணமுடிகிறார். தன் மச்சானை காக்க நினைக்கும் கொடிவீரன், வெள்ளைக்காரனின் தந்திரங்களை எப்படி முறியடித்து சூழ்ச்சியை வெல்கிறான் என்பதே திரைக்கதை.

 

ஒரு பெரிய கதையை, நீளமான திரைக்கதையின் மூலம் கூற முயற்சித்து இருக்கிறார் முத்தைய்யா. துவக்க காட்சிகள் நம்மை சிறிது அதிரவைக்க, பின்னர்வரும் 40 நிமிட காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்களாகவே நகர, இடைவேளை காட்சிக்கு முன்னரே கதை சூடுபிடிக்கிறது. இடைவேளைக்கு பின்னர் வரும் பூனை-எலி விளையாட்டுகளும் வலுவிழந்து காணப்பட, சம்பிரதாய கடைசி கட்ட காட்சிகளோடு விடைபெறுகிறான் கொடிவீரன்.

 

பலம் . . .

+ சசிகுமார் : முதல்காட்சி முதல் முழுப்படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார் சசி. இடையில் தொய்வுறும் நிறைய காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிப்பதே இவரின் இருப்பு தான்.

 

+ கிராம வாழ்வியல் : மீன்பிடி திருவிழா, கல்யாணம், கிடாய் வெட்டு என்று அந்த கிராமத்து மக்களின் வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவருகிறார் முத்தைய்யா.

 

+ பசுபதி : பல காட்சிகளில் இவரின் வசனங்களை தாண்டி, முகபாவனைகளே அதிகம் பேசுகிறது. பூர்ணாவுடனான தங்கை-அண்ணன் காட்சிகளின் பல இடங்களில் இருவரது நடிப்பும் பாராட்டிற்குரியது.

 

பலவீனம் . . .

 

– திரைக்கதை : படம் துவங்கி 10 நிமிடத்தில் ஏற்படும் தொய்வு படம் முழுவதும் நீள்வது பெரும் சோகம். இடைவேளை உட்பட, சொற்ப காட்சிகளே நம் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருந்தாலும், பின்னர் வரும் சுமாரான காட்சிகள், நம் ஆர்வத்தை அடியோடு அழித்துவிடுகிறது.

 

– வசனங்கள் : ‘பதட்டத்தை காட்டுவேன், பயத்தை கூட்டுவேன்’, ‘எமன் சிவன்’ போன்ற எதுகை மோனை வசனங்கள் எரிச்சல். ஒரு ஒரு முறையும் வில்லனாக வரும் பசுபதி பேசும் 5 பக்க வசனங்கள், படத்தின் நீளத்தை கூட்ட மட்டுமே உதவுகிறது.

 

SR.கதிரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் மிளிர்கிறது, Slow-Motion காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கிறது. படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன், படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். படம் முடியும் தருவாயில் வரும் குத்துப்பாடல், படத்திற்கு பெரும் வேகத்தடை. பாடல்களும் அதற்கான placement’டும் சுமார். NR.ரகுநந்தனின் பின்னணி இசை இரைச்சல்.

 

சசிகுமாரின் தங்கையாக வரும் சனுஷா, காதலியாக வரும் மஹிமா இருவரும் சமமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பூர்ணாவின் கதாபாத்திர வடிவமைப்பு பலவீனம், கடைசீவரை இவர் முறைத்துக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென திருந்துவது எப்படி என்பது கடவுளுக்கே வெளிச்சம். RDO அதிகாரியாக விக்ராந்த் கனகச்சிதம், நடிப்பு சிறப்பு.

 

படத்தில் லாஜிக் கேள்விகள் பல இருப்பினும், பிடிப்பின்றி நகரும் திரைக்கதை ஏற்படுத்தும் தொய்வுகளில் அவை காணாமல் போய்விடுகின்றது. மக்களின் வாழ்வியலில் புதுமைகளை புகுத்தி, கதைக்களங்களில் வித்யாசம் காட்டிவரும் இயக்குனர் முத்தைய்யா, திரைக்கதையிலும், படமாக்களிலும் சிறிது புதுமைகளை கூட்டியிருந்தால், இந்த கொடிவீரன் சாதித்திருப்பான்.

 

மொத்தத்தில் : மெதுவாக நகரும் திரைக்கதை, அதீத வசனங்கள், Frame நிறையும் கதாபாத்திரங்கள், வலுவில்லாத நகைச்சுவை என்று தத்தளிக்கும் கொடிவீரனை, திரைக்கதையின் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், தூக்கி நிறுத்தியிருக்கலாம்.

 

மதிப்பீடு : 2.5 / 5 . . .

Santhosh AVK

Share