திருட்டுப்பயலே 2  – படம் எப்படி ?

திருட்டுப்பயலே 2 – படம் எப்படி ?

இயக்கம் : சுசி.கணேசன்

நடிப்பு : பாபி சிம்ஹா

பிரசன்னா

அமலாபால்

முத்துராமன்

சுசி.கணேசன்

ஒளிப்பதிவு : P.செல்லதுரை

படத்தொகுப்பு : ராஜா முஹம்மத்.

இசை : வித்யாசாகர்

தயாரிப்பு : கல்பாத்தி.S.அகோரம்

கல்பாத்தி.S. கணேஷ்

கல்பாத்தி.S. சுரேஷ்.

நீளம் : 150 நிமிடங்கள்.

‘பிறன்மனை நோக்கா….’, ‘ரகசியங்கள் ரகசியங்களாக பேணுதல் நல்லது’, போன்ற வரிகளை வலியுறுத்தி எழுதப்பட்ட திரைக்கதையின் திரைவடிவமே திருட்டுப்பயலே2.

 

கதைச்சுருக்கம் : உளவுத்துறை அதிகாரியான செல்வம் (பாபி சிம்ஹா), பெரும்புள்ளிகளின் தொலைபேசிப்பதிவை ஒட்டு கேக்கும்போழுது, முதலில் அழைப்புக்குரலாய் அறிமுகமாகும் பாலகிருஷ்ணன் (பிரசன்னா) என்கிற நபர், பின்னர் அவர் மனைவி அகல்யா (அமலாபால்) வழியே தன் வீட்டிற்க்கே பிரச்சனையாய் வர, பின்னர் நடக்கும் களேபரங்களின் தொகுப்பே திரைக்கதை.

 

மந்திரியின் பண பரிவர்த்தனை, உயரதிகாரிகளின் அழைப்பை ஒட்டுகேக்க சொல்லும் போலீஸ் அதிகாரி என்று ஆரம்பம் அதிரடியாய் தொடங்க, பின்னர் வரும் 45 நிமிட குடும்பக்காட்சிகளால் திரைக்கதை சிறுது துவண்டுபோனாலும், பின்னர் வரும் காட்சிகளில் சூடுபிடித்து, இடைவேளை வரை சீராக செல்கிறது. இடைவேளைக்கு பின் சராசரியாக செல்லும் திரைக்கதை இடையில் கொஞ்சம் வேகமெடுத்தாலும், சுவாரஸ்யமில்லாத இறுதிக்காட்சிகள் கதையை நிறைவுசெய்ய உதவி இருக்கிறது.

 

பலம் . . .

 

+ மூலக்கதை : சமகால  சமூகவலைத்தளங்களில் இருக்கும் ஆபத்துகளையும், செல்போன் கலாச்சாரத்தில் நிலவும் ரகசியமற்ற தன்மையையும் தோலுரித்துக்காட்டும் விதமாக அமைத்திருக்கும் மூலக்கதை படத்திற்கு முதன்மை பலம்.

 

+ கதாபாத்திர அமைப்பு : மூன்று முதன்மை கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், அதன் கதாபாத்திரத்தேர்வும் நன்று. குறிப்பாக, பொது போக்குவரத்தை மட்டுமே உபயோகித்து, மக்களோடு மக்களாய் இருக்கும் வில்லன் கதாபாத்திரம், கவனத்தை ஈர்க்கிறது.

 

+ ஒளிப்பதிவும் இசையும் : காவலர் குடியிருப்பை காட்டும் வான்வழி காட்சிகளும், சிக்கலான பொதுவெளியில் எடுக்கப்பட்ட காட்சிகளிலும் மிளிர்கிறது செல்லதுறையின் ஒளிப்பதிவு. முதலில் வரும் ஸ்மைலி பாடலை தவிர்த்து, மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணியில் ஒளிர்கிறார் வித்யாசாகர். நேரடி ஒலிப்பதிவில் பதியப்பட்ட வசனங்களும், அவற்றை கோர்த்த விதமும் அதன் ஒளிவடிவமைப்பும் அருமை.

 

பலவீனம் . . .

 

– இரண்டாம்பாதி : முதல்பாதியின் கடைசி 30 நிமிடங்கள் தந்த விறுவிறுப்பை, படிப்படியாக குறைந்துவிடுகிறது இரண்டாம்பாதி. அதுவும், வெளிநாட்டில் படமாக்கப்பட்ட இறுதிக்கட்ட காட்சிகள், தலையைச்சுற்றி மூக்கை தொட்ட உணர்வும்.

 

– படத்தொகுப்பு : காட்சிகளுக்கு இடையே தென்படும் வெட்டுக்கள், படத்தின் கோர்வையை வெகுவாக பாதிக்கிறது. கதைக்கு முக்கியமாக கருதப்படும் கிளைக்கதைகளின் காட்சிகள் கோர்க்கப்பட்ட விதம்  குழப்பம். இரண்டாம்பாதி திருப்பங்கள் அனைத்தும் காலம்தாண்டி சொல்லப்பட்டதாகவே தென்படுகிறது. படத்தொகுப்பாளர் ராஜா முஹம்மது, இதை கவனித்து இருக்கலாம்.

– மேலும், இடைவேளையில் சொல்லப்படும் Reverse Hacking வஸ்துக்கள் உட்பட, பல இடங்களில் லாஜிக் மீறல்கள் எட்டிப்பார்க்கிறது. ‘உனக்கு பலம் shoe boots, எனக்கு பலம் keypads’, போன்ற வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.

 

பாபி சிம்ஹா, பிரசன்னா, முத்துராமன், அமலாபால் உட்பட அனைவரும், அவர்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். கமிஷ்னர் அலுவலகம், பால்கி மற்றும் சேகரின் இல்லம் என பல இடங்களில் கலை இயக்குனரின் பங்கு சிறப்பு.

 

இரடாம்பதியில் வரும் மூன்றுபேர் சம்பந்தப்பட்ட வீடு காட்சிகள் உட்பட பல இடங்களில் இயக்குனர் சுசி கணேசனின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டாலும், இரண்டாம்பாதியில் ஏற்படும் தொய்வுகளால் அவை காணாமல் போய்விடுகிறது. முதல்பாகத்தில் இருந்த அழுத்தமும், தாக்கமும் இல்லையென்றாலும், இந்த திருட்டுப்பயலே கண்டிப்பாக கவனிக்கப்படவேண்டியவனே.

 

மொத்தத்தில் : இரண்டாம்பாதியின் தொய்வுகளையும், திரைக்கதையின் நிதான ஓட்டத்தையும் சிறிது பொறுத்தால், ஒருமுறை ரசிக்கலாம் இந்த திருட்டுப்பயலை.

மதிப்பீடு : 2.5 / 5 …

Santhosh AVK

 

Share