மொழிபெயர்ப்பில் விழுமியச்சிதைவு தடுக்கப்பட வேண்டும்!  – பெருமாள்முருகன்

மொழிபெயர்ப்பில் விழுமியச்சிதைவு தடுக்கப்பட வேண்டும்! – பெருமாள்முருகன்

மொழிபெயர்ப்பில் விழுமியச்சிதைவு தடுக்கப்பட வேண்டும்! அமெரிக்கப் பல்கலைகழகக் கருத்தரங்கில் எழுத்தாளர் பெருமாள்முருகன் பேச்சு!!
 

அமெரிக்காவின் பிரபலமான டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, தமிழ்ப்படைப்புகளின் மொழிபெயர்ப்பு குறித்தான கருத்தரங்கத்தில் தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர்கள் அண்ணாமலை, மார்த்தா ஷெல்பி, டேவிட் பக், எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், திலீப்குமார், அம்பை, அனிருத்தன் வாசுதேவன், கவிஞர் பெருந்தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பல அமர்வுகளில் கருத்துரைத்தனர்.

மொழிபெயர்ப்பின் போது பொருண்மைச்சிதைவு எவ்வாறெல்லாம் ஏற்படக்கூடும், அவற்றைத் தடுப்பதற்கான யோசனைகள் போன்றவற்றை சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அண்ணாமலை எடுத்துரைத்தார். தமிழ்ப்படைப்புகளில் இடம் பெறும் ஒலிக்குறிப்புகள், வழக்குத்தொடர்கள், அறநெறிக் குறிப்புகள் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டுகளை மேற்கோளிட்டு மொழிபெயர்ப்பின் போது அவற்றைக் கையாளும் முறைமைகள் குறித்து பேராசிரியர் டேவிட் பக் உரையாற்றினார். தொடர்ந்து பேசிய பெர்க்லி பல்கலைக்கழக அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், சங்கத்தமிழ் மொழிபெயர்ப்பில் இடம் பெற்ற பல முறைமைகளை விளக்கிப் பேசினார்.

பேராசிரியர் பிரீதாமணி அவர்கள், நவீன இலக்கியத்தில் மொழிபெயர்க்கவியலாத சிலவற்றையும் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை குறிப்பிட்டு மொழிபெயர்ப்பில் இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு செயலாற்றுவதற்கான சிந்தனைகளை ஊட்டினார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சாசா எப்லிங் அவர்கள், உரிய சான்றுகளுடன் தமிழ்ப்படைப்புலக மொழிபெயர்ப்பு வரலாற்றினை எடுத்துரைத்தார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பண்டித நடேச சாஸ்திரிகள், பம்மல் சம்மந்த முதலியார், வி.விஸ்வநாத பிள்ளை, சுப்ரமணிய பாரதி, புதுமைப்பித்தன், சி.சு.சில்லப்பா, தொ.மு.சிதம்பர ரகுநாதன், குட்டி இளவரசன் முதலானோரைக் காலவரிசை அடிப்படையில், மொழிபெயர்ப்பின் முன்னோடிகளாகக் காட்டினார்.

முதல்நாளின் கடைசி அமர்வாக, மார்த்தா செல்பி, எழுத்தாளர்கள் திலீப் குமார், அம்பை, பெருமாள்முருகன், அனிருத்தன் வாசுதேவன் ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடையளித்தனர். கலந்துரையாடலில், “என் அனுபவம்’, ‘எனது அனுபவம்’, ‘என்னுடைய அனுபவம்’ ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் இருக்கின்றனவா, இருக்கிறதென்றால் என்னவாக இருக்கமுடியும் போன்ற வினாக்களை எழுப்பி, உரிய மொழிபெயர்ப்பு முறைமைகளையும் குறிப்பிட்டுப் பேசினர்.

இரண்டாம்நாளின் முதல் அமர்வாக, எழுத்தாளர் பெருமாள்முருகனின் கருத்துரை இடம் பெற்றது. அவர்தம் பேச்சின் போது, சொற்களுக்குப் பின்னே தொக்கிநிற்கும் பண்பாட்டு விழுமியம், சமூகத்தின் மீதான தம் பார்வை, மங்கல அமங்கலச் சொற்களைக் கையாளும் முறை போன்றவற்றை விரிவாகப் பேசி, மொழிபெயர்ப்பின் போது சொற்களுக்குப் பின்னால் தொக்கிநிற்கும் விழுமியம் சிதைவடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென வலியுறுத்தினார். தமிழ்ப்பண்பாட்டு உடையான வேட்டி சட்டையில் தோன்றி, கொங்குத்தமிழில் அவர் பேசிய விதம் வந்திருந்தோரை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து கவிஞர் பெருந்தேவி, மார்த்தா செல்பி, ரெபாக்கா, முதலானோர் கண்மணி குணசேகரின் நாட்டுப்புற வழக்கு, அசோகமித்ரன் படைப்புகளில் இடம் பெற்ற உள்ளீடுகள் போன்றவற்றை எடுத்தாண்டு கருத்துரைத்தனர்.

பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் கடைசி அமர்வாக, ஜார்ஜ் ஹார்ட், அனிருத்தன் வாசுதேவன், பெருமாள்முருகன், திலீப் குமார், சாஷா எப்லிங், மார்த்தா செல்பி ஆகொயோர் தத்தம் படைப்புகளிலிருந்து சிலவற்றை வாசித்தனர். பெருமாள்முருகன் தனது சில கவிதைகளையும், தாம் இயற்றி இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா பாடிய விருத்தங்களையும் வாசித்துக் காட்டியமை பெரும் வரவேற்பைப் பெற்றது.

எழுத்தாளர் பெருமாள்முருகனின் இலக்கிய நண்பர்கள் அமெரிக்காவின் பல நகரங்களில் இருந்தும் வந்திருந்து வரவேற்றனர். அவர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பெரியாரின் தேவை, கொங்குச் சொல்லகராதியின் தேவை, புலம்பெயர் மண்ணில் தமிழ்க்கல்வியின் தேவை போன்றவற்றைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தமையும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.


 
Share