‘தேவி’ படம் எப்படி?

‘தேவி’ படம் எப்படி?

மும்பையில் வேலைசெய்யும் பிரபுதேவா பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. மும்பையில் வேலைசெய்வதால் அங்கு உள்ள மாடர்ன் பெண்ணை திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என நினைத்தவருக்கு கிராமத்து தமன்னாவை பிடிக்காமல் போக, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு அலுவலக பார்ட்டியில் தமன்னா மாடர்ன் நடிகை போல நடனம் ஆட, சிறப்பு விருந்தினராக வந்த சோனுசூதுவுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அடுத்த படத்திற்கு புக் செய்ய சொல்லி விடுகிறார். இதெல்லாம் பார்த்து அதிர்ந்த பிரபுதேவாவுக்கு பிறகு தான் தெரிகிறது புதிதாக வாடகைக்கு வந்த வீட்டில் ரூபி என்னும் பெண் சினிமாவுக்காக முயற்சி செய்து தற்கொலை செய்து கொண்டது எல்லாத்துக்கும் காரணம் என.
ரூபி தன் ஆசையை தேவி மூலம் அடைய நினைக்கிறார். ரூபியிடமிருந்து தேவியை காப்பாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போகவே, ரூபியிடம் ஒரு அக்ரிமெண்ட் போடுகிறார். ஒரு படம் நடித்ததும் தேவி உடலில் இருந்து போய்விட வேண்டும் என்று. அதன் படி வீட்டில் தேவியும், வெளியில் ரூபியுமாக பிரபுதேவாவின் வாழ்க்கை நகருகிறது.
இறுதியில் திரைப்படம் முடிந்ததா, சோனுசூதின் காதல் வென்றதா, தேவி மீண்டும் கிடைத்தாளா என்பதே மீதிக்கதை…
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டுவதை விட அசத்தியிருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தயாரிப்பு + நடிப்பு + நடனம் என பிரபுதேவாவின் எனர்ஜி லெவலை பார்க்கும் போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என தெரிகிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிங்க பிரபுதேவா சார் என்று சொல்லும் அளவுக்கு மனுஷன் ஆ(ட்)டிப்படைத்து விட்டார். டான்ஸ், காமெடி என கலக்குகிறார். அதிலும் தன் திருமணத்தை மறைக்க பிரபுதேவா செய்யும் வேலைகள் ரசிக்க வைக்கின்றது.
தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிந்தது, சொல்லப்போனால், படத்தின் உண்மையான ஹீரோ தமன்னா என்றே சொல்லி விடலாம், கிராமத்து பெண்ணாகவும் சரி, கிளாமரில் குதிக்கும்போதும் சரி மிரட்டியெடுத்துள்ளார், அதிலும் டான்ஸெல்லாம் பிரபுதேவாவிற்கே இணையாக முயற்சித்திருக்கிறார்.
ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்கிற்கு கவுண்டர் வசனங்களால் ஸ்கோர் செய்கிறார். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு காட்சி அமைப்புக்கள் அனைத்திலும் வட இந்தியா வாசனை அதிகமாகவே அடிக்கின்றது. அதனாலோ என்னவோ டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை, என்ன இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு பேய் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
Share