‘றெக்க’ – படம் எப்படி?

‘றெக்க’ – படம் எப்படி?

தமிழ் சினிமாவின் வழக்கமான அதே அதிரடி கதைக்களம் இந்த றெக்க… படத்தின் ஆரம்பத்திலேயே வில்லன்களான ஹரிஷ் உத்தமனிற்கும், கபீர் சிங்கும் இடையே ஒரு பகையோடு கதை தொடங்குகின்றது.

தன்னிடம் பிரச்சனை என்று வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி. அதற்கேற்றார் போல் வில்லனாக வரும் ஹரிஷ் கல்யாணம் செய்ய வேண்டிய பெண்ணை கடத்திவர இருவருக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது, ஒரு கட்டத்தில் ஹரிஷிடம் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்ள, அதிலிருந்து மீள முடியாமல் அவர் செய்ய சொல்லும் வேலையை செய்ய தொடங்குகிறார்.

பின்பு இருவருக்குமான பிரச்சனை தீர்ந்ததா ,எதற்காக அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார். லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது, ஹரிஷ் உத்தமன் எதற்காக விஜய் சேதுபதியிடம் அந்த வேலையை கொடுத்தார் என்பதுதான் மீதிக் கதை.

நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி இந்த ஆக்ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார். அதனாலேயே படம் முழுவதும் சண்டை காட்சிகள் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் அவரின் மாறுபட்ட நடிப்பும், சண்டை காட்சிகளில் வரும் பன்ச் டயலாக்குகளும் கை தட்டல்களை அள்ளுகிறது.

லட்சுமி மேனன் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியாவை போல வெகுளித்தனமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். மேக்கப்பில் இன்னும் சரியாக கவனம் செலுத்தியிருக்கலாம்.

விஜய் சேதுபதியின் அப்பாவாக கே.எஸ் .ரவிக்குமார், நண்பனாக சதிஷ், வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், இதுவரை ஒரு மாஸான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த கிஷோர் இந்த படத்தில் ஒரு அப்பாவியாக ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.

கண்ணம்மா பாடலைத்தவிர இமானின் பாடல்கள் அந்த அளவுக்கு பெரிதாக சொல்லும்படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டை கட்சிகளின் பின்னணி இசை பிண்ணி எடுக்கிறார்.

மொத்தத்தில் நல்ல கமர்ஷியல் படம்,விஜய் சேதுபதி வேறு விதமாக பார்க்கலாம், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். லாஜிக் மீறல்கள் பல இருந்தாலும் சில இடங்களில் கதை நன்றாக உள்ளது.

Share