‘முடிஞ்சா இவன புடி’ – படம் எப்படி?

‘முடிஞ்சா இவன புடி’ – படம் எப்படி?

நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் முடிஞ்சா இவன புடி… படம் எப்படி ? சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீட்டில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து வருகிறார்.

அதன்படி, பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் வீட்டில் புகுந்து, அவர் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தையெல்லாம் திருடிச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் புகார் அளிக்கமுடியவில்லை. இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக அந்த பணத்தை திருடியவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போலீசுக்கு ஒரு ரகசிய சி.டி. ஒன்று கிடைக்கிறது.

அதில் சுதீப் திருடிய பணத்தை நண்பர்களுடன் பங்கிட்டு கொள்ளும் காட்சி பதிவாகியிருக்கிறது. அதில் தெரியும் சுதீப்பை பார்க்கும் ஒரு கைதி, சுதீப் ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், மிகவும் நல்ல மனிதர் எனவும் அவருக்கு சர்டிபிகேட் கொடுக்கிறார்.

mudinja-ivane11

இதையடுத்து, சுதீப்பை கைது செய்யும் போலீசார், அவரை அடித்து உதைத்து விசாரிக்கின்றனர். அப்போது, சுதீப் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லையென்றும், தனது அண்ணன் என்றும், தான் ஒரு அப்பாவி என்றும் கூறுகிறார். இதனால் குழப்பமடைந்த போலீஸ் அவரை விடுதலை செய்கிறது.

இதையடுத்து, மற்றொரு தொழிலதிபரான சரத்லோகித்சவாவின் வீட்டிலும் கறுப்பு பணம் கொள்ளை போகிறது. இதற்கு காரணமும் சுதீப்தான் என்று முறையிட, போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், கோபமடைந்த முகேஷ் திவாரியும், சரத் லோகித்சவாவும் கொள்ளைபோன தங்களது பணத்தை தாங்களே மீட்டெடுக்க நினைக்கிறார்கள்.

இறுதியில், அந்த கறுப்பு பணத்தையெல்லாம் சுதீப்பிடம் இருந்து மீட்டார்களா? உண்மையில் இந்த கொள்ளைகளுக்கெல்லாம் காரணம் யார்? என்பதை விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள்.

நாயகன் சுதீப் படத்தின் கதையை பலமாக தாங்கி நிற்கிறார். அப்பாவித்தனம், அடிதடி என இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வரவழைத்து அசர வைத்திருக்கிறார்.

ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படு ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.

mudinja-ivane33

நித்யா மேனன், அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதித்துள்ளார்கள்.

பிரகாஷ்ராஜ் தந்தையாக தனித்து நிற்கிறார். சதீஷின் டைமிங் காமெடி நகைச்சுவைக்கு கைகொடுக்கிறது. வில்லன்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்த்வா இருவரும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார்கள். போலீஸாக வரும் சாய் ரவி மிரட்டலும் காமெடியும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரது பழைய படமான ‘வில்லன்’ படத்தின் சாயல் தெரிகிறதே தவிர, மற்றபடி, படத்தை இயக்கிய விதம் மிகவும் அருமை.

படத்தில் காமெடி டிராக் என்று எதுவுமே வைக்காமல், ஹீரோவை வைத்தே காமெடி டிராக்கை உருவாக்குவதில் இவருக்கு நிகர் இவர்தான்.

இமான் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடாவிட்டாலும், பின்னணி இசை அதிரடி காட்டியிருக்கிறது. ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அபாரம்.

Share