தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் – படம் எப்படி?

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் – படம் எப்படி?

பிரபு தேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’

இந்தப் படத்தில்  ஜெய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை யாமினி கௌதம் நடித்துள்ளார். அதற்கு இணையாக சந்தானமும், வி.டி.வி. கணேஷும் நடிக்கும் ரகளையான  நகைச்சுவையும் படத்துக்கு மிக சிறந்த பலம்.
தனக்கு எந்த வேலையும் பிடிக்காத ஜெய் தன் அக்கா மாமாவுடன் வாழ்கிறார். ஒரு நாள் சந்தானத்திற்கு பதிலாக கொரியர் போட செல்லும் போது யாமி கௌதமை கண்டு காதல் கொள்கிறார். பின் காதலுக்காக கொரியர் பாய் வேலைக்கு செல்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கர்பிணிப்பெண்களை பரிசோதனைக்காக மறைமுகமாக மருந்துகள் மூலம் கருக்கலைப்பு செய்யும் கும்பல் பற்றிய விபரங்கள் வார்டுபாய் தம்பி ராமையாவுக்கு தெரிய வர, சமூக ஆர்வலரான நாசருக்கு மருந்துகள் சம்பந்தப்பட்ட விபரங்களை கொரியர் செய்கிறார். இது வில்லன் கும்பலுக்கு தெரியவர, கொரியர் கொடுக்க வரும் ஜெய் மீது வில்லன் கண்கள் பாய்கிறது.
ஜெய்க்கு உண்மை தெரியவர எப்படி அந்த கும்பலிடமிருந்து தப்பித்தார், யாமி கௌதமை கைப்பிடித்தாரா என்பது மீதிக்கதை…
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘கொரியர் பாய் கல்யான்’ ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில் இதன் தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது.  இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய சிறிய படமாக இருந்தாலும் படத்தின் வேகம் படத்தின் இறுதியில் மட்டுமே சூடுபிடிப்பது படத்தின் மிகப்பெரும் துயரம். இருப்பினும் மருந்துகள் மூலம் நடக்கும் “பயோ வார்”  (உதாரணம் “ஈ” திரைப்படம்) போன்ற இன்றைய சமூகத்திற்கு தேவையான அம்சங்கள் படத்தில் இருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று…
படத்தின் ஒரு காட்சியில் வில்லன் கூறுவார் “வெளிநாடுகளில் பரிசோதனைக்கு சிலரை உட்படுத்தினேன். ஆனால் அங்கே எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அதனால் அங்கு பரிசோதனை செய்வது கடினம். இந்தியா பொன்ற நாடுகளில் மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வும் அறிவும் கிடையாது. அதனால் எளிமையாக பரிசோதிக்கலாம்”. உண்மையில் மருத்துவத்தை பொருத்தவரை இந்தியர்களின் அறிவு அவ்வளவு தான்.
சிறு தலைவலி என்றாலே மருத்துவரை அணுகும் இக்காலத்தில் மருந்துகளுக்குள் நடக்கும் கலப்படங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டியது கட்டாயம். நாம் சாப்பிடும் மாத்திரைகள் என்ன, எதற்காக் சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வொடு இருந்தால் பின் வரும் தலைமுறைகளாவது காப்பாற்றப்படும்.
Share