உலகின் முதல் உள்ளாடை உருவான கதை

உலகின் முதல் உள்ளாடை உருவான கதை

ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும். அது நல்லதல்ல, மீண்டும் சொல்கிறேன். அந்த மரத்து கனிகளை மட்டும் எடுத்து உண்ணாதீர்கள்”

கடவுள் சொன்னதில் ‘சராசரி மனிதர்’ என்ற வார்த்தைக்கு மட்டும் ஏவாளுக்கு இன்னமும் அர்த்தம் புரியவில்லை. ஆதாமுக்கு இதுகுறித்த எந்த பிரக்ஞையும் இல்லை. கடவுள் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்கிறான். யோசனையுடன் நடந்தாள் ஏவாள்.

“ஏவாள். உங்களை நீங்களே எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?” புதரிலிருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் ஆளில்லை ஒரு அரவம் மட்டும் புதருக்குள்ளிருந்து வெளிவந்தது.

“நீ எந்த வகையிலான உயிரி? இதுவரை உன்னை பார்த்ததில்லையே?”

“என் பெயர் சாத்தான். கடவுளுக்கு நிகரான சக்தி படைத்தவன்”

“அப்படியா? வணக்கம். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆதாமும் உன்னை சந்தித்தால் மகிழ்ச்சியடைவான்!”

“ஒரு நிமிடம். ஆதாம் ஒரு முட்டாள், உன்னைப்போல அவன் புத்திசாலி இல்லை. நான் சொல்லுவதை உன்னால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்!”

ஆதாமை முட்டாள் என்றதுமே ஏவாளுக்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி சொல். என்ன சொல்லப்போகிறாய்?”

“ஆப்பிள் மரத்தில் இருந்து கனிகளை பறித்து உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னானில்லையா? அது ஏனென்று தெரியுமா?”

“தெரியாது!”

“இப்போது நீங்கள் கடவுளின் அடிமையாக இருக்கிறீர்கள். அந்த கனியை உண்டால் என்னைப் போல நீங்களும் சுதந்திர உயிர்களாக பரிமாணம் பெற்றுவிடுவீர்கள். உங்களுக்கு வெட்கம், கோபம், சூடு, சொரணை என்று எல்லா உணர்ச்சிகளும் வந்துவிடும். நீங்களும் கடவுளுக்கும், எனக்கும் இணையான சக்தி பெற்றுவிடுவீர்கள்!”

“அப்படியா? நீங்கள் சொன்ன உணர்வுகள் இல்லாமலேயே வாழ்வது சாத்தியமில்லையா?”

“சாத்தியமில்லை. இப்படியே எவ்வளவு நாட்களுக்கு நீயும், ஆதாமும் செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆதாமை காதலிக்கும் எண்ணமே உனக்கு இல்லையா?”

”காதலா? அப்படியென்றால்?”

”அண்டத்தில் இருக்கும் உணர்வுகளிலேயே புனிதமான உணர்வு. இது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சியை யாராலும் தர இயலாது”

“காதல் உணர்வை அடைய நானென்ன செய்யவேண்டும்?”

“அந்த மரத்திலிருந்து ஆப்பிள் கனியை பறித்து உண்ணவேண்டும்”

ஏற்கனவே ஏவாளுக்கு அந்த கனியை உண்டால் என்ன என்ற எண்ணம் இருந்தது. அரவத்துடன் பேசிய பின்னர் காதல் உணர்வை அடையவேண்டுமென்ற ஆவலும் அதிகரித்தது. அம்மரத்தின் கனிகளை பறித்து உண்ண ஆதாமை வற்புறுத்தினாள்.

“வேண்டாம் ஏவாள். கடவுள் தான் நம்மை படைத்தார். அவர் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டும்”

“கடவுள் நம்மை அவர் விளையாடும் பொம்மைகளாக தான் படைத்திருக்கிறார். காதல் உணர்வு உனக்கு வேண்டாமா ஆதாம்!”

“காதல் உணர்வா? அப்படியென்றால்?”

“கனியை பறித்து தின்போம். அதன் பின்னர் புரியும்!”

அரைகுறை மனதோடு ஆதாம் சம்மதித்தான். ஒரு கனியை பறித்து ஏவாளிடம் தந்தான். அவள் பாதி கடித்து தந்ததுமே இவன் மீதியை கடித்தான். உடனடியாக அவர்களுக்கு காதல் உணர்வு வரவில்லை. இதுவரை ஏவாளை சக உயிரியாக மட்டுமே பார்த்த ஆதாம் அவளை பெண்ணாக கண்டான். அவள் எதிரில் தான் ஆடையில்லாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டான். இதே நிலைதான் ஏவாளுக்கும், ஆதாமை விட அதிகமாய் வெட்கப்பட்டாள்.

ஆதாம் சில ஆப்பிள் இலைகளை பறித்து ஏவாளிடம் தந்தான், தானும் சில இலைகளை பறித்துக் கொண்டான். தங்களது அந்தரங்கப் பகுதிகளை ஆப்பிள் இலைகளால் மறைத்துக் கொண்டார்கள் இருவரும். உலகின் முதல் ஜட்டி ஆப்பிள் இலைகளால் உருவானது.

– லக்கி யுவா

Share