24 படம் எப்படி ?

24 படம் எப்படி ?

1990இல் மேகமலையில் இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் தம்பியான சையின்டிஸ்ட் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக்கடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். அந்த கடிகாரத்தை அடைய ஆத்ரேயா (அண்ணன் சூர்யா) தம்பி சூர்யாவையும் அவரது குடும்பத்தையும், குழந்தையையும் அழிக்க முற்பட, தப்பிய தம்பி சூர்யா தன் குழந்தையையும் அந்த கடிகாரத்தையும் ரயிலில் பயணிக்கும் சரண்யாவிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணனிடமே உயிர் துறக்கிறார். குண்டு வெடிக்கப் போகிறது என நினைத்து அதே ரயிலிலிருந்து குதிக்கும் ஆத்ரேயா, அடிபட்டு கோமாவில் மூழ்கிவிடுகிறார்.

26 ஆண்டுகள் கழித்து குழந்தை வளர்ந்து ஆளாகி பெரிய சூர்யாவாகிறது (மணி). சென்னையில், கைக்கடிகாரங்களை பழுதுபார்க்கும் கடைவைத்திருக்கிறார். அந்தக் கடிகாரத்துக்கான சாவி தற்செயலாக மணியிடம் வந்து சேர, அது காலத்தை முன்னுக்கும் பின்னுக்குமாக நகர்த்தும் அற்புத டைம் மெஷின் என்பதை உணர்கிறார்.
 
இதே வேளையில், கோமாவிலிருந்த ஆத்ரேயாவுக்கு உணர்வு வருகிறது. தான் கோமாவில் மூழ்கிய 26 ஆண்டுகளை திரும்பப் பெற அந்த கடிகாரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். எல்லாம் பயனற்று போக செய்தித்தாளில் விளம்பரம் செய்கிறார். கடிகார விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடையும் மணி, ஆத்ரேயாவை சந்திக்க முற்படுகையில் தன் முழு விபரத்தையும் தெரிந்து கொள்கிறார்.
டைம்மிஷின் உதவியுடன் ஆத்ரேயாவை பழி தீர்த்ததாரா? இழந்த பெற்றோரை கடந்தகாலத்திற்கு சென்று மீட்டெடுத்ததாரா? அல்லது, ஆத்ரேயா சூர்யாவை முந்திக் கொண்டு தம்பியின் டைம் மிஷினை கைப்பற்றினார்களா என்பதே மீதிக்கதை…
இயக்கம் விக்ரம்குமார்:
தமிழ் சினிமாவின் சுதந்திரம் என்பது பலூனில் அடைக்கப்பட்ட காற்றின் அளவு என்பதற்கு இந்தப்படம் மீண்டும் ஒரு உதாரணம். டைம் மெஷின் கான்சப்ட், ஏ.ஆர். ரகுமான், சூர்யா, தமன்னா, ஒளிப்பதிவாளர் திரு என இத்தனை பேரை வைத்துக்கொண்டு இன்னும் அதே பழைய தமிழ் சினிமாவின் அரதப்பழசான பழிக்குப்பழி ரத்ததுக்கு ரத்தம் வகையில் படம் எடுத்துக்கொண்டு இருப்பது வேதனை. டைம் மெஷின் கான்சப்டை வைத்து எத்தனையோ வகையில் கதைகளை வடிவமைக்கலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு அதையே காதலுக்கு பயன்படுத்துவது. அண்ணன் தம்பி சண்டைக்கு வைத்து பழைய அதே தமிழ்சினிமாவை திணித்தது படுவேதனை. முக்கியமாக படம் முழுதுமே கடிகார்த்தை வைத்து இறந்தகாலம் மட்டுமே செல்கின்றனர். ஒரு காட்சியில் மட்டுமே பெயருக்கு இருக்கும். (மழை பெய்யும் காட்சி) முன்னோக்கி செல்வதாக வைத்து எத்தனையோ கிளைக்கதைகளை இடைசொறுகலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக டைம்மிஷின் கான்சப்ட், இறந்தகாலத்துக்கு சென்று இழந்ததை மீட்டெடுப்பது இது போன்ற விஷயங்கள் ”பாலாபிஷேகம்” செய்யும் சாதாரண ரசிகர்களை, நடுத்தர குடும்பங்களை சென்றடையுமா என்பது சந்தேகம்.
சூர்யா: 
சைன்டிஸ் அப்பாவாக, வாட்ச் மெக்கானிக் மணியாக, ஆத்ரேயா எனும் வில்லனாக அசத்தியிருக்கிறார். ஆனால் பல இடங்களில் நாம் பார்த்து அலுத்துப்போன அதே டெம்ப்ளேட் நடிப்பு. மூன்று பேரில் ஒரே ஆறுதல் ஆத்ரேயா மட்டுமே. நாற்காலியில் அமர்ந்த படியே கண்களில் கொடுரத்தை உமிழும் வில்லத்தனம் அற்புதம்.
கதாநாயகி சமந்தா சமத்தா வருகிறார், போகிறார், ஆடுகிறார், பாடுகிறார், அவ்வளவுதான்.
மற்றொரு நாயகி நித்யா மேனன் கொஞ்சம் நேரமே வந்து போனாலும்திருப்தி.
 
எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு :
படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. முக்கியமாக ஆரம்ப காட்சிகளில் மழை துளிகளை பிரீஸ் செய்வது. ஆய்வுக்கூடம், பாடல்களில் வரும் இடங்கள்.
ஏ.ஆர். ரகுமான் :
இன்னொரு ஹீரோவாக இருந்திருக்க வேண்டிய ஏ ஆர் ரஹ்மான் பெரிதாக சோபிக்கவில்லை. பாடல்கள் ஓக்கே ரகம். முக்கியமாக ”காலம் என் காதலி” மற்றும் “நான் உன் அருகினிலே”  இந்த இரண்டு பாடல்கள்.
2.40 மணி நேரம் படம் ஓடுகிறது. தேய்ந்து போனா காதல் காட்சிகளில் சிலவற்றுக்குக் கத்தரி போட்டிருக்கலாம். என்னதான் இருந்தாலும் ஒரு முயற்சியின் அடிப்படையில் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம் 24.
24 படத்தின் ரசிகர்கள் கருத்து ஸ்ருதி.டிவியின் வீடியோ:
https://www.youtube.com/watch?v=PBxzDAnpE78
Share