Actor Sivakumar tribute to Samrat D.Ramanaidu

Actor Sivakumar tribute to Samrat D.Ramanaidu

D.ராமாநாயுடு அவர்களுக்கு நடிகர் திரு.சிவகுமார் செலுத்தியுள்ள அஞ்சலி

2015 – பிப்ரவரி 18-ந்தேதி தயாரிப்பாளர்களின் ‘சாம்ராட்’ டி.ராமாநாயுடு 78 வயதில் மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் 150 க்குள் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர். தனிமனிதனாக அதிகப்படங்களைத் தயாரித்து கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்தவர். 2009 -ல் தாதா சாகேப் பால்கே விருது; 2012 – ல் பத்மபூஷண் விருது பெற்றவர். 1999 முதல் 2004 வரை மத்திய பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்.1991-ல் அறக்கட்டளை நிறுவி ஏழை எளியவர்களுக்கு கல்வி, சுகாதார வசதி செய்து கொடுத்தவர்.

ஆந்திரர்கள் எல்லோரும் மௌரிய வாரிசுகள் என்பதால் இவரும் 6 அடி தாண்டிய நெடிய உருவம். கம்பீரமான தோற்றம்…..
வெள்ளை டி சர்ட்,வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூஸ், கருப்பு கண்ணாடி- இவரது அடையாளம்… கலைந்த தலைமுடி, கசங்கிய சட்டை, வியர்வை முகத்துடன் இவரை இறைவனே பார்த்திருக்க முடியாது என்று சொல்லலாம். தீட்சண்யமான கண்கள், வெள்ளை மனம், பதட்டமில்லாத சுபாவம். தூய்மையின் அடையாளம் .. இவர் கோபத்துடன் இரைந்து பேசி யாரும் பார்த்திருக்க முடியாது.

1964-ல் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் துவக்கி தயாரித்த முதல் தெலுங்குப் படம் ‘ராமுடு பீமுடு’ அதிரடி வெற்றி…
வாகினி நாகிரெட்டியாரோடு இணைந்து, விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்த ‘ வசந்த மாளிகை’ – சிவாஜி, வாணிஶ்ரீ நடிப்பில் ஒரு மைல் கல்..

1974-ல் செல்வி ஜெயலலிதா அவர்களின் 100-வது படம்”திருமாங்கல்யம் “- இவர் தயாரிப்பு.
ஒளிப்பதிவு -மேதை மார்க்கஸ் பார்ட்லே… இயக்கம் ஏ. வின்சன்ட்..முத்துராமன் அவர்களும் நானும் இரண்டு ஹீரோக்கள்….
படப்பிடிப்புத் தளத்துக்கு அருகில் கொட்டகை போட்டு, சுடச்சுட பொங்கல் , வடை, பூரி கிழங்கு, ஊத்தப்பம்- பகல் உணவில் ஆடு, கோழி, காடை, கவுதாரி என ராஜ விருந்துதான் தினமும் … இதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு பிற்பகல் படப்பிடிப்பில் உண்ட களைப்பில் நடிகர்கள் நெளிவதைப் பார்த்து அப்படி ரசிப்பார் நாயுடு..

ஓராண்டு முன் ராமாநாயுடு பேத்தி திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.. சூர்யா, கார்த்தியுடன் நானும் ஹைதராபாத் சென்றிருந்தேன்.. ‘ முதலாளீ ‘- என்ற என் குரல் கேட்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டார் .. தமிழ் சினிமாவின் ” கோல்ன் டேஸ்” மனிதர்கள் மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை…..

சிவகுமார்

Share