தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மனோரமா

தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மனோரமா

10/10/2015 நள்ளிரவு 11.30 மணிக்கு திடீர் மாரடைப்பால் காலமான பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவின் உடல் இன்று மாலை 4 மணிக்கு மயிலாப்பூர் இடுகாட்டில் தகனம் செய்யப்படவுள்ளது. தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ் பெற்ற நடிகை ஆவார். தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியதுதான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒரு நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1937-ம் ஆண்டு மே 26-ம் நாள் மன்னார்குடியில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனை காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடி பெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப் படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப் படிப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.

ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரமாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.

அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரனின் எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் அவர் சேர்ந்த பின்பு அவரது நாடக வாழ்க்கை பிரகாசித்தது. அந்தக் குழு சார்பில் நடத்தப்பட்ட ‘மணிமகுடம்’ என்கிற நாடகத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அவரது நடிப்புத் திறன் கலை உலகில் வெளிச்சத்துக்கு வந்தது.

அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடி வந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன் கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார்.

இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.

1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்றுவரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார்.

இன்னும் சொல்லப் போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒரேயொரு நடிகை மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இது மட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்தபொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.

1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.

2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளார்.

மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.

கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.

‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.

சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’,

‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, பெற்றிருக்கிறார்.

சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும்தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனை படைக்க முடியும் என்று நிரூபித்தவர் மனோரமாதான்.

திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

குறிப்பாக சொல்லப் போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறைவரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

Share