லிங்கா விநியோகஸ்தர்களுக்கு புதிய படம் நடிக்க கால்ஷீட் தருவதாக ரஜினி சொல்லவே இல்லை…

லிங்கா விநியோகஸ்தர்களுக்கு புதிய படம் நடிக்க கால்ஷீட் தருவதாக ரஜினி சொல்லவே இல்லை…

“லிங்கா விநியோகஸ்தர்களுக்கு புதிய படம் நடிக்க கால்ஷீட் தருவதாக ரஜினி சொல்லவே இல்லை…” – விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பதில்..!

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈடு பிரச்சினை இன்னமும் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 4 நாட்களாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும்விதமாக இந்தப் பிரச்சினையில் மீடியேட்டராக இருந்த கோவை ஏரியாவின் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சென்னை பிலிம் சேம்பரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் நிருபர்களிடையே பேசிய போது…

”லிங்கா’ பட விவகாரம் திரும்பத் திரும்ப மீடியாக்களில் பேசப்படுவதால் அது பற்றிய முழு விஷயங்களையும் தெரியப்படுத்தவே இந்த பிரஸ்மீட்டை ஏற்பாடு செஞ்சிருக்கோம்.

ஒரு நாள் நான் சென்னையில் இருந்தபோது ரஜினி ஸார் எனக்கு போன் செஞ்சார். ‘எங்க இருக்கீங்க?’ன்னு கேட்டார். ‘சென்னைலதான் ஸார்…’ என்றேன். ‘நீங்க வாங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்’னார். நானும் போனேன். என்கிட்ட ரஜினி ஸார் ‘என்ன இது? விநியோகஸ்தர்கள் இந்த மாதிரில்லாம் பேசிக்கிட்டிருக்காங்க.. செஞ்சுக்கிட்டிருக்காங்க. இது எந்த வகையில நியாயம்?’ன்னு கேட்டார்..

‘ஸார்.. எங்க பெடரேஷன்ல இருந்து நாங்க எதையும் செய்யலை.. சொல்லலை. எங்ககிட்ட வந்து கேட்டாங்க. எங்களால இந்த விஷயத்துல எதுவும் செய்ய முடியாது. நீங்களே ஸார்கிட்ட தன்மையா பேசி முடிச்சுக்குங்கன்னு சொல்லிட்டோம். பெடரேஷனுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை’ன்னு சொன்னேன். ‘அப்புறம் ஏன் இப்படி பண்றாங்க..? சரி. நீங்க தயாரிப்பாளர்கிட்ட பேசி அவர்கிட்ட கொஞ்சம் பணம் வாங்கி அவங்களுக்கு செட்டில் பண்ணிருங்க’ன்னு சொன்னார்.

நான் வெளில வந்து தயாரிப்பாளருக்கு போன் செஞ்சு பேசினேன். இப்படி ‘ரஜினி ஸார் என்கிட்ட பேசினார்.. உங்ககிட்ட பேசி பணம் வாங்கி விநியோகஸ்தர்களுக்கு செட்டில்மெண்ட் செய்யணும்னு சொன்னார் ஸார்’ என்றேன். ‘எவ்ளோ ஸார்..?’ என்றார் தயாரிப்பாளர். ‘அது எனக்குத் தெரியாது ஸாரு’ண்ணேன்.. ‘ஒண்ணு பண்ணுங்க. நீங்க அவங்ககிட்ட பேசி எவ்வளவு பணம் செட்டில்மெண்ட் செய்யணும்னு சொல்லுங்க.. செஞ்சர்றலாம்’னு என்றார்.

அப்படி சொன்ன மாதிரியே நான் விநியோகஸ்தர்களிடத்தில் சமாதானம் பேச, ஒரு வழியா ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஒத்துக் கொண்டார்கள்.. தயாரிப்பாளரும் 12.50 கோடி தருவதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால், இப்போதுவரையிலும் 6.26 கோடி பணம் மட்டுமே கொடுத்திருக்கார். இதை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டேன். இன்னும் 6.24 கோடி பணம் வரலை. அது வந்தவுடன் கோவை, தென் ஆற்காடு மற்றும் வேந்தர் மூவீஸுக்கு கொடுத்துவிடுவேன். இந்த மூணு ஏரியாதான் இன்னும் மிச்சமிருக்கு. இதையும் வர்ற திங்கள்கிழமைக்குள் முடிச்சிருவேன்.. இதைச் செய்துவிட்டால் இந்த வாரத்திற்குள் ‘லிங்கா’ பிரச்சினை முழுமையாக முடிந்துவிடும்..

எந்த தருணத்திலும் நான் ரஜினியின் கால்ஷீட் வாங்கித் தருவதாக சொல்லவே இல்லை. ரஜினி ஸாரும் என்கிட்ட அப்படி சொல்லவும் இல்லை. இது பற்றிய செய்தி வெளிவந்தவுடனேயே ரஜினி ஸாரே இதைப் பற்றி என்னிடம் கேட்டார். நானும் தெளிவாக ரஜினி சாரிடம் சொன்னேன். நான் பேசிய பல ஆடியோக்களை வெளியிடும் சிங்காரவேலன், ரஜினி கால்ஷீட் குறித்து நான் பேசி இருந்தால், அந்த ஆடியோவை வெளியிட்டிருக்க வேண்டியது தானே? இப்போ நான் வெளில வந்து சாதாரணமா பேசும்போது சொன்னதா சொல்றாரு சிங்காரவேலன். அப்படியொரு வார்த்தை என் வாயில் இருந்து ஒரு போதும் வெளியில் வரவே இல்லை. சிங்காரவேலன் பொய் சொல்கிறார்.

‘பாபா’ படத்துக்கும்தான் நான்தான் இதே மாதிரி செட்டில்மெண்ட் செஞ்சேன். அப்போ தயாரிப்பாளர் சங்கத் தலைவரா இருந்த முரளிதரன் ‘செட்டில்மெண்ட்டுக்கு பதிலா ரஜினி ஸார் கால்ஷீட் கொடுத்து புது படம் எடுத்திரலாமே?’ என்று சொன்னார். அதைக் கேட்டு ரஜினி ஸார் உடனே மறுத்து, ‘அதெல்லாம் வேண்டாம். இந்தப் படத்தோட கதையை இதோட முடிச்சிருங்க.. தொடராதீங்க’ன்னு இதே இடத்துலதான் சொன்னார். அப்படிப்பட்ட ரஜினி ஸார்.. படம் செஞ்சு தரேன்னு சொல்லியிருப்பாரா..?

நான் 35 ஆண்டுகளாக திரைப்பட விநியோகஸ்தராக இருந்துவருகிறேன். ஒரு படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கும்போது, நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளரிடம் இருந்து பணம் கேட்பது தவறு. அப்படி வாங்குவது சரி என்றால் பல படங்களுக்குக் கேட்க வேண்டியிருக்கும். ரஜினி மனிதாபிமான அடிப்படையில் பணம் கொடுக்க முன் வந்துள்ளார். அதை கொடுக்கக் கூடாது என்று சொல்லவும் முடியாது..” என்றார்.

இன்றைய ‘லிங்கா’ விவகாரம் இப்படியிருக்க நாளை காலை ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் மறுபடியும் பிரஸ்ஸை சந்திக்கவிருக்கிறார்கள்.

Share