மெய்நிகரி நாவலின் முதல் பிரதியை இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்

mani_kabilan

கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி என்ற நாவலின் முதல் பிரதியை இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார். கபிலன்வைரமுத்துவின் மூன்றாவது நாவலான மெய்நிகரி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாவதை அடிப்படையாகக் கொண்ட கதை. இதை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகம் குறித்தத் தகவல்களை www.meinigari.com என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

கடந்த வாரம் வெளியான இந்த இணையத்தளத்தில் நாவலின் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு நாவல் வெளியாவதற்கு முன் அந்த நாவலின் கதாபாத்திரங்களை இணையத்தளம் மூலமாக அறிமுகம் செய்தது இதுவே முதல் முறை.

நூல் வெளியீடு குறித்து கபிலன்வைரமுத்து கூறியது:

2004 ஆம் ஆண்டு என் நான்காம் கவிதைத் தொகுதியை வெளியிட்ட மணிரத்னம் அவர்கள் பத்தாண்டுகளுக்கு பின் என் மூன்றாவது நாவலைப் பெற்றுக்கொள்வது பெருமை தருகிறது. மெய்நிகரி நாவல் ஒரு பரிசோதனை. இது பயனுள்ள பரிசோதனையாக இருக்கும் என்று நம்புகிறேன். அதிகம் பதிவு செய்யப்படாத களத்தை கையாண்டிருப்பதே மகிழ்ச்சி தருகிறது.

மெய்நிகரி என்றால்?

மெய்நிகர் என்ற வேரிலிருந்து வந்தது மெய்நிகரி. இந்தக் கதையமைப்பில் வரும் தொலைக்காட்சி அலுவலகத்தைக் குறிக்கிறது மெய்நிகரி. மெய்க்கு நிகரான பிம்பங்களை உற்பத்தி செய்யும் தளம் என்பது பொருள்.

Share