சீமராஜா படம் எப்படி ? | ராஜ சுந்தரராஜன் பார்வை

சீமராஜா படம் எப்படி ? | ராஜ சுந்தரராஜன் பார்வை

ஒரு நாய் இருக்கிறது. யாரிடம்? சிங்கம்பட்டி சீமராஜாவிடம். அதன் மேல்தோலில் தூரிகை வண்ணத்தால் புள்ளிகள் இட்டு அதற்கு ஒரு சிறுத்தைத் தோற்றத்தைக் கொண்டு வருகிறார் சீமராஜா. குரைப்பதை விட்டு உறுமவும் கற்றுத் தந்திருக்கிறார். அதைப் புளியம்பட்டி (வில்லனுடைய) ஊர்க்குள் உலவவிட வேண்டும். அதன்மேல் மக்களின் கவனம் திரும்புகிற வேளையில் வில்லன்வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாயகியை நாயகன் தூக்கிவர வேண்டும். இதுதான் திட்டம். ஊர்மக்களும் நாயை சிறுத்தையென்றே கண்டு மிரள்கிறார்கள். அப்படி மிரட்டுகிற நாய் ஒரு முடுக்குக்குள் போய் மிரண்டோடி வருகிறது. பின்னால் அசல் சிறுத்தை!

இதே இயக்குநர் (பொன்ராம்) இதே நாயகன் சிவகார்த்திகேயனை வைத்து முன்பு எடுத்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்” ஆகியவை வெற்றிப் படங்கள் ஆம். இதுகூட வெற்றிபெறலாம். ஆனால் ஜாதகம் எழுதப்படாத தி.மு.க. தலைவர்க்கு ஒரு ஜாதகம் எழுதியெடுத்துப் பலன்கணிப்பது போன்றது அது.

இயக்குநரின் குழப்பம் இன்னதென்று, எனக்குத் தோன்றுவதை, இங்கேயே சொல்லி விடுகிறேன்: இரண்டு பிரச்சனைகளை அக்கம்பக்கமாக வைத்துப் பேசுகிறார். ஒன்று, சிங்கம்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் பொதுவான சந்தைவளாகம் பூட்டப்பட்டுக் கிடப்பது. மற்றொன்று, தொழில்வளர்ச்சி என்கிற பெயரில் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப் படுவது.

முதற் பிரச்சனை சிம்ரனுக்காக. இரண்டாவது, சிவகார்த்திகேயனுக்காக.

சிம்ரனுக்கு நானும் ரசிகன்தான், ஆனால் அது ஒரு காலம். இன்றைக்கு, சிம்ரனோடு ஒருமித்து சினிமா உலகம் கண்ட ஜோதிகா இன்னும் உடல்தளரவில்லை; நாயகியாகவும் நடித்து வருகிறார். சிம்ரன் ஏன் இப்படி டொக்குவிழுந்து போனார்? அதுவும் இதில், டொக்கு வில்லி. சிம்ரனுக்கு முக்கியத்துவம் தருகிறதாக நம்பி, அவரது ரசிக மனதுகளில் உள்ளதோர் அழகிய சித்திரத்தை அலங்கோலப்படுத்தி யிருக்கிறார் இயக்குநர்.

அப்படி, முதற் பிரச்சனை தேவையில்லாத ஒன்று. இப்படி, வேலைவெட்டி யில்லாத நான்…???

சிம்ரனுக்குச் சம்பளம் சில லட்சங்களாவது கிடைத்திருக்கும்தானே?

‘தல’ அஜித், ‘தளபதி’ விஜய் அனைய முன்னணி வணிக மசாலா நாயகர்கள்கூட, இன்றைக்கு, சமூகப் பிரச்சனை ஒன்றை எடுத்துப் படம்பண்ணுவது வழக்கமாகி யிருக்கிறது. இருக்கையில், இன்னும் வெட்டிப்பயல் நாயகனாகவே நடித்துக்கொண்டு இருந்தால் பின்தங்கிவிட மாட்டாரா சிவகார்த்திகேயன்?

அப்படி, இரண்டாவது பிரச்சனை தேவையான ஒன்றுதான். இப்படி, ஒரு துரும்பையும் கையிலெடுக்காத நான்…???

சிவகார்த்திகேயனுக்கு ஒரு மனத்திருப்தி கிட்டியிருக்கும்தானே?

ஆனால் இயக்குநர்க்கும் இதே அகப்பிரச்சனை இருந்திருக்கிறது என்பது சாக்குப்பை யவிழ்ந்த பூனையாகி விட்டது. தானும், பிற இயக்குநர்கள் போல, சமுதாயப் பிரச்சனை பேச வேண்டாமா?

கூடவே, “பாகுபலி”, “நடிகையர் திலகம்” போலவும் தன்னால் எடுக்க முடியும் என்று காண்பித்தாக வேண்டிய ஆசையும்.

இடைவேளைவரை படம் நயமாக இருந்தது. அதுவரை நாயகன் ஒரு வெட்டிப்பயல். சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் பழக்கமான ஆடுகளம். அதிற்கூட முதற்பாட்டை, “பாஷா”வில் வரும் ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ போல, நாயகனின் அறிமுகத்தில் வைக்காமல் சுணக்கியது சொதப்பல்.

அப்புறம் சமந்த்தா அழகும் நடிப்பும் – அவற்றிற்கு கூடுதல் பங்கு முன்பாதியில்தானே? நகைச்சுவைக்கும்.

இரண்டாம் பாதியின் “பாகுபலி”/ “மஹாநடி” அரிப்பையும், ஏனோதானோ என்றில்லை, நன்றாகவே சொறிந்திருக்கிறார். அதில், நாயகனும் நன்றாகவே நடித்திருக்கிறார். நாயகியும் (இந்த எபிஸோடில் கீர்த்தி சுரேஷ்), பெரிய மனது பண்ணி, தன் கீர்த்தியை விட்டுக் கொடுத்திருக்கிறார்.

இவ்வளவும் பண்ணிவிட்டு, இந்த இயக்குநரும் நாயகநடிகரும் சுயவிமர்சனம் பண்ணிக்கொள்ள முன்வந்தார்களே, அதுதான் பாராட்டப்பட வேண்டும்.

அதுதான் அந்த நாயின் சிறுத்தை-ஒப்பனைக் காட்சிகள்! அதிலும் சிவகார்த்திகேயன் அசல் சிறுத்தையின் வாலைப் பிடிப்பார் பாருங்கள், அந்த நக்கலுக்கு நிகர் எந்தத் “தமிழ்ப்பட”த்திலும் இல்லை.

இப்படியெல்லாம் புரிந்து பார்த்தால், ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வரும் மனைவி & மைத்துனர் இடையீடு தாண்டியும், வெற்றி நிச்சயம்.

 

ராஜ சுந்தரராஜன்

Share