கடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி?

கடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி?

இயக்கம் : பாண்டிராஜ்

நடிப்பு : கார்த்தி

சத்யராஜ்

சாயேஷா

பிரியா பவானி ஷங்கர்

அர்த்தனா பினு

பானுப்ரியா

விஜி சந்திரசேகரன்

சூரி

ஒளிப்பதிவு : வேல்ராஜ்

படத்தொகுப்பு : ரூபென்

இசை : D இமான்

தயாரிப்பு : சூர்யா

நீளம் : 147 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : 5 மகள்கள், 2 மனைவிகளுடனும், ஆயிரக்கணக்கான சொந்த பந்தங்களுடனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ரணசிங்கத்தின் (சத்யராஜ்) கடைசி மகனான குணசிங்கம் (கார்த்தி), கண்ணுக்கினியாரை (சாயேஷா) காதலித்து மணமுடிக்க முடிவெடுக்கிறார், இதை அறிந்த மற்ற குடும்பத்தினர், அத்தை மகள்களுள் ஒருவரை மணமுடிக்க முயல்கிறார்கள், அதே காரணத்திற்காக ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் பிளவு ஏற்படுகிறது, ஏனைய பின்கதைகளை நிறுத்தி நிதானித்து உரைக்கிறது திரைக்கதை.

 

பலம் …

+ கார்த்தி : முழு படத்தையும் தொளில் சுமந்து இருக்கிறார், நடிப்பிலும் அலாதி முன்னேற்றம். எந்த இடத்திலும் தடுமாறாமல் நீண்ட வசனங்களுடன் முகபாவனைகளை வளைத்து நடித்து அசத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் அம்சமாக பொருந்துகிறார்.

 

+ ஒளிப்பதிவு : விவசாயம் சம்பந்தமான காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி, மஞ்சள் நிறம் முதல்வைத்து நகரும் வேல்ராஜின் ஒளிப்பதிவு நன்று. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் கொட்டிக்கிடக்க, ஒரு Frame’மில் நிறைய கதாபாத்திரங்களை கொண்டுவருவது உட்பட்ட அநேக சவால்களை எளிதாக எதிர்கொண்டிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் புழுதி, வைக்கோல் ஆகியவற்றை வைத்து சுவரசியப்படுத்த முயற்சித்திருப்பது நல்ல திட்டம்.

 

+ சத்யராஜ் : பல தருணங்களில் படத்தின் ஹீரோவாகவே தென்படுகிறார். பெரிய குடும்பத்தில் தலைவர் என்ற தோற்றத்திலும், உடல்மொழியிலும் அம்சமாக அமர்கிறார். மெச்சிக்கும் நடிப்பு.

 

+ சூரி : வெகு நாட்கள் கழித்து சூரியின் காமெடி வயிற்றை பதம் பார்க்கிறது. இவரை வெறும் நண்பராக மட்டும் வந்துபோக வைக்காமல், உறவுகளுள் ஒருவராக கதைக்குள் கொண்டு வந்ததும் வரவேற்கத்தக்க முயற்சி.

 

பலவீனம் …

– காதல் காட்சிகள் : கார்த்தி – சாயேஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் கதையோடும் காட்சிகளோடும் ஓட்டாமல் செயற்கையாக தென்படுகிறது. சாயேஷா, கிராமத்துப்பெண்ணாக சோபிக்கவில்லை. முதல்பாதியில் இவர்களது காட்சிகள் ஈர்ப்பில்லாமல் நகர்வதால் பின்பாதி சம்பவங்கள் ரசிகர்களிடத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

– இரண்டாம் பாதி : இடைவேளைக்கு மேல் கதை நகரவே இல்லை. குடும்ப காட்சிகள் அனைத்தும் சீரியல் பாணியில் நகர்வது திரைக்கதையில் மேலும் தொய்வுகளை கொடுத்தது. முதல்பாதியில்  பெரிதாக சித்தரிக்கப்பட்ட குடும்ப சண்டைகள், பிற்பாதியில் சுலபமாக தீர்ந்துபோவது திரைக்கதையை அவசரமாக முடிக்கும் யுக்திகளாகவே காட்சியளிக்கிறது.

 

Dஇமானின் இசையில் பின்னணி இசை ஓகே, பாடல்கள் சுமார், அவை வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் அதைவிட சுமார். படத்தில் எக்கச்சக்க கதாபாத்திரங்கள், யுவராணி, மௌனிகா, பொன்வண்ண, இளவரசு ஆகியவர்கள் ஓரளவு கவனிக்க வைக்கிறார்கள். ஸ்ரீமன், ஜான் விஜய் கதாபாத்திரங்கள் படத்தின் பெரிய சறுக்கல். படத்தின் வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்க்கவைத்து ஏமாற்றம் அளிக்கிறது, இடைவேளைக்கு பிறகு, ஹீரோ-வில்லன் சண்டையாக நகரும் என்று எதிர்பார்த்த படத்தை அப்படியே நிறுத்தி விட்டு, குடும்பச்சண்டை, பஞ்சாயத்து என்று வேறு திசையில் நகரும் திரைக்கதையை ஓரளவு ஒழுங்கு படுத்தி இருக்கலாம். கூடுதலாக படத்தில் பல விஷயங்கள் அவசரகதியாக முடித்து வைக்கப்பட்டிருப்பது அப்பட்டம். இருந்தும், இயக்குனர் பாண்டிராஜின் திரைக்கதையில் ஆங்காங்கே தெரியும் நுணுக்கங்களும், டைரக்டர் டச்’களும் படத்திற்கு பெரிய ஆறுதல்.

 

மொத்தத்தில் : இரண்டாம்பாதியில் தென்படும் நாடகத்தனமும், கதைக்கு ஒட்டாத காதல் காட்சிகளும் சரிசெய்து, திரைக்கதையில் ஓரளவு ஒழுங்கு படுத்தி இருந்தால், மேலும் பளிச்சிட்டிருக்கும் இந்த கடைக்குட்டி சிங்கம்.

 

மதிப்பீடு : 3 / 5 …

Share