டிக் டிக் டிக் – படம் எப்படி ?

டிக் டிக் டிக் – படம் எப்படி ?

இயக்கம் : ஷக்தி சௌவுந்தர்ராஜன்

நடிப்பு : ஜெயம்ரவி

ஆரவ் ரவி

நிவேதா பெத்துராஜ்

ரமேஷ்திலக்

அர்ஜுனன்

ஜெயப்ரகாஷ்

வின்சென்ட் அசோகன்

ஒளிப்பதிவு : S.வெங்கடேஷ்

படத்தொகுப்பு : பிரவீன்.E.ராகவ்

இசை : D இம்மான்

தயாரிப்பு : இத்தேஷ் ஜபக்

நீளம் : 131 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் :

விண்வெளியில் பூமியைநோக்கி வரும் விண்கல்லினால் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை அறியும் விண்வெளி பாதுகாப்பு மையம், அந்த ஆபத்தை எதிர்கொள்ள விண்வெளியில் உள்ள அணுஆயுதத்தை திருட முடிவெடுக்கிறார்கள். அதற்கு உதவ வாசு (ஜெயம் ரவி) என்கிற திருடனுடன் சேர்த்து, ஐந்து நபர்களை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள். பின்னர் நடப்பதே படத்தின் திரைக்கதை.

 

பலம் …

+ ஒளிப்பதிவு : விண்வெளியில் நடக்கும் காட்சிகள் அனைத்திலும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அவர்களின் பங்கு அலாதியானது. தலையை சுற்றும் கேமரா கோணங்கள், புவி ஈர்ப்பின்றி மிதக்கும் விண்கல காட்சிகள், என்று நம்மை ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார்.

 

+ இசை & ஒளிவடிவமைப்பு : டைட்டில் இசையிலிருந்து படம் முடியும்வரை D.இம்மானின் பின்னணி   இசை நம்மை பல்வேரு இடங்களில் ஈர்க்கிறது, அதற்க்கு பக்கபலமாக கைகொடுத்திருப்பது ஒளிவடிவமைப்பு. குறிப்பாக, விண்வெளி காட்சிகளில் வரும் சிறு சிறு சப்தங்கள் புல்லரிப்பு. பாடல்களும், அவற்றை படத்தில் வைத்த இடமும் சுமார்.

 

+ விண்வெளி காட்சிகள் : விண்வெளி காட்சிகள், அதன் பின்னணியில் நடக்கும் சம்பிரதாயங்கள், அவ்விடங்களில் உபயோகிக்கப்படும் வார்த்தைகள் முதல், பின்னணியில் இருக்கும் பொருட்கள் உட்பட, அனைத்து இடங்களிலும் இயக்குனரின் ஆய்வும் ஈடுபடும் முழுமையாக தென்படுகிறது.  விண்வெளி காட்சிகள் அனைத்தும் படத்தின் மிகப்பெரும் பலம்.

 

பலவீனம் …

– திரைக்கதை : முதல் காட்சி துடங்கி, இறுதிக்காட்சி வரை திரைக்கதையில் ஒரு வித செயற்க்கைத்தன்மை ஒட்டிக்கொள்கிறது. இலவச இணைப்பாக வரும் லாஜிக் ஓட்டைகள், வெளிப்படையாக தெரிவது பெரும் பலவீனம்.

 

– கதாபாத்திர வடிவமைப்பு : ஹீரோ கதாபாத்திரம் தவிர, மற்ற எந்த கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை, அவற்றை படமாக்கிய விதத்திலும் ஏகப்பட்ட முரண்கள்.

 

* யாரை காப்பாற்றப்போய் ஹீரோ போலீஸிடம் மாட்டிக்கொள்கிறார்?.

* சுவேதா கதாபாத்திரத்தை கொலை செய்ய முயற்சித்தவர் யார்?

* மிலிட்டரி வளையத்துக்குள் இருக்கும் ஒரு உயரதிகாரி, சர்வசாதாரணமாக தனது அறையில் ஒருவரை கொன்றுவிட்டு சுதந்திரமாக உலாவுவது எப்படி?

* ஒரே ஒரு TABLet’ஐ வைத்துக்கொண்டு விண்வெளி வரை சென்று hack செய்வதெல்லாம் எப்படி?

 

போன்ற பல கேள்விகளுக்கு இறுதிவரை பதில் கூறப்படுவது இல்லை. ரமேஷ்திலக், அர்ஜுனன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சுமார், விண்வெளி வரை அவர்களை கொண்டு செல்வதற்கு எந்த நியாயமும் சொல்லப்படுவதில்லை. நிவேதா பெத்துராஜ் கவர்ச்சி, வின்சென்ட் அசோகன், பாலாஜி வேணுகோபால் ஆகியோரின் கதாபாத்திரங்கள் எடுபடவில்லை. வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் அமெச்சூர் தனம்  ஏகம். முதல்பாகத்தை சுறுசுறுப்பாகவும், பிற்பாதியில் மென்மையாகவும் காட்சியமைப்பிற்கு ஏற்றவாறு வரும்  பிரவீன்.E.ராகவ் அவர்களின் படத்தொகுப்பு, நன்று. கடைசி 15 நிமிட காட்சிகள் விறுவிறுப்பு.

 

மொத்தத்தில் :

லாஜிக் ஓட்டைகள், செயற்கைத்தனம் மேலோங்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள், கதாபாத்திரங்களில் தென்படும் முரண்கள் ஆகியவற்றை கவனித்து, திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி இருந்தால், இந்திய சினிமாவின்  மைல்கல்லாக  அமையவேண்டிய படம், இப்பொழுது ஒரு பொழுதுபோக்குச்சித்திரமாக மட்டுமே உருவெடுத்திருக்கிறது.

 

மதிப்பீடு : 2.75 / 5

– Santhosh AVK

Share