திராவிடம் 2.0 கருத்தரங்கம் – மூன்றாவது நிகழ்வு

திராவிடம் 2.0 கருத்தரங்கம் – மூன்றாவது நிகழ்வு

– ஜெயன்நாதன் கருணாநிதி

 

இரு நிகழ்வுகள்

நேற்று (29.04.2018) சென்னை பெரியார் திடலில் நிகழ்ந்து முடிந்த திராவிடம் 2.0 நிகழ்விற்கும் கடந்த ஞாயிறு அரியலூரில் உள்ள கலைஞர் இல்லத்தில் நிகழ்ந்த திராவிடம் சார்ந்த நிகழ்விற்கும், பேசப்பட்ட திராவிடக் கருத்தியல், முன்னிலை வகித்த அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களைத் தாண்டி பொதுவாக இருந்தது திராவிடம் என்ற கருத்தியல் குறித்தும் திராவிடம் இனி என்று பொதுவெளியில் பலவாறாக எழுப்பப்படும் கேள்விகளோடு இந்நிகழ்வுகளுக்கு வந்து சேர்ந்த இளையர் கூட்டத்தின் அளவும்.

 

திராவிடம் 2.0 வின் மூன்றாவது நிகழ்வு இது. அவர்களின் முதல் இரண்டு நிகழ்வுகளைக் கண்கூடாக பார்க்க வாய்ப்புக் கிட்டியதால் அறிந்துக்கொண்டது என்னவெனில் சமூக வலைத்தளங்களில் இன்றைய இளைஞர்களிடம் திராவிடம் குறித்து பேசுவதற்கான வெளி என்பது விரிவடைந்துக்கொண்டே வருகிறது. காரணம், அங்கு திராவிடம் குறித்தும் தமிழகத்தின் நிலை குறித்தும் பரப்பப்படும் துளியும் நேர்மையற்ற பொய்களும் விஷம் தோய்ந்த half truths உம்.

 

ஒரு புறம் சென்னை போன்ற மாநகரங்களில் இது போன்ற நிகழ்வுகளுக்கான சாத்தியங்கள் இருக்க, அரியலூரில் வேறு விதமான சூழலும் சாத்தியங்களும். சென்னைக் கூட்டத்திற்கு வந்த பலர் எந்த இயக்கத்தையும் சாராத இளையர் கூட்டம். கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் இணையத்தில் troll களுடன் மல்லுக்கட்டி, அவர்களின் பொய்களை ஜீரணிக்க முடியாமல் பதில் சொல்லி ஓய்ந்து, காலப்போக்கில் ஒத்த கருத்துடையவர்களை comment section இல் கண்டடைந்தவர்கள், பின் முன் பின் எந்த பரிச்சயமும் இல்லாதவர்களான இவர்கள், ஒருங்கிணைந்து செயலாற்ற ஆரம்பித்தது பல facebook group களின் வழி, முக்கியமாக facebook page களின் வழி.

 

அரியலூரில் வந்த கூட்டத்தினைப் பற்றி என்னால் இன்னும் தெளிவாக சொல்லமுடியும், காரணம், அண்ணா பயிற்றகம் சார்பாக திராவிடம் குறித்த அந்த நிகழ்வினில் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் அமைத்துத் தந்த மேடை. அரியலூர் நகரில் இருக்கும் கலைஞர் இல்லத்தினில் நடந்த இந்த நிகழ்வினிற்கு வந்தவர்களில் பாதிக்கும் மேல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள், அதிலும் தெரிந்தவர்கள் வழியும் நண்பர்கள் வழியும் கட்சிச் தொடர்பினாலும் வந்தவர்கள். திராவிடம் என்ற கருத்தியல் குறித்து இணையத்தில் உலவும் பொய்கள், காழ்ப்பு மிகுந்த சொற்கள் ஒரு புறம் என்றால் மக்கள் மத்தியில் திராவிட வரலாற்றினை தங்கள் வாழ்நாளில் பார்த்தவர்களின் எண்ணிக்கை வருடங்கள் ஆக ஆக குறைந்து வருவதும் அதனால் பிழையான செய்தியினை ஒருவர் சொல்லும் பொழுது அது எதிர் கேள்வி கேட்கப்படாமலேயே அப்பொய் சுற்றுவதற்கான வாய்ப்பும் அதிகமாகி வருகிறது. இந்தச் சூழல் மாநகரங்கள் தாண்டி நமது நகரங்களிலும் ஊர்களிலும் உருவாகிவருகிறது, அரியலூரிலும் சேர்த்து.

 

90களுக்குப் பின்னான அரசியல் நீக்கம் பெற்ற கல்விச் சூழலும் குடும்ப சூழலும் சமூக சூழலும் இப்பொழுது கிராமம் வரை எட்டியிருக்கிறது என்பதும் அங்கிருக்கும் இளையர்கள் தங்கள் வாழ்நாளில் ஏற்பட்ட அனுபவங்கள் வழி மாத்திரமே அரசியல் சூழலினை, அந்தச் சரித்திரத்தை அறிகிறார்கள் என்பதும் முன்பு போல் ஆசிரியர்கள் வழி வீட்டுப் பெரியவர்கள் வழி நிகழ்ந்த அரசியல் அறிமுகம் இப்பொழுது பெரிதும் நிகழ்வதில்லை என்பதும் தோராயமாக அனைவரும் உணர்ந்தது தான்.

 

இந்தச் சூழலில் தான், திராவிடத்தின் ஆணிவேரிலிருந்து தற்கால திராவிட கருத்தியலின் தேவை எவ்வாறு சமூகத்தால் உணரப்படுகின்றது என்பதைப் பற்றி அண்ணா பயிற்றரங்கத்தில் பேசலாமே என்று அண்ணன் அவர்கள் சொன்னார்கள். அதன் படி,

 

* திராவிட -திராவிடம் என்ற வார்த்தைகளின் பயன்பாடு தோராயமாக 1400 ஆண்டுகளுக்கு முன் எப்படி விந்தியத்தின் கீழ் இருக்கும் நிலப்பகுதியினை சுட்ட பயன்பட்டது,

* தற்காலத்திய இந்தியாவின் பெயர் எவ்வாறு சிந்து நதிக்கு மேற்கே இருக்கும் ஆட்களால் சுட்டப்பட்ட பெயரின் நீட்சியோ அது போலவே திராவிட என்ற வார்த்தைப் பயன்பாடு என்பதைச் சொல்லி அங்கிருந்து வடவர் இலக்கியத்தில் திராவிட என்ற சொல்லின் பயன்பாடு,

* ஆரிய மதவழக்கங்களை வர்ணாஸ்ரம தர்மம் என்ற பெயரில் நிகழ்த்தும் கொடுமைகளை தங்கள் வார்த்தைகளால் அடித்த சித்தர் மரபு,

* பின் கிழக்கிந்திய கம்பெனியில் (East India Company) இருந்த எல்லிஸ் (Francis Whyte Ellis) அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி குறித்து ஆய்ந்து அறிந்தது,

* நமது ராபர்ட் கால்டுவெல்லின் (Robert Caldwell) திராவிட ஒப்பிலக்கண நூல் (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages), மனோன்மணியம் படைத்த சுந்தரனாரின் (Thiru. P. Sundaram Pillai) ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நற் திருநாடும்’ என்ற வரி ,

* இம்மண்ணின் ஆன்மிகத்தினை பேசிய வடலூர் இராமலிங்கனாரினை (Vadalur Ramalinga Swamigal) நினைவுப்படுத்தி பின்னர், ஆசுவாசமாக சுமார் 50-60 ஆண்டுகள் கழித்து 1900 களில் பிராமணரல்லாதோர் தாங்கள் எவ்வாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வஞ்சிக்கப்படுகிறோம்,

* அன்றைய மதராஸ் மாகாண காங்கிரஸில் எவ்வாறு ஒதுக்கப்படுகிறோம் என்று உணரும் அத்தருணம்,

* நடேசனாரின் ‘Madras Dravidian Association'(1912 A.D.),

* தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தோற்றம் (1916),

* மிகக் குறைந்தபட்ச அதிகராத்தையே அன்றைய ஆங்கில அரசாங்கம் மாகாணங்களுக்கு அளித்திருந்தாலும் அதனைக் கொண்டே நூறாண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கப்போகும் கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு,

* கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் குழு போன்ற அமைப்புகள், மதிய உணவுத் திட்டத்தின் முன்முயற்சி,

* பல்லாயிரம் ஏக்கர்களை சொத்தாய் வைத்திருக்கும் கோவில் சொத்துக்களை தனிநபர்களிடம் இருந்து சிற்சில குடும்பங்களிடம் இருந்து மீட்டு இந்து அறநிலையத்துறை அமைப்பதில் முன்முயற்சி,

* அன்றைய மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில சமஸ்க்ரிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தேவையற்ற இடையூரினை ஒழித்தலும் இந்த சமஸ்க்ரித இடையூறும் இப்பொழுது நம் மீது திணிக்கப்படும் நீட் தேர்வும் எவ்வாறு ஒன்று போலத்தான் என்பதைப்பற்றியும் பேசி,

* அன்று இழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த, பிறப்பின் வழி இருந்த தேவதாசி முறையினை ஒழிப்பதில் முன்முயற்சி போன்ற பல முத்தான முற்போக்கு முன்நகர்வுகளை எவ்வாறு சாத்தியப்படுத்தினர் எனபதை அடிக்கோடிட்டு , எது அவர்களை உந்தித்தள்ளியது என்பது குறித்தும்,

* அச்சமயம் எழுந்த சுயமரியாதை இயக்கம், பெரியார் அவர்கள் பல்வேறு கற்றறிந்த சான்றோர்களுடன் சேர்ந்து சமூக அவலங்கள் குறித்து சாட்டையினை சுழற்றியது,

* அறிஞர் அண்ணாவின் வருகை,

* 1938 இல் நிகழ்ந்த முதன் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் ஆரியமும் அவர்களிடம் அண்டிப்பிழைப்போரும் எவ்வாறு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியினை நம் மீது திணிக்கிறார்கள் என்பதைச்சொல்லி, திராவிடர்கழகத்தின் பிறப்பு, பின் திராவிட நாடு முழக்கம் ஆகியற்றைத் தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறப்பினோடு திராவிடத்தின் உறுதியான கால்கோளினை நான் அறிந்த வரையில் விளக்கினேன்.

அதன் பின்,

* அந்தக் கருத்தியல் கால்கோளினை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்ட அரசியல் இயக்கமான திமுகவின் மத்தியில்கூட்டாட்சி (Federalism) மாநிலத்தில் சுயாட்சி (Autonomy) என்றமுழக்கம்,

* கூட்டாட்சி குறித்தும் சுயாட்சி குறித்தும் ஏன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதனை நீட், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற எதேச்சதிகாரமான மத்தியஅரசின் முடிவுகளைச் சுட்டிக் காண்பித்து,

* பின் சமூக நீதி என்பதை முழக்கங்களில் மாத்திரம் தேடாமல் திமுக அரசின் திட்டங்களில் அடிநாதமாய் உள்ள சமூக நீதிக் கூறுகளையும் தேடவேண்டும் என்று மீண்டும் அடிக்கோடிட்டேன்.

* விலையில்லா அரிசி திட்டமும், இலவசக் கல்வியும் , விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமும் ஆற்றுப் பாலங்கள், கிராமப்புற சாலைகளும் எவ்வாறு லட்சக்கணக்கான விவசாயப் பாட்டாளிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அவர்கள் முதலாளிகளிடம் இருந்து விடுதலையினைப் பெற்றுத் தந்தது, அவர்களின் நாள் சம்பளத்தினை உயர்த்தியது என்பதனைச் சுட்டி, திட்டங்களை வெறும் திட்டங்களாய் பார்க்காமல் அதன் வழி ஏற்படும் விளைவுகளையும் நாம் பார்த்தால் தான் சமூக நீதியென்பது எவ்வாறு மறைமுகமாகவும் உறுதிப்படுத்தப்படுகிறது என்பதனைப் பற்றிப் பேசினேன்.

முக்கியமாக, நாம் இன்னும் இந்திய ஒன்றியத்தில் தான் இருக்கிறோம் என்பதையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி தான் இங்கு அரசியல் செயல்பாடுகள் வரையறுக்கப்படுகிறது என்பதை நம் நண்பர்களுக்கு ஏன் மீண்டும் மீண்டும் உணர்த்தவேண்டும் என்பதைச் சொல்லி, அந்த உண்மை மாத்திரமே நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கும் பல போலிகளை உடைக்கும் சுத்தியல் என்று பொருள் தரும் ஒரு சிறு குறிப்பினைச் சொல்லி, அன்று என் உரையினை முடித்தேன்.

அதன் பின் நிகழ்ந்த கேள்வி பதில் நேரத்தில், பண்பாடு- இட ஒதுக்கீடு – தமிழர் அடையாளம் குறித்த ஆழமான கேள்விகள் பல வந்தன. அதற்கு அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும் நானும் பதில் அளித்தது ஒரு புறம் என்றால் வந்திருந்தவர்களும் அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் பதில்களையும் கள நிலவரத்தையும் விளக்கியது அந்த நிகழ்வினை மேலும் சிறப்பாக்கியது.

கால்கோளும் அதன் மீது எழுப்பப்பட்ட வீடும் இருக்கும் இத்தருணத்தில், தற்போதைய தேவை கருதி, இரண்டாம் தளம் அமைக்கிறோம், வரும் காலங்களில் பற்பல தளங்கள் அமைப்பதற்கான தேவையும் எழும். அப்பொழுது, இப்புது தளங்களில் குடிப்புகுவோருக்கு, அந்த தளத்தினை பயன்படுத்திடுவது குறித்து தெளிவான விளக்கங்களை அளிப்பது எத்தனை முக்கியமோ அது போலவே முக்கியம் பன்னெடும் காலத்திற்கு முன்பு இடப்பட்ட கால்கோள் குறித்தும் முதற் தளம் குறித்தும் அதனைப் பேணிப்பாதுகாப்பது எப்படி என்பதைப்பற்றியும் விளக்குவது மிக மிக முக்கியம்.

நேற்றைய திராவிடம் 2.0 நிகழ்விலபேசிய அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும், அண்ணன் கோவி. லெனின் அவர்களும், வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும் தங்கள் உரையினில் இந்தப்பொருளினை வலியுறுத்தும் விதத்தினில் பேசியது நிரம்ப மகிழ்வினைத் தருகிறது.

இந்தத் தருணத்தில், அண்ணன் Ka Deena அவர்களுக்கும் அண்ணன் Vignesh Anand அவர்களுக்கும் தம்பி Suriya Moorthy என் நன்றி.

அரியலூரில், சென்ற வாரம், அண்ணா பயிற்றகம் சார்பாக திராவிடம் குறித்து பேச அங்கு நிகழ்ந்த உரையாடலில் பங்கேற்க வாய்ப்பளித்த அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ் அவர்களுக்கு இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

==========================

திராவிடம் 2.0 நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்களுக்காக காணொலிகளின் தொகுப்பு கீழே இருக்கும் சுட்டிகளில்.

 

அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் | திராவிடம் 2.0

திரு கோவி லெனின் அவர்கள் | திராவிடம் 2.0

வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் | திராவிடம் 2.0

Share