ஸ்லோ மோசன் கதைக்காகுமா ?! – செங்கோவி

ஸ்லோ மோசன் கதைக்காகுமா ?! – செங்கோவி

சினிமாவில் கதை சொல்ல உதவுவதற்கென்றே பல டெக்னிக்குகள் ஒளிப்பதிவிலும் எடிட்டிங்கிலும் உள்ளன. அதில் முக்கியமானது ஸ்லோ மோசன்.

ஒரு முக்கியமான சம்பவத்தை.ஆக்சனை அழுத்தமாகச் சொல்ல ஸ்லோ மோசன் ஒரு சிறந்த வழி. அமைதியான ஹீரோ பொங்கி எழுவது, முக்கியமான கேரக்டர் சாவது, பில்டப் ஓப்பனிங் இண்ட்ரோ, ஹீரோவும் ஹீரோயினும் ரொமாண்டிக்காக பார்த்துக்கொள்வது என துக்கம் முதல் சந்தோசம் வரை எல்லா இடத்திலும் ஃபீலிங் எஃபக்ட்டை கூட்டுவதற்கு உதவுவது ஸ்லோ மோசன்.

தமிழில் முதல் ஸ்லோ மோசன் காட்சி, வசந்த மாளிகையில்வந்தது. சிவாஜியும் வாணிஸ்ரீயும் ‘மயக்கமென்ன’ பாடலில் ஸ்லோமோசனில் ஓடிவரும் காட்சி அப்போது மிகப் பிரபலம். இதற்காக ஆடியோ கேசட்டில் இல்லாத ஒரு இடையிசை படத்தில் சேர்க்கப்பட்டது.

ஒரு ஷாட்டை முழுக்க ஸ்லோமோசனில் எடுப்பது தான் முன்பு வழக்கத்தில் இருந்தது. பிறகு ஒரு ஷாட்டில் பாதியை நார்மல் ஸ்பீடிலும் பாதியை ஸ்லோமோசனில் காட்டும் உத்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஹீரோ அடித்தவுடன் அடியாள் பறக்க ஆரம்பித்து, சட்டென்று ஸ்லோமோசனில் ப….ற…..ந்…..து டொம்மென்று விழும்போது, ஆடியன்ஸும் மூச்சைப் பிடித்து பார்த்து ஃபீல் ஆனார்கள். ‘சச்சின்’ படம் தான் இதற்கான ஆரம்பம் என்று நினைக்கிறேன்.

‘Matrix’ படம் இன்னும் ஒரு படி முன்னேறி ஸ்லோமோசனையும் கேமிரா 360 டிகிரி சுற்றுவதையும் இணைத்து சண்டைக்காட்சிகளில் மிரட்டியது. பாய்ஸ் படத்தில் ஷங்கர் அதை ஒரு பாடல் காட்சியில் பயன்படுத்தியிருப்பார். கொள்ளை அழகாக இருக்கும், பார்ப்பதற்கு!

இவ்வாறாக சினிமா உலகம் ஸ்லோமோசனை பல பலான விஷயங்களுக்கு பயன்படுத்தி வரும் வேளையிலே, ’ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’படத்தில் இன்னொரு விஷயத்திற்கும் பயன்படுத்தியிருந்தார்கள்.

காலேஜ் வாசலில் விஜய் சேதுபதி பெயிண்ட் அடிக்கும்போது ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் ஸ்லோமோசனில் நடந்து வருகிறார். அதன்மூலம் அவர் தான் ஹீரோயின் என்று ஆடியன்ஸ் மனதில் அடித்துச் சொல்ல ஸ்லோமோசன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக நடந்து வந்திருந்தால், சத்தியமாக யாரும் அவரை ஹீரோயின் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

நல்ல ட்ரெஸ்ஸை மாட்டி, மேக்கப்பை ஏற்றி, லாங் லென்ஸை மாட்டி, சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்கி, அந்த பெண்ணை மட்டும் தூக்கிக்காட்டி (அதாவது ஃபோகஸில் காட்டி), கூடவே ஸ்லோமோசனையும் சேர்த்து….அப்பப்பா….ஒரு ஹீரோயினை ஹீரோயின் என்று நிரூபிக்க படக்குழு எத்தனை எஃப்ஃபோர்ட் போட்டிருக்கிறார்கள். வெல்டன் ப்ரோஸ்!

இதிலேயே முழு எனர்ஜியும் போய்விட்டதால் தான் படம் அப்படி ஆகிவிட்டது போல….பாவம்!

Share