தி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” | சூரியமூர்த்தி

தி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” | சூரியமூர்த்தி

சமீபத்தில் வாசித்த இரண்டு சிறுகதை தொகுப்புகள், 50களில் தொடங்கி 70களின் இறுதிவரை தமிழ் சிறுகதை உலகம் எப்படி இருந்திருக்கும் என்று தேட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.. 1971ல் வெளியான ஜெயகாந்தனின் குருபீடம் படித்த பின்னர் அதன் மீதான ஆச்சர்யம் குறைவதற்குள்ளாகவே, 1954ல் வெளியான தி.ஜானகிராமனின் கொட்டுமேளம் சிறுகதை தொகுப்பு அதிசயமாய் தெரிகிறது.

அந்த காலகட்டத்தில் வெளியான கதைகளின் எழுத்து வலிமையும், கதைக்களமும் கதைகளின் பேசுபொருளும் வியக்க வைக்கின்றன, இன்றைக்கும் வலிமையான கதைகளுக்கு பஞ்சம் இல்லை தான், அகரமுதல்வனின் தீபாவளியும், நர்சிமின் பிடிகயிறும் கடத்தும் உணர்வுகள் அத்தனை சுலபமாய் கடந்துவிட முடிவதில்லை, ஆனாலும் அன்றைய கதைகள் வேறொரு தளத்தில் வைத்து அணுக வேண்டிய தகுதிகளை உடையதாகவே தோன்றுகிறது

பால்யத்திலேயே திருமணமான ஒரு பெண்ணின் கனவர் இறந்து போக, அதை துக்கமாக கூட எண்ணி அனுசரிக்க கூடிய பக்குவம் இல்லாத அந்த பெண்ணின் innocent ஐ பக்கத்திலிருந்து பார்த்தது போல உணர்வை தரும் நடை தி.ஜாவின் கதைக்குள் இருக்கிறது

மனித மனத்தின் இயல்பான உணர்வுகளை, வெகு இயல்பாக மொழிக்குள் புகுத்துவதில் தனித்து நிற்கிறார் தி.ஜா. செவிட்டு கணவன் பொழியும் அன்பையும் தாண்டி வேறு சில ஆண்களின் மீது ஏற்படும் ஈர்ப்புகளையும் அதை எப்படியெல்லாம் ஒரு பெண் எதிர்கொள்கிறாள் என்பதையும் சொல்லியவிதம் பெண்களின் உண்ர்வுநிலைகளை படிக்க உதவும் காட்சிகளே.

பசியின் கொடுமையை, மரணப்படுக்கையின் வலியை, வித்வானின் அசடு வழிதலை, முதமையின் கோரத்தை, பணத்திற்காக மட்டுமே உறவுகள் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையை, விபச்சாரிக்காக பத்து ஆண்டுகள் போரையும் உயிர் பயத்தையும் பொருட்படுத்தாது வெளிநாட்டில் உழைத்தவனின் துன்பத்தை என்று எதை பேசினாலும், எந்த உணர்வை எழுதினாலும் அதை வேறொருவர் அந்த அளவிற்கோ அல்லது இன்னொரு கதையில் அதே அளவோ அதைவிட அதிகமாகவோ கடத்திவிட கூடாது என்கிற திட்டத்தோடு எழுதியது போல்.. ஒவ்வொரு உணர்வுகளையும் அதன் எல்லையில் நின்று வருணிக்கிறார்.
அத்தனை கதைகளும் அசத்தல்

தி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” – காலச்சுவடு வெளியீடு

  • சூரியமூர்த்தி
Share