படைவீரன் – படம் எப்படி ?

படைவீரன் – படம் எப்படி ?

இயக்கம் : தனா

நடிப்பு : விஜய் யேசுதாஸ்

பாரதிராஜா

அம்ரிதா

‘கல்லூரி’ அகில்

கவிதா பராதி

ஜெயச்சந்திரன்

சிந்து

நிதிஷ்

சிங்காம்புலி

ஒளிப்பதிவு : ராஜவேல் மோகன்

படத்தொகுப்பு : புவன் ஸ்ரீனிவாசன்

இசை : கார்த்திக்ராஜா

தயாரிப்பு : மதிவாணன்

நீளம் : 124 நிமிடங்கள்

 

கதைச்சுருக்கம் : அரைகுறை படிப்போடு, வேலைவெட்டிக்கு போகாத கிராமத்து இளைஞனான முனீஸ்வரன்’னுக்கு (விஜய் யேசுதாஸ்), திடீரென போலீஸ் கனவு தொற்றிக்கொள்ள, ‘தான் போலீஸ் ஆகித்தான் மீண்டும் ஊர் திரும்புவேன்’ என்று காவலர் பயிற்சிக்கு செல்கிறான். அவன் பயிற்சி முடித்து திரும்பியதும், ஊரே கலவர பூமியாகி விடுகிறது. இந்த நிலையை சரிசெய்ய, முனீஸ்வரன் எடுக்கும் வீரச்செயல்களே இந்த ‘படைவீரன்’.

 

பலம் . . .

+ திரைமொழி : துவக்க காட்சி முதல் இறுதி காட்சிவரை, வசனங்களிலும், படமாக்களிலும், திரைமொழியின் பலம் திரையில் மின்னிட்டது. கதாபாத்திரங்களின் முகபாவனைகளிலும், செயல்களும் நமக்கு பல குறியீடுகளை தெளிவுற உரைத்தல் நன்று.

 

+ ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் : ஒரு சாதாரண காட்சியைக்கூட வித்யாசமான கோலங்களில் படமாக்கிய ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும், அதை சரியான விகிதத்தில் தொகுத்து கொடுத்திருக்கும் புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பும் நன்று.

 

+ பாரதிராஜா : பல கிராமத்து கதையை பின்னாலிருந்து சொன்ன பாரதிராஜா, இம்முறை, கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். காமெடி காட்சிகளில் பட்டையை கிளப்பும் இவர், ஹீரோவுக்கு அறிவுரை கூறும் காட்சியில், ஆசான் உருவம் எடுக்கிறார்.

 

பலவீனம் . . .

 

– திரைக்கதை : இறுதிவரை நோக்கமின்றி பயணிக்கும் திரைக்கதை, படத்திற்கு மிகப்பெரும் பலவீனம். பருத்திவீரன் சாயலில் செல்லும் திரைக்கதை, திடீரென பல திருப்பங்கள் எடுத்து, ஜாதி, மனிதம் என்று சென்றுகொண்டிருக்க, ‘முதல்பாதியில் நாம் பார்த்த படம் தானா இது?’ என்று ரசிகர்கள் குழம்புவதை காண முடிந்தது.

 

– இசை : கார்த்திக் ராஜா’வின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணியில் இளையராஜாவின் சாயல் தூக்கல், இடையிடையே இல்லயராஜாவின் பாடல்களும் பின்னணியில் ஒலிக்க, பின்னணியில் தனித்தன்மை சுத்தமாக மிஸ்ஸிங்.

 

கதாநாயகி அம்ரிதா, நடிப்பில் ஓகே என்றாலும், அவரின் கதாபாத்திரதை கடைசீவரை புரிந்துகொள்ள முடிவதில்லை. ‘கல்லூரி’ அகில், ஒரு முக்கியவேடத்தில் தோன்றி, முறைத்துக்கொண்டு வந்து போகிறார். கவிதா பராதி, ஜெயச்சந்திரன், சிந்து, நிதிஷ் என அனைவரும் அளவான நடிப்பை தந்திருக்கிறார்கள். சிங்கம்புலி, ஒரு காட்சிக்கு மட்டும் தோன்றுகிறார். நாயகனாக விஜய் யேசுதாஸ், முந்தைய படத்திலிருந்து நல்ல முன்னேற்றம் என்றாலும், காதல் காட்சிகளிலும், இறுதி காட்சிகளிலும் அவர் முகபாவனைகள் சொதப்பல். அவர் ஏற்ற கதாபாத்திரத்தை படம் முழுவதும் சுமக்க முடியாமல் அவர் தள்ளாடுவதை காண முடிந்தது. இருந்தும் அவர் நடிப்பு பரவாயில்லை.

 

போரின் கொடுமைகளைக்கண்டு அமைதிவழியில் திரும்பிய புத்தரின் கதையைத்தழுவி எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும், முதல்பாதி சம்பவங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் செல்லும் இரண்டாம்பாதி. வெகுளியாக காட்டப்படும் பாரதிராஜா, திடீரென பொங்கி சமுதாயகருத்து பேசுவது என்று படத்திலேயே ஏகப்பட்ட முரண்கள். ஜாதிக்கலவரம், உறவுகள், துரோகம் என்று பயணிக்கும் கிளைமாக்ஸின் போக்கு, ராசிகர்களை கடுப்பேற்றும் ரகம்.

 

மொத்தத்தில் : கிராமத்து வழவயலையும், அதன் ஆழங்களையும் நன்றாக பிரதிபலித்திருக்கும் இயக்குனர், இரண்டாம்பாதியில் போக்கையும், ஆமைவேக திரைக்கதையையும் சிறிது பழுது பார்த்திருந்தால், இந்த படைவீரனை, மேலும் மெருகேற்றி இருக்கும்.

 

மதிப்பீடு : 2 / 5 . . .

Share