ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – படம் எப்படி ?

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – படம் எப்படி ?

இயக்கம் : P. ஆறுமுககுமார்

நடிப்பு : விஜய்சேதுபதி

                 கெளதம் கார்த்திக்

                 நிஹாரிகா

                 காயத்ரி

                 ரமேஷ் திலக்

                 டேனியல் ஆன்னி

                 ராஜ்குமார்

                 விஜி சந்திரசேகர்

ஒளிப்பதிவு : ஸ்ரீசரவணன்

படத்தொகுப்பு : R. கோவிந்தராஜ்

இசை  : ஜஸ்டின்பிரபாகரன்

தயாரிப்பு : 7C என்டேர்டைன்மெண்ட்ஸ்

                        அம்மா நாராயணா புரொடக்ஷன்ஸ்

நீளம் : 148 நிமிடங்கள்

கதைச்சுருக்கம் : கொள்ளையடிப்பதையே கொள்கையாகக்கொண்ட, ஏமசிங்கபுரம், என்கிற மலைவாழ் கிராமத்துடைய தலைவர் எமன் (விஜய்சேதுபதி), கொள்ளையடிக்க நகர்ப்புறம் வந்தபொழுது, ஒரு குடும்பப்புகைப்படத்தில் ஹீரோயின் சௌமியாவின்  (நிஹாரிகா) புகைப்படத்தைக்கண்டு, அவரை தன் மனைவி என்று கூறி, தனது கிராமத்திற்கு கடத்தி செல்கிறார். இதை அறிந்த சௌமியாவின் காதலர் ஹரிஷ் (கெளதம் கார்த்திக்), எப்படி அவளை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.

பலம்  . . .

+ கதைக்கரு : கதையளவில், ராமாயணத்தை தழுவி அமைக்கப்பட்டிருந்தது இப்படத்தின் கரு, அக்கருவை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் படத்திற்கு பெரிய பலம். துரதிஷ்டவசமாக, அக்கட்சிகள் கடைசி நிமிடம் மட்டுமே கோர்க்கப்பட்டிருப்பது, நமக்கு சோதனை.

+ விஜய் சேதுபதி : இவரின் திரைத்தோற்றமும், நடிப்பும் படத்திற்கு பெரிய பலம். இவருக்காக அமைக்கப்பட்டிருந்த பில்டப் காட்சிகள் அனைத்தும் அருமை.

+ கலை & ஒளிப்பதிவு : ஒரு சிறிய சைஸ் கிராமத்தையே கண்ணுக்கு விருந்தாக்கி இருக்கும் கலை இயக்குனருக்கு ஒரு சபாஷ். ஊருக்கு நடுவே இருக்கும் எமன் சிலை அம்ம்ம்ம்மோய்!!… எத்தனை நேர்த்தி. அதனை செட் நுணுக்கங்களையும் சரியாக லைட்டிங் செய்து பதிவிட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன். விஜய் சேதுபதியும், எமன்சிலையும்  ஒரே பிரேம்மில் தெரியும் இடம் அடடடடடா!!!….

+ இசை : ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், பின்னணி இசையில், புது சப்தங்களை கோர்த்து, புதுரத்தம் பாய்ச்சி இருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம்.

பலவீனம் . . .

காதல் காட்சிகள் : கெளதம் கார்த்திக்நிஹாரிகா இடையேயான காதல்காட்சிகள், முற்றிலும் செயற்கையாக தோன்றுவதால், படத்தின் முக்கிய பகுதிகளில் அழுத்தம் சற்று குறைவு.

கதாபாத்திர வடிவமைப்பு : விஜய் சேதுபதியைத்தவிர மற்ற எந்த கதாபாத்திரமும் வலுவாக இல்லை. அவர்கள் செய்யும் செயல்கள் யாவும், ஸ்கூல் ட்ராமா ரகம். அதுவும் ஹீரோயினின் பெற்றோர்களாக வரும் இருவரின் செயல்களும் எரிச்சலூட்டும் ரகம்.

திரைக்கதை : காமெடி காட்சிகளில் கூட தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகள், நம்மை வெறுக்க வைக்கிறது. கதை சொல்லவேண்டிய தருணத்திலெல்லாம்நல்ல நாள் பாத்து சொல்றேன்என கதாபாத்திரங்கள் கூறும் ஒவ்வொரு இடத்திலும் நம் பொறுமை எல்லை மீறுவதை தவிர்க்க முடிவதில்லை.

ஹீரோயின் நிஹாரிகா, முகபாவனைகளில் சொதப்பினாலும், அவற்றை அழகாக சமாளிக்கும் கலையை அறிந்தவராக இருக்கிறார், நன்று. பல படங்களில் ஹீரோயின் அவதாரம் எடுத்த காயத்ரிக்கு, இரண்டாம் ஹீரோயின் கதாபாத்திரம். கவுதம் கார்த்திக்கை இதைவிட அழகாக ஒரு காமெடி படத்தில் உபயோகித்து இருக்க முடியாது, ஆனால் அவரின் செய்கைகளை பார்க்கையில் கொஞ்சம் வெறுப்பு வரவே செய்தது. ஹீரோவின் நண்பனாக டேனியல் ஆன்னி மற்றும் விஜய்சேதுபதி கூடவே வரும் ராஜ்குமார் கதாபாத்திரம் சூப்பர். விஜி சந்திரசேகர் போன்ற நடிகர்களை வெகுநாள் கழித்து திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி.

இயக்குநர் ஆறுமுக குமாரின், தனித்தன்மை வாய்ந்த முயற்சியை பாராட்டினாலும், இவர் காமெடியை கையாள்வதில் கொண்ட தாலாட்டம், திரையைத்தாண்டி கொஞ்சம் வெளியே தெரியவும் செய்தது. வெறும் காமெடி என்றில்லாமல், கடைசீ 20 நிமிட கதையைக்கூட படம் முழுக்க கொண்டுசென்றிருந்தால், இன்னும் மேம்பட்ட படமாக வந்திருக்கும் இந்தநல்ல நாள் பாத்து சொல்றேன்‘.

மொத்தத்தில் : காமெடி என்று சொன்னால் கூட சிரிக்கத்தயாராகும் நபராக நீங்கள் இருப்பின், இப்படத்தை நீங்கள் ஒரு முறை பார்க்கலாம்

மதிப்பீடு : 2 / 5 . . .

Share