தானா சேர்ந்த கூட்டம் – படம் எப்படி ?

தானா சேர்ந்த கூட்டம் – படம் எப்படி ?

இயக்கம் : விக்னேஷ்சிவன்
நடிப்பு : சூர்யா
ரம்யாகிருஷ்ணன்
செந்தில்
சுரேஷ் மேனன்
கீர்த்தி சுரேஷ்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாந்த்
இசை : அனிருத்
தயாரிப்பு : KE ஞானவேல் ராஜா (ஸ்டூடியோ க்ரீன்)
நீளம் : 138 நிமிடங்கள்

1987’ல் நடந்த போலி ரைடுகளை சுற்றிய கற்பனை பின்னல்களே இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’.

கதைச்சுருக்கம் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலி சிபிஐ ரைடு நாடகங்களை அரங்கேற்றும் ‘நச்சினார்கினியன் (சூர்யா) & கோ’ வின் ஆட்டத்தை முடிக்க உண்மையான சிபிஐ அதிகாரிகளான உத்தமன் (சுரேஷ் மேனன்) மற்றும் குறுஞ்சிவேந்தன் (கார்த்திக்) ஆகியோர் அடங்கிய குழு எடுக்கும் முயற்சிகளும், அதன் விளைவுகளுமே திரைக்கதை.

பலம் . . .

+ சூர்யா : முழுப்படமும் இவரின் கதாபாத்திரத்தை சுற்றியே நகர்கிறது. வெகுநாட்களுக்கு பிறகு துரு துறுப்பான கதாபாத்திரத்தில் தோன்றி இருக்கும் சூர்யா, கிடைத்த இடத்திலெல்லாம் ஸ்கோர் செய்கிறார். இவரின் முந்தைய படங்களை நினைவுபடுத்தும் இவரது தோற்றம், படத்திற்கு பெரும் பலம்.

+ ஒளிப்பதிவு : படம் முழுவதும் வண்ணங்களை அடித்து தெளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இவரின் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற லைட்டிங், பீரியட் பட சாயலை கொடுப்பதுடன் கண்களுக்கு குளிர்ச்சிவூட்டுகிறது.

+ இசை : சொடக்கு பாடலுக்கு தியேட்டரே அதிருது. பின்னணி இசையின் பல இடங்களில் நமக்கு 80’ஸ் உணர்வைத்தர இவர் உபயோகித்திருக்கும் ரெட்ரோ Guitar, மற்றும் வீணை போன்ற வாத்தியங்களின் சப்தங்களும், அதை கோர்க்கப்பட்ட விதமும் சிறப்பு.

+ ரம்யாகிருஷ்ணன் : சூர்யாவுக்கு பிறகு அதிகம் ஈர்க்கும் கதாபாத்திரம், இவர்கள் இருவர்களுக்குளான காட்சிகளே படத்தின் பெரும் மைய்யப்புள்ளி. தவிர, செந்தில், சுரேஷ் மேனன் போன்ற அரிய நடிகர்களை திரையில் காண்பது மகிழ்ச்சி.

பலவீனம் . . .

– கடைசீ 15 நிமிடங்கள் : படம் முடிந்து வரும் சண்டைக்காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் எந்த விதத்திலும் படத்திற்கு உதவவில்லை. அவற்றை பாரபட்சம் பார்க்காமல் தூக்கி இருக்கலாம்.

– ஹீரோயின் : ஹீரோ உடனான காட்சிகளில் பேசும் ஒற்றைவரி காமெடி வசனங்களை தாண்டி, கீர்த்தி சுரேஷிற்கு படத்தில் வேறு வேலையில்லை. மற்றுமோர் அழகுப்பதுமை கதாநாயகி கதாபாத்திரம்.

தவிர, இடைவேளை காட்சிகளில் போலீஸிடம் ஹீரோ போனில் சவால் விடுவது, ரைட் நடத்தப்போகும் இடத்தில போகும் இடத்தில சண்டை போடுவதெல்லாம் யதார்த்த மீறல்கள்.

– கீர்த்திசுரேஷின் கல்யாண திட்டம் என்னவாயிற்று?
– ரைட் நடத்தப்போகும் அந்த வேனில் இருந்த நபர்களின் நிலைமை என்னவாயிற்று?
– ரம்யாகிருஷ்ணனின் குடும்பம் எங்கே?
– கிளைமாக்ஸில் இவர்கள்பக்கம் சாயும் போலீஸ் நபர் எங்கு எப்பொழுது இவர்களை சந்தித்தார்
– போன்ற பல கேள்விகளுக்கு விடைதெரியாமலேயே ரசிகர்களை வழியனுப்பி வைத்து விடுகிறார் இயக்குனர்.

கலையரசன், கார்த்திக், RJபாலாஜி, சத்யன், ஆனந்த்ராஜ், யோகிபாபு உட்பட எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளார். இவற்றையெல்லாம் மீறி நம்மை ஈர்ப்பது கவுதம் மேனன்’னின் பின்னணிக்குரல். படத்தொகுப்பாளர் ஸ்ரீகரப்ரசாத்’தின் கைவண்ணத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் வரை சீராக செல்கிறது, inteview காட்சிகளும் பின்னர் வரும் விசாரணை காட்சிகளும் நன்று.

கொத்து கொத்தான நடிகர்கள், எல்லாருக்கும் அவர்கள் பாணி காட்சிகள் என்று தராசை சமப்படுத்தி ஜெயிக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் . நச்சினார்க்கினியன், குறுஞ்சிவேந்தன், உத்தமன் என்ற கதாபாத்திர பெயர்களில் ஆரமித்து பல இடங்களில் தனித்துவமாக தெரிகிறார். படத்தின் பல இடங்களில் தென்படும் புத்திசாலித்தனத்தை, கொஞ்சம் கிளைமாக்ஸ் கட்சிகளுக்கும் செலவிட்டு இருக்கலாம்.

மொத்தத்தில் : வேகம் குறையும் இரண்டாம்பாதி, பொறுமையை சோதிக்கும் பாடல் காட்சிகள், இழுவையான கிளைமாக்ஸ், இவற்றை தவிர்த்து பார்த்தல், தானா சேர்ந்த கூட்டம், செழிப்பாக இழைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு சராசரி கமர்சியல் படைப்பு.

மதிப்பீடு : 3 / 5 …

Share