அருவி – படம் எப்படி ?

அருவி – படம் எப்படி ?

இயக்கம் : அருண் பிரபு புருஷோத்தமன்

நடிப்பு : அதிதி பாலன்

லட்சுமி கோபாலகிருஷ்ணன்

மதன்குமார் தக்ஷிணா மூர்த்தி

இசை : பிந்து மாலினி – வேதாந்த பரத்வாஜ்

ஒளிப்பதிவு : ஷெல்லே காலிஸ்ட்

படத்தொகுப்பு  :  ரேமண்ட் டெரிக்

தயாரிப்பு : SR பிரபு

SR  பிரகாஷ்

நீளம் :141 நிமிடங்கள்.

 

வாழ்வின் கடைசீ கட்டத்தில் பரிதவிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.

 

கதைச்சுருக்கம் : ஒரு கொடியநோயில் சிக்கித்தவிக்கும் 24 வயதான அருவி, தன் வாழ்க்கையை கெடுத்தது 3 நபர்கள்தான் என்று ஒரு டிவி நிகழ்ச்சியில் அடையாளம் காட்ட, அதற்க்கு முன்னும் பின்னும் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் திரைக்கதை.

 

முதல் அரை மணிநேரம் நெடு நெடு வென வளரும் திரைக்கதை, பிறகு நிதானமாக பயணிக்க, இடைவேளை திருப்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் காமெடி காட்சிகள் கதையோடு ஒன்றாமல் போக, ஒரு நீண்ட ஆவணப்பட பயணத்திற்கு பிறகு சுபத்துடன் முடிகிறது படம்.

 

பலம் . . .

 

+ அதிதி பாலன் : ‘மூர்த்தி சிறுசு, கீர்த்தி பெருசு’, வாக்கியத்தின் சான்றாய், வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் படம் முழுவதையும் தன் தோளில் சுமந்து சாதித்து காட்டி இருக்கிறார். கருவியாகவே வாழ்ந்திருக்கிறார், இரண்டாம்பாதியில் வரும் காட்சிகளுக்காக தன் உடலையும் வருத்திக்கொண்டு, நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்து இருக்கிறார்.

 

+ இசை : பாடல்கள் அனைத்தும் #Montage ரகம் தான் என்றாலும், படத்தோடு ஒன்றிவிடுகிறது. பிந்து மாலினி – வேதாந்த பரத்வாஜ் அவர்களின் பின்னணி இசையில் நிறைய இடங்களில் புதுமை, பல இடங்களில் திகில்.

 

+ முதல் பாதி : படத்தின் முதல்பாதியே நமக்கு ஒரு முழுமையான படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறது. இடைவேளையில் வரும் திருப்பம், நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறது.

 

+ வசனங்கள் : இடைவேளைக்கு முன்னர் அருவி பேசும் நீளமான வசனம் உற்பட நிறைய இடங்களில் வசனங்கள் சரவெடி, அரசியல் நய்யாண்டி வசனங்களும், அவற்றை படமாக்கப்பட்ட விதமும் மிகச்சிறப்பு.

 

பலவீனம் . . .

 

– இரண்டாம்பாதி : ஆமைவேக இரண்டாம்பாதி தான் படத்தின் பெரும் பலவீனம். ஆவணப்படம் போல் நகரும் காட்சிகள், அனுதாபத்தை காட்டிலும், நெருடலையே பெரிதாக சம்பாதிக்கிறது. சில இடங்களில் லாஜிக் கேள்விகள் நம்மை ஆட்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.

 

படத்தின் முதல் 30 நிமிடத்தில் அருவியின் 24 வருட வாழ்க்கையும் வெவ்வேறு montage’களாக சித்தரித்த விதம் அருமை. வசனங்கள் பெரிதாக இல்லாத அப்பகுதிகளில், ஷெல்லே காலிஸ்ட்’டின் ஒளிப்பதிவும், ரேமண்ட் டெரிக்’கின் படத்தொகுப்பும் திரைமொழியில் சங்கமித்த விதம் அருமை. இடையிடையில் விடப்பட்டிருந்த முதல்பாதியில் கதையை, இடைவேளையில் முழுதாக்கி கோர்க்கப்பட்ட விதத்திற்கு ஸ்பெஷல் பூங்கொத்து.

 

லட்சுமி கோபாலஸ்வாமி தவிர, படத்தில் நடித்த பல கதாபாத்திரங்கள் புதுமுகங்களே. இருப்பினும், திரையில் பங்களித்த எல்லோரும் சிறப்பாக நடித்திருப்பதன் முழு பாராட்டும் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனையே சாரும். அரவாணியை ஒரு முழு நீல கதாபாத்திரமாக காட்டுவதிலும், உயர் வர்க்கத்தினர் பலரின் அடக்குமுறையை மறைமுகமாக குறித்து காட்டுவதிலும் இவரின் திரைக்கதை நுணுக்கத்தின் பலம்.

 

மொத்தத்தில் : இரண்டாம்பாதி குறைகளை புறம்தள்ளி பார்த்தல், இந்த படம் உங்களுக்கு நல்லதோரு அனுபவத்தை பரிசளிக்கும். அதீத melodrama காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால், இப்படத்தை இன்னும் கூட ரசித்திருக்கலாம்.

 

மதிப்பீடு : 3 / 5 . . .

Santhosh AVK

Share