அறம் – படம் எப்படி ?

அறம் – படம் எப்படி ?

 

 

இயக்கம் : கோபி நயினார்

நடிப்பு : நயன்தாரா

துரைராஜ்

சுனு லட்சுமி

விக்னேஷ்

சுரேஷ்

வேலராமமூர்த்தி

பழனி பட்டாளம்

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

படத்தொகுப்பு : ரூபன்

இசை : ஜிப்ரான்

தயாரிப்பு : கொட்டப்பாடி J ராஜேஷ்.

நீளம் : 120 நிமிடங்கள்.

 

‘அரசாங்கம் சீராக, முதலில் அதிகாரிகள் மாறவேண்டும்’ என்கிறது அறம்.

 

கதைச்சுருக்கம் :

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற துடிக்கும் ஒரு அரசங்க அதிகாரியின் மனப்போராட்டமும், மகளை பறிகொடுத்த மனநிலையில் இருக்கும் பெற்றவர்களின் வாழ்க்கை போராட்டமும், இறுதியில் நடந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது திரைக்கதை.

 

காட்டூர் கிராமத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வு ஒரு புறமும், இந்நிகழ்வில், ஆட்சியர் மதிவதனி  (நயன்தாரா). அதிகார துஷ்ப்ரயோக செய்ததாக புகார் வர அவர் விசாரிக்கப்படுவது ஒருபுறமும், இவற்றையெல்லாம் கழுகுப்பார்வையில் கண்டு கருத்து சொல்லும் ஊடகக்காட்சிகள் ஒருபுறம் என்று, மூன்று தளங்களில் மாறி மாறி பயணிக்கிறது படம். முதல் 30 நிமிடம் மெதுவாக நகர, பின்னர் சூடுபிடிக்கிறது திரைக்கதை, இடைவேளை தாண்டி மீண்டும் ஏற்படும் தொய்வை இறுதி காட்சிகள் ஏற்படுத்தும் உருக்கமும், நெகிழ்வும் எல்லாவற்றையும் மறக்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது.

 

பலம் . . .

 

+நயன்தாரா : கண்ணியமான உடையுடன், கம்பீர தோற்றத்தில் வரும் ஆட்சியர் கதாபாத்திரத்தில் கண் அசைவுகளிலும், முகபாவனைகளிலும் மனதை கவர்கிறார் நயன். இறுதிக்காட்சிகளில் இவரது நடிப்பு கலங்க வைக்கிறது.

 

+வசனம் : ஓர் இடத்தில நடக்கும் நிகழ்வாக இருந்தாலும், இக்கால கிராமங்களில் போராட்டத்தை பிரதிபலிக்கும் வசனங்கள் பளீர். ‘அரசாங்கம்ன்னா மக்கள் தான்னு நினைக்குறேன்’, ‘நிலவுக்கு போறவனைவிட, ஆழ்த்துளை கினருக்குள்ள போயிட்டு வர்றது தான் சாதனை’ போன்ற வசனங்கள் நன்று.

 

+இசை : ‘தோரணம் ஆயிரம்’ பாடல் காதுகளில் ரீங்காரமிடுகிறது. படத்தில் பல்வேறு இடங்களில் அதே பாடல் பின்னணியில் ஒலிப்பது பலம். ஜிப்ரானின் இசை முதிர்ச்சி, கிளைமாக்ஸ் காட்சியில் வெளிப்படுகிறது, அருமை.

 

பலவீனம் . . .

 

– திரைக்கதை ஓட்டம் : மெதுவாக நகரும் திரைக்கதை, படத்திற்கு பெரிய பலவீனம். இப்படம், பெருவாரியான கமர்சியல் ரசிகர்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டால் அதில் ஆச்சரியம் இல்லை.

 

பெறோர்களாக வரும் துரைராஜ், சுனு லட்சுமி, சகோதரர்கள் விக்னேஷ், சுரேஷ் என, நடித்த எல்லா நட்சத்திரங்களும் நடிப்பில் மிளிர்கிறார்கள். தன்ஷிகா’வாக வரும் பெண்குழந்தை’க்கு விருது நிச்சயம். மூன்று தளங்களில் நடக்கும் கதையை Non-Linear’ராக கோர்த்து, சிறப்பாக  தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன், படத்தின் நீளம் படத்திற்கு மற்றொரு பலம். ஒளிப்பதிவாளர் ஓம் ப்ரகாஷின் வான்வழி காட்சிகளும், ஆழ்துளை கிணறு கட்சிகளும் சிறப்பு.

கதையை விட்டு துளியும் நகராமல், தண்ணீர் பிரட்சனை, விவசாயிகளின் கவலை, மீத்தேன் எரிவாயுவின் ஆபத்துக்கள் என்று, அங்கங்கே சுட்டிக்காட்டி செல்லும் இயக்குனர் கோபிநாயரின் எழுத்தின் ஆழம் சிறப்பு. ஆங்காங்கே தலைகாட்டும் அரசியல்வாதி கதாபாத்திரங்கள், நிஜங்கள் பிம்பமாக பிரதிபலிக்கிறார். குழந்தையை மீட்கும் இறுதிக்காட்சிகள் நம் கண்களை ஈரமாக்குவது நிச்சயம்.

 

மொத்தத்தில் : மெதுவாக நகரும் திரைக்கதையும், ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகளையும் விளக்கிப்பார்த்தால், இது ஒரு நல்ல படைப்பு என்பதில் சந்தேகமில்லை.

3.5 / 5

Share