மாம் – படம் எப்படி ?

மாம் – படம் எப்படி ?

இயக்கம் : ரவி உதயவார்

நடிப்பு : ஸ்ரீதேவி, அக்ஷய் கண்ணா, நவாஸுதீன் சித்திக், சாஜல் அலி, அத்னான் சித்திக், அபிமன்யு சிங்

இசை : AR. ரகுமான்

ஒளிப்பதிவு : அனைய்  கோஸ்வாமி

படத்தொகுப்பு : மோனிஷா .R. பல்தாவா

கலை : வாசுதா சக்லானி Vasudha Saklani

தயாரிப்பு : போனி கபூர்

நீளம் : 147 நிமிடங்கள் (2 மணி 27 நிமிடங்கள்).

 

இந்திய சினிமாவில், பல மொழிகளிலும், பல்வேறு ரூபங்களிலும், அடித்து துவைக்கப்பட்ட நிர்பயா வழக்கின் அன்னை வடிவமே இப்படம்.

 

கதைச்சுருக்கம் : சட்டப்படி தண்டிக்க இயலாத தன் மாற்றான்மகளின் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளை, சட்டத்தை தன் கையில் எடுத்து தண்டிக்கும் ஒரு மாற்றாந்தாயின் பழிவாங்கள் படலமே இந்த அம்மா.

 

சுமார் 147 நிமிடங்கள் ஓடும் இப்படம், சுமாரான முதல்பகுதியும், நீளமான இரண்டாம்பாதியும் கொண்டது. முதல் 20 நிமிடங்கள் ஓடும் ஒவ்வொரு காட்சியும் ஒரு வித பதட்டத்தோடு முடிய, பின்னர் வரும் கற்பழிப்பு காட்சியில் சூடு பிடிக்கும் திரைக்கதை, இடைவேளை வரை தாக்கு பிடிக்கிறது. இரண்டாம் பாதியின் தொடக்க காட்சிகளில் மிளிரும் புத்திசாலித்தனம், பின்னர்வரும் காட்சிகளில் காணாமல் போக, ஏனோ தானோ என்று ஓடி முடிகிறது படம்.

mom-2

பலம் . . .

+ தேர்ந்த தொழில்நுட்பம் – மஞ்சள் மற்றும் சிகப்பில் ஒளிரும்  அனைய்  கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் ஒரு வித பதட்டம் தொற்றிக்கொள்கிறது. மோனிஷாவின் படத்தொகுப்பில், முதல்பாதி நன்று, நீளமான இரண்டாம்பாதி காட்சிகளை நறுக்கி இருக்கலாம். வாசுதா சக்லானியின் கலையில் நீதிமன்ற அமைவு புதுமை.

+ ஸ்ரீதேவி & சாஜல் அலி – தன் மகள் கற்பழிக்கப்பட்ட சேதி தெரிந்ததும் கதறி அழும் காட்சியில் துடங்கி பல இடங்களில் முழு மதிப்பெண் வாங்குகிறார் ஸ்ரீதேவி. படம் நெடுக ‘டீச்சர்’ என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே கூப்பிடும் சாஜல் அலி, உண்மை தெரிந்ததும் இறுதிக்காட்சியில் உருகவைக்கிறார்.

+ சில திரைக்கதை துணுக்குகள் – ஆப்பிள் கொட்டையிலிருந்து சயனைடு தயாரிப்பதும், அதை தொடர்ந்து வரும் கட்சிகளும் சிறப்பு. பாட்டிலில் தண்ணீர் நிரம்பும் போக்கின் மூலம் ஸ்ரீதேவியின் மனநிலையை வெளிப்படுத்தும் இடங்கள் அருமை.

mom-3

 

பலவீனம் . . .

தூசுபடிந்த திரைக்கதை – பழக்கப்பட்ட கதை, அதைவிட பழமையான திரைக்கதை என்று, பேப்பரிலேயே தூசிபடிந்து காணப்படுகிறது இப்படம். பாதிக்கப்பட்ட அன்னை, பழிவாங்க முடிவெடுக்கவே இடைவேளை ஆகிவிடுகிறது, பின்னர் வரும் காட்சிகளை யூகிக்க நீங்கள் வருடத்திற்கு 10 படம் பார்த்திருந்தாலே போதுமானது.

இரண்டாம்பாதி – பழிவாங்கும் படலமாயினும், நம்ம அளவுக்குமீறி சோதிக்கிறது இரண்டாம்பாதி. இடையில் திடுக்கென்று முளைக்கும் வில்லனும், செல்லரித்த ஆங்கிலப்பட பாணி பனிக்கட்டி கிளைமாக்ஸும் ‘மிடியில’ ரகம்.

mom-4

கதாபாத்திர வடிவமைப்பு – ஊரே எதிர்பார்த்த நவாஸுதீன் சித்திக் மற்றும் அக்ஷய் கண்ணாவின் கதாபாத்திரங்களில் 80’ஸ் சாயல். இருவருக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. போலீஸ் படையின்றி தன்னந்தனியே கிளைமாக்ஸில் முளைக்கும் Akshaye Khanna, சோட்டா பீமை மிஞ்சிகிறார். ஸ்ரீதேவி தவிர எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்க வில்லை.

 

அப்பார்ட்மென்டில், முகத்தில் அடிவாங்கும் ஸ்ரீதேவி, அடுத்த காட்சியில் அதன் தடமே தெரியாமல் வருவதும், இஷ்டத்துக்கு சாவிபோட்டு எல்லா இடத்திலும் நுழைவதும் தொடங்கி, பல இடங்களில் அத்துமீறும் லாஜிக்கை கொஞ்சம் கவனித்து இருக்கலாம். AR ரஹ்மானின் இசையில் வழக்கமான பாதிப்பு மிஸ்ஸிங், இடதுகையிலேயே வாசித்திருப்பார் போலும்.

mom-5

“இந்த நாட்டுல  ரேப் பண்ணா தப்பில்லை, ஆனா ரேப் பண்ணவங்கள அடிச்சா மட்டும் தப்பா?”

” உங்க பொண்ணு பார்ட்டிக்கு போய் குடிச்சதும் தப்பு தானே?”. “ஏன் பொண்ணு பண்ணது தப்புன்னா, அவங்க பண்ணது பாவம். தப்புக்கு பாவத்துக்கு நடுவுல நீங்க எத தண்டிப்பீங்க?”

– போன்ற வசனங்கள் நெத்தியடி.

 

திரைக்கதையில் அங்கங்கே நம்மை கவனிக்கவைக்கும் இயக்குனர் ரவி உதயவார், புதுமைபுகுத்தவேண்டிய பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டார். திரைக்கதையில் சில மாறுதல்களையும், கதாபாத்திர வடிவமைப்பில் கவனத்தையும், சிறிது நீலக்குறைப்பையும் செய்திருந்தால், இந்த அன்னையை முழுமையாக ரசித்து இருக்கலாம்.

 

மொத்தத்தில் : சில பெரிய ஓட்டைகளை கண்டுகொலாமல், ஒரு சராசரியான பழிவாங்கும் கதையை பார்க்க விரும்பினால், ஒருமுறை பார்க்கலாம் இந்த அம்மாவை.

 

RATING : 2.25 / 5 . . .

Santhosh.A.V.K

Share