ஜூன் 16-ல் வெளியாகிறது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘மரகத நாணயம்’

ஜூன் 16-ல் வெளியாகிறது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘மரகத நாணயம்’

‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ள புதிய படம் ‘மரகத நாணயம்’.

இந்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் ஆதி ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ் மற்றும் கலை இயக்குநர் என்.கே.ராகுல் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘மரகத நாணயம்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

IMAG8705

படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.ஷரவண் பேசும்போது, “சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

இதுவொரு பேண்டசி, அட்வென்ச்சர், காமெடி கலந்த கதை. 1100, 1992, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் இந்தப் படம் நிகழ்கிறது. காஸ்ட்லியான ஒரு மரகத நாணயத்தைத் தேடும் படலம்தான் படத்தின் திரைக்கதை. ஹீரோ ஆதி டீமும், வில்லன் ஆனந்தராஜ் டீமும் இந்த மரகத நாணயத்தை மும்முரமாகத் தேடுகிறது. இறுதியில் அது யாருடைய கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

அந்த நாணயத்துக்குள் அதிர்ஷ்டம், அமானுஷ்யம் எல்லாமும் அடங்கியிருக்கிறது. அது இருக்கிற இடத்தில் பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அவ்வளவு ஆபத்தான அதனை பணத்துக்காக அடைய முயற்சித்து இதனால் இவர்கள் பாடு என்னவாகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம்.

ஹீரோயின் நிக்கி கல்ரானிக்கு இதில் முக்கியமான வேடம். அவர்தான் ஆவியா.. அல்லது பேசத் தெரிந்தவரா என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ்.

5T0A4716

ரசிகர்கள் இதுவரை ஆதியை ஒரு அதிரடி நாயகனாகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் எங்களின் இந்த ‘மரகத நாணயம்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆதியை அவர்கள் காண இருக்கிறார்கள்..” என்கிறார் ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.கே.சரவண்.

படம் பற்றி ஹீரோவான ஆதி பேசும்போது, “திரைப்படங்களில் பொதுவாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும்  மசாலா காட்சிகள் இந்த படத்தில் இருக்காது. ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடிவரை, ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள். இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை நாங்கள் எங்களின் ‘மரகத நாணயம்’ படத்தில் உள்ளடக்கியிருப்பதே அதற்கு காரணம்.

IMAG5187

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரையிலும் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்வகையில்தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. திரையுலகத்தின் பல்வேறு தரப்பினரும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி பேசி வருவது எங்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

என்னுடைய  புதிய அவதாரத்திற்கு  பிரகாச வெளிச்சத்தை  இந்த ‘மரகத நாணயம்’ ஏற்படுத்தி தரும். படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கான விளம்பர வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கிறோம். நிச்சயம் ரசிகர்களை எங்களது மரகத நாணயம் கைப்பற்றும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Share