குடும்பங்கள் கொண்டாடும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக வந்து படத்தை ரசித்து வருகிறார்கள். படம் ரிலீஸுக்கு முன்பே தமிழ்நாடு முழுக்க சுற்றி படத்தை விளம்பரப்படுத்தினர் நாயகன் ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர். படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்து ரசித்து, அவர்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இந்நிலையில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது.
இயக்குனர்கள் கமல்ஹாசன் பிரியதர்ஷனிடம் தொழில் கற்று இந்த படத்தின் மூலம் இயக்குனராகி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் ஐக் பேசும்போது, “பல நண்பர்கள் எனக்கு ஃபோன் பண்ணி டிக்கட் கிடைக்கல, வாங்கி கொடுங்கணு கேட்டப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ராதாரவியின் ஆதரவுக்கு ரொம்பவும் நன்றி. எனக்கு வாய்ப்பு கொடுத்த மகேந்திரன், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீக்கு நன்றி” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, “ஷூட்டிங்கில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. படத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த வாழை இலை காமெடி காட்சிக்கு நாங்கள் பட்ட பாடு எனக்கும், ஜீவா சாருக்கும் தான் தெரியும். கிளைமாக்ஸ் காட்சியும் மறக்க முடியாத அனுபவம். என் மகள் படம் பார்த்து விட்டு ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பேசினாள். வாசிங் மெஷின் காமெடி சீனுக்கு வரும்போது உள்ளுக்குள்ள பதற்றமா இருந்திச்சு. ஆனா அது தெரியல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள்” என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது, “ஐக் படம்னு சொன்னவுடனே வேற மாதிரி படமா இருக்கும்னு தான் நினைச்சேன். ஆனா அதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பம், உணர்வுப்பூர்வமான கதையை இயக்கியுள்ளார். மிக பிரமாண்டமான யுவன் சங்கர் ராஜா லைவ் ஷோவை ஐக் தான் இயக்கியிருந்தார். அவ்ளோ பெரிய ஷோவையே நடத்தி முடிச்சவர், ரொம்ப திறமையானவர். இவ்ளோ நடிகர்கள் நடித்திருந்தாலும் 55 நாட்களில் படத்தை முடித்தது ஐக்கின் திறமைக்கு உதாரணம். தம்பி ராமையா தவிர்த்து மற்ற நடிகர்களோடு முதல் முறையா நடிக்கிறேன், அது ஒரு புது அனுபவம். ரசிகர்கள் அவ்வளவு ரசிக்கிறார்கள், எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விஜய் சிங், அட்லீ ஆகியோருக்கும், ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி” என்றார்.
Share
















Social