ஆண்டவன் கட்டளை – படம் எப்படி?

ஆண்டவன் கட்டளை – படம் எப்படி?

குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதியும், அவர் நண்பர் யோகி பாபுவும் வேலைக்காக லண்டனுக்கு செல்ல முடிவு செய்து இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று ஏஜென்ட் கூறுவதை நம்பி, இருவரும் தங்களது பாஸ்போர்ட்டில் மனைவி இருப்பதாக ஒரு பொய்யான பெயரை போடுகிறார்கள்.

விஜய் சேதுபதி தனது பாஸ்போர்ட்டில் கார்மேகக் குழலி என்று தனது மனைவி பெயரை குறிப்பிடுகிறார். விசா இண்டர்வியூவில் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்க இதனால் விரக்தியில் இருக்கும் விஜய் சேதுபதி, நாசரின் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். இந்நிலையில், நாசர் லண்டனில் நாடகம் நடத்த விஜய் சேதுபதி உள்ளிட்ட தனது கலைஞர்களை அழைத்துக் கொண்டு போக முடிவு எடுக்க, அனைவரிடமும் பாஸ்போர்ட்டை தயார் செய்யும்படி கூறுகிறார். அங்கு வேலை செய்யும் பூஜா தேவாரியா, விஜய் சேதுபதியின் பாஸ்போர்ட்டில் இருக்கும் மனைவியை பற்றி கேட்கிறார். பொய்யான தகவல் பற்றி சொல்ல, இது பெரிய பிரச்சினையாகிவிடும் என்று விஜய் சேதுபதியை எச்சரித்து பெயரை எப்படியாவது நீக்கிவிட சொல்கிறார்.

விஜய் சேதுபதியும் அந்த பெயரை நீக்குவது பற்றி வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார். அதே பெயருடைய பெண்ணை தேடிக் கண்டுபிடித்து மனைவியாக நடிக்க வைத்து விவகாரத்து வாங்கிவிட்டால் பாஸ்போர்ட்டிலிருந்து பெயரை நீக்கிவிடலாம் என்று சொல்ல கார்மேகக் குழலி என்ற பெயர் இருக்கக்கூடிய பெண்ணை தேடி அலைகிறார். அப்போது, டிவியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் ரித்திகா சிங்கின் பெயர் கார்மேக குழலி என்பதை அறிந்து, அவரை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைக்கிறார்கள். அதன்பின் விவாகரத்து கிடைத்ததா, லண்டன் சென்றாரா என்பதே மீதிக்கதை.

ritika-singh-aandavan-kattalai-1

நமக்கான எந்த ஒரு அடையாளத்தையும் சட்ட திட்டங்களுக்குட்பட்டு அதற்கான நடைமுறைகளை பின்பற்றுவதே நல்லது. மீறி குறுக்குவழியை தேடுவது எப்படியெல்லாம் பிரச்சனையில் கொண்டுபோய் விடும் என்பதை ஒரு அருமையான கதையாக கோர்த்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

முக்கியமாக சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது எத்தனை கஷ்டம் என்பதையும் அநியாய யூனிட் கரண்ட் வழிப்பறி பற்றியும் அழகாக காட்டியுள்ளார். அதேநேரத்தில் விவாகரத்து பற்றி இன்றைய சூழலில் வாழும் தம்பதிகளுக்கு அறிவுரை கூறிய விதமும் அருமை.

நல்லவனாக, உண்மையானவனாக வாழ விரும்பினாலும் சூழ்நிலையால பொய்களைச் சொல்லி அதனால் சங்கடத்தில் மாட்டிக்கொண்டு நெளியும் கதாபாத்திரத்தை வழக்கம்போல் சரியாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. எந்த ஒரு இடத்திலும் குறை சொல்ல முடியாத எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வாய் பேச முடியாதவராக இவர் நடிக்கும்போது திரையரங்கமே களைகட்டுகிறது.

‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங்கும், விஜய் சேதுபதிக்கு போட்டி போடும் வகையில் நடித்திருக்கிறார். ரிப்போர்ட்டராக அவரது தோற்றம் ஒவ்வொரு காட்சிக்கும் அவரது முகபாவனை என ரசிக்க வைக்கிறார்.

நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் அலப்பறை.முதல் 40 நிமிடங்கள் அவரின் ஆட்டம்தான். இரண்டாம் பாதியில் இரண்டே காட்சிகளில் வந்தாலும் எமோஷனலான நடிப்பிலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார். வீட்டு ப்ரோக்கராக வரும் சிங்கம்புலி படத்தின் முதல்பாதியில் இன்னொரு பலம். அவர் வரும் காட்சியிலெல்லாம் தியேட்டர் சிரிப்பலையில் மூழ்குகிறது. இலங்கை தமிழராக வருபவரும் மனதை கவர்கிறார், தன் குடும்பத்தை தொலைத்து, அகதி என்று கூட சொல்ல முடியாமல் அவர் படும் கஷ்டம், மனதில் கனமேற்றுகிறது.

நாயகியின் அம்மா, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி சீனு மோகன், பெண் நீதிபதி, சீனியர் வக்கீல், அவர் உதவியாளர் வினோதினி, நாயகனின் அக்கா, மாமாவாக இயக்குனர் வெங்கடேஷ், நாடகக் குழுவில் இருக்கும் நாயகனின் நண்பன், நாயகனின் ஹவுஸ் ஓனர், அவர் மனைவி, போலி சான்றிதழ் நிறுவனம் நடத்துபவராக வரும் எஸ்.எஸ்.ஸ்டான்லி, அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் முதியவர், பாஸ்போர்ட் குற்றத்தை விசாரிக்க வரும் மலையாள அதிகாரி, என அனைவரும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாகத் தந்திருக்கிறார்கள்.

நச் வசனங்களில் ஒரு சில :
1) படிச்சா டாக்டராகலாம் படிக்கலைன்னா கல்வித்தந்தையாவே ஆகிடலாம்,
2) மொத்தத்தில் தமிழ்நாட்டில் தமிழ் பேசினா பிரச்சனை.
3) சம்பாதிக்கறது லண்டன்லயும் சௌதிலயும். ஆனா முஸ்லிமுக்கும், கிறிஸ்டீனுக்கும் வாடகைக்கு விடமாட்டாங்களா ?
4) சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட்
5) அவ்ளோ நல்லவனுகளை ஏண்டா நாட்ட விட்டு தொரத்தினோம் ?

கே-யின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையில் முழு கவனத்தையும் செலுத்தியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

அண்மைக் காலங்களில் இரண்டு மணி நேரப் படங்கள் அதிகரித்துவிட்டதால் இரண்டரை மணி நேரங்களுக்கு ஓடும் இந்தப் படம் நீளமானதாக இருப்பதுபோன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு விழிப்புணர்வு கதையை டாக்குமென்ட்ரியாக சொல்லாமல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

‘ஆண்டவன் கட்டளை’ மக்களை சென்றடைய வேண்டிய சமூக அக்கறையுள்ள படம்.

Gowtham – G.A

Share