தொடரி – படம் எப்படி?

தொடரி – படம் எப்படி?

அனாதையாக வளரும் தனுஷிற்கு ரயில் தான் எல்லாமே. ரயிலில் சாப்பாடு கொடுக்கும் கேன்டீன் பாயாக வருகிறார் தனுஷ். இந்த நிலையில் இவர் பணிபுரியும் ரயில் டெல்லியில் இருந்து சென்னை வருகிறது. இந்த பயணத்தில் அமைச்சராக ராதா ரவி பயணிக்கிறார். அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். தனுஷிற்கு கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன்
தமிழ்சினிமாவின் உன்னத கண்டுபிடிப்பான காதல் வருகிறது.

கீர்த்தி சுரேஷிற்கு பெரிய பாடகி ஆக வேண்டும் என்று ஆசை. அதை தெரிந்துகொண்ட தனுஷ் நெருங்கி பழக விருப்பப்பட்டு, தனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் சொல்லி பழகுகிறார்.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் பிரிய, அதே நேரத்தில் என்ஜின் மாஸ்டர் நெஞ்சு வலியில் இறக்க, ரயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றது. அதன்பின் தனுஷ்-கீர்த்தி சுரேஷ் ஜோடி காதல் சேர்ந்ததா? அந்த ரயில் நின்றதா? என்பதை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது திரைக்கதை.

பொதுவான கதைக்களங்களை தவிர்த்து வித்தியாசமான கதைக்களங்களில் படம் எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் பிரபு சாலமன். இந்த முறை இரயில் பெட்டியில் பயணித்திருக்கிறார்.

தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரை வைத்தே முழுப்படமும் நகர்கிறது. இருப்பினும் பார்க்க ரசிக்கும்படியே உள்ளது. இருவரது நடிப்பும் பிரமாதம். குட்டி குட்டி ரியாக்சனிலும் கவனம் செலுத்தி அப்ளாஸ் அடிக்கிறார் தனுஷ். கண்டிப்பாக கீர்த்தி சுரேஷை பாராட்டியே ஆகவேண்டும் தனுஷிற்கு நிகரான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். பாடுகிறேன் என்று செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு புல் கேரண்டி. இருப்பினும் கீர்த்தி சுரேஷ் சுதாரித்துக்கொள்ள வேண்டிய தருணமிது. இனியும் லூசுபெண்ணாக நடிப்பவர்களை தமிழ்சினிமா ரசிகர்கள் சகித்துக்கொள்ளும் வாய்ப்புகள் மிகக்குறைவு.

முதல் பாதியில் பெரிதும் கதை இல்லை என்றாலும், தம்பி ராமையா, கருணாகரன் டீம் காமெடி கரை சேர்க்கின்றது. முக்கியமாக கவிதை சொல்வதிலும், வைரமுத்துவாக போனில் நடித்து அவர் செய்யும் அலப்பரைகள். ஒரு வழியாக காமெடி மட்டும் உதவ, இரண்டாம் பாதியில் ரயில் நிற்குமா? இருவரும் இணைவார்களா? என ஓவ்வொரு ஆடியன்ஸையும் சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது. அதிலும் அந்த பாலத்தை கடக்கும் காட்சி பதட்டத்தை இரண்டு மடங்காக்குகின்றது, பிரபு சாலமன் படங்களில் இசைக்கு பிறகு அதிகம் எல்லோரும் எதிர்பார்ப்பது ஒளிப்பதிவு. இந்தப்படத்தில் கொஞ்சம் சறுக்கல். ஆறுதல் பரிசாக அருவி காட்சிகள், மற்றும் தனுஷ் மீது தண்ணீர் தெளிக்கும் காட்சிகள்.

படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவையில்லாத அதிக cut’s. கண்களை உறுத்துகின்றன.

TRP ரேட்டிங்குங்காக விவாதம் நிகழ்ச்சி நடத்தும் மனித உயிரோடு விளையாடும் சேனல்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார் இயக்குனர். உதாரணமாக “உங்க வீட்டுல யாராச்சும் இந்த ரயில்ல மாட்டினா இப்படி பேசுவீங்களா ?” என போலீஸ் அதிகாரி கேட்பதும், ”பிழைச்சு வந்துட்டா முதல் இண்டிர்வியூ எங்களுக்கு” என டிவி ரிப்போர்ட்டர் கேட்பதும் முக்கிய உதாரணங்கள்… இனியாவது TRP பைத்தியங்கள் தெளியட்டும்…

படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் அப்பட்டமாக தெரிகிறது.

படத்தில் லாஜிக் மீறல்கள், இரண்டாம் பாதியில் தேவையில்லாத பாடல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் மேல் தனுஷ் ஏறி அவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் நம்பும்படி இல்லை.

இருந்தாலும் கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும். லாஜிக்கோடு படம் பார்ப்பவர்கள் கண்ணுக்கு இந்தப்படம் கண்டிப்பாக குறையாக தெரியும். மற்றபடி தனுஷ், கீர்த்தி சுரேஷ் மற்றும் கமர்சியல் ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும்.

Share