‘ஒண்டவந்த பிசாசு ஊர் பிசாசை ஓட்டியதாம்‘ – உக்கிரமாகும் டப்பிங் சீரியல் பிரச்சனை

‘ஒண்டவந்த பிசாசு ஊர் பிசாசை ஓட்டியதாம்‘ – உக்கிரமாகும் டப்பிங் சீரியல் பிரச்சனை

தமிழ்த் திரைப்பட, தொலைகாட்சி வரலாற்றில் வேற்றுமொழிப் படங்களை தமிழில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடுவதில் நாம் இதுவரை பரந்த மனப்பான்மையுடன் தான் இருந்திருக்கிறோம். ஜாக்கிசான், ஷாருக்கான், மகேஷ்பாபு போன்ற பல வேற்றுமொழி ஹீரோக்கள் தமிழ் மொழி பேசி நடிப்பதை சென்னை முதல் கன்யாகுமரி வரை தமிழக திரையரங்குகளில் காணமுடிகிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதற்கு நம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பில்லை என்பதால் நாம் அவ்வளவாக அவற்றை கண்டுகொள்வதில்லை. ஏனெனில் நம் படங்களும் சில இந்தி மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆனால் கர்நாடகத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்பே மொழிமாற்றப் படங்கள் தடை செய்யப்பட்டு இன்றுவரை அந்த தடை நீடிக்கிறது. அதற்குக் காரணம் அங்குள்ள சினிமா சங்கங்களின் ஒற்றுமையே.

கர்நாடகத்தில் டப்பிங் உட்பட எந்த பிரச்சனையாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சேர்ந்து குரல்கொடுக்கிறார்கள். இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களான ராமாயணம், மகாபாரதம், கூட கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, கர்நாடக பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் அவர்களின் ‘மால்குடி டேஸ்’ கர்னாடக கிராமத்துக்கதை, பிரபல கன்னட இயக்குநர் சங்கர் நாக் இயக்கத்தில் டெல்லி தூர்தர்ஷன் இந்தியில் தயாரித்து 1986 -ல் ஒளிபரப்பியது. அந்த நாட்களில் இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு சீரியல். இதை கூட கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யவில்லை. பின்நாட்களில் கன்னட சப்டைட்டில் போட்டு அதை ஒளிபரப்பியதே ஒரு பெரும் புரட்சியாக கருதப்பட்டது.. இதை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு வகையில் அவர்கள் குறுகிய மனப்பான்மை உடையவர்களோ என்ற எண்ணம் தோன்றியது.

இங்கு வருவோம், தமிழில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் ‘ஜுனூன்’ என்ற இந்தி சீரியலை பிடிவாதம் என்ற பெயரில் பம்பாய் தமிழில் டப்பிங் செய்து தூர்தர்ஷன் செகண்ட் சேனலில் ஒளிபரப்பியபோது தமிழை கண்டபடி கடித்து துப்பினர். அந்த தமிழ் டப்பிங்- ஐ ஜுனூன் தமிழ் என்று நக்கலடித்து காமெடியாக பார்க்கப்பட்டது. பிறகு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் 1990 -களில் விளம்பரதாரர் நிகழ்ச்சியாக அரைமணி நேர தொடராக சினிமாவுக்கு நிகரான ‘ரயில் சிநேகம்’ என்ற 9 எபிசோடுகள் கொண்ட தொடரை இயக்கினார். அதுதான் தமிழ் தூர்தர்ஷனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. சன்டிவிக்காக தயாரித்து இயக்கிய ‘கையளவு மனசு’ 1994 -95 ல் அந்த சேனலை அசத்தியது. அதன்பின்னர் தான் மெதுவாக சின்னத்திரையை சினிமா பிரபலங்கள் திரும்பிப் பார்த்தனர். பல புதிய சேனல்களும் உருவாகி வேலைவாய்ப்புகளும் உருவாக, பிறகு சின்னத்திரைக்கென்று தனி சங்கங்கள் உருவாக்கப்பட்டன. சினிமா நடிகர்களும் இயக்குநர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் சின்னத்திரைக்கு மெருகேற்றினர். இப்படி தமிழக திரை ஜாம்பவான்களால் வளர்க்கப்பட்ட தமிழக சின்னத்திரையை தற்போது வேற்றுமொழித் தொடர்கள் என்ற சூது கவ்வியதால் இதை மட்டுமே நம்பி வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த சூதில் சிக்கி இயக்குநர் பாலாஜி யாதவ், ஹார்லிக்ஸ் அங்கிள் என்று அழைக்கப்பட்ட நடிகர் முரளி மோகன் ஆகியோர் உயிரிழந்தனர். சின்னத்திரை சங்க முன்னாள் தலைவர் விடுதலையின் மறைவுக்கு ஒருவகையில் இந்த சூதே காரணம். சமீபத்தில் 29 வயதே ஆன இளவரசன் என்ற நடிகர் வாய்ப்புகள் குறைந்து போனதால் வாழ வழியின்றி விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் இன்னும் வெளிச்சத்தில் தெரியாமல் எத்தனை பேரோ தெரியவில்லை. மொழிமாற்றத் தொடர்களை மக்கள் விரும்ப காரணம் சிலரிடம் கேட்ட பொழுது, தமிழில் தயாரிக்கப்படும் தொடர்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கதை அமைப்பில் இருப்பதாகவும், அரைத்த மாவையே பல தொடர்கள் மாற்றி மாற்றி அரைப்பதாகவும், மாமியார் மருமகள் சண்டை, குழந்தை கடத்தல், இன்னொரு பெண்ணின் கணவனை அடைய நினைப்பவள், குடும்பத்துக்குள் குழப்பம், என்று இதையே எத்தனை நாள் தான் பார்ப்பது, ஆனால் டப்பிங் சீரியலில் கூட்டுக்குடும்பத்தையும் அதற்குள் இருக்கும் நல்ல விஷயங்களும் காட்டுகிறார்கள். நல்ல உடை போடுகிறார்கள். , கதையும், களமும் புதிதாக இருக்கிறது என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள். நம் மக்களிடையே இந்த மொழிமாற்ற அரக்கர்கள் மீது அபிமானம் பெருகியதால் அனைத்து சேனல்களும் இறக்குமதிக்கு தயாராகிவிட்டனர். இப்படியே போனால் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வேற்று மொழி கலாச்சாரத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவது உறுதி. இதுபோன்ற சமயங்களில் தமிழ்த் திரைத்துறையினர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த சக்திவாய்ந்த ஊடகத்தின் மீது நடத்தப்படும் அந்நியத்தாக்குதலுக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்து காக்கவேண்டும். வேற்றுமொழித் தொடர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதால் நம் சின்னத்திரைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பறிபோவதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். ‘ஒண்டவந்த பிசாசு ஊர் பிசாசை ஓட்டியதாம்‘ என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல இங்கே எல்லாமே நடந்துக்கொண்டு இருக்கின்றன

இந்த பூதத்தை இங்கு நுழைய விடாமல் மக்கள் விரும்பும் மாற்றத்தை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கொண்டுவந்தாலே பாதி பிரச்னைகள் தீரும். தமிழ் சேனல் உரிமையாளர்கள் இவ்வளவு நாட்கள் தமிழ் சின்னத்திரையை மட்டுமே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும், இதே நிலை தொடரும் பட்சத்தில் சினிமாவின் அனைத்து சங்கங்களும் சகோதரர்களான சின்னத்திரை கூட்டமைப்பிற்கு துணைநின்று காத்திடல் வேண்டும். பெப்சி (FEFSI) யில் அங்கம் வகிக்கும் டப்பிங் யூனியன் சகோதரர்கள் மனம் வைத்து வேற்றுமொழித் தொடர்களுக்கு இனி குரல் கொடுப்பதில்லை என்று முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் மொழிமாற்றத் தொடர்களை தமிழக திரைத்துறையினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்க்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியவரும். பிரச்னை தீவிரமாகும். ‘கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும்.

– இராம. திருநாவுக்கரசு

Share