இறைவி படம் எப்படி ?

இறைவி படம் எப்படி ?

“இறைவி” ஆண்களுக்கு எதிரான படமா? என்ற சந்தேகம் ஏற்கனவே இருக்க, அதற்கு “உண்மையில் ஆண்களுக்கான படம்” என்ற பதிலாகவும் இருக்கிறது. காதலுக்கும் காமத்துக்கும் மட்டும் பெண்மையை நாடி செல்லும் ஆண்மையின் மீது ஆணி அடிக்கிறதே தவிர, ஒட்டு மொத்த ஆண்களின் மீதும் அல்ல.
கணவன் மனைவிக்கு துரோகம் செய்வது சாதாரணமானதாகவும் மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது அபாண்டமான குற்றமாகவும் பார்க்கப்படுவதுதான் இன்றைய யதார்த்தம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சுதந்திரத்தை ஏதோ ஓர் ஆணிடம் எதிர்ப்பார்க்கிறாள். அது அவர்கள் தவறு இல்லை, அவர்களுடைய வளர்ப்பில் உள்ள தவறு என உறைக்க வைத்திருக்கிறது.
ஜெயிலுக்கு போன கணவனுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மனைவி, இன்னொரு திருமணத்துக்குச் சம்மதித்தும் மனதை மாற்ற விரும்பாத மனைவி, கணவனை எதிர்த்து பேசமுடியாமல் பேச முடியாமலேயே போன மனைவி என ஒரு ஆண் பார்த்து ரசிக்கவும் நிறைய இருக்கிறது படத்தில். அதற்குப் பின் ஆண்கள் திரையை ஆட்கொண்டாலும் அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. இறுதியில் பெண்களை உச்சி முகர்ந்து கொண்டாடுவதில் முடிகிறது படம்.
பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிகளை தொடர்ந்து அடுத்து ஒரு உன்னதமான படைப்பான இறைவியை கையில் எடுத்துள்ளார் கார்த்திக். இதில் ஏற்கனவே தன்  கூட்டணியான விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா வர, புது எண்ட்ரி எஸ்.ஜே.சூர்யா.
குடிகாரனாகவும், கணவனாகவும், படைப்பாளியாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும் என எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு அவருக்கென இருந்த எல்லைகளை அடித்து உடைத்துவிட்டது. கிளைமேக்ஸில் போனில் அவர் அழுகையை அடக்கி கொண்டு பேசும் இடம் எத்தனை விருதுகளுக்கும் தகும். நம்மெல்லாம் யார் சார், ஆண் நெடில், இவர்கள் பெண் குறில், ஆண்கள் என்கின்ற திமிரு, உலகத்துலையே கேவலமான படைப்பு ஆண் என்று சொல்லும் இடம் எஸ்.ஜே. சூர்யாவின் உச்சம்.
 Iraivi-Movie-Stills-2
பெண்களுக்கான சுதந்திரத்தை நாம் இன்னும் 30%, 50 % என அளவெடுத்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்கள் யார் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க, எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக்கொள்வேன் என்பது போல் ஒரு கதாபாத்திரம் பூஜா. ‘செக்ஸ் என்ற மூன்றெழுத்து சொல்லுக்காக காதல், அன்பு, பாசம் என்ற எத்தனை மூன்றெழுத்துச் சொற்களையும் ஆண் அடமானம் வைக்கிறான்’ என்பதை பூஜாவின் கதாபாத்திரம் செருப்பால் அடிக்கும்படி சொல்லிச் செல்வது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
 
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக கமாலினி முகர்ஜி, குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வந்தாலும் சண்டை போட்டு அத்தனையும் சகித்து கொண்டு அவருடனே குடும்பம் நடத்துகிறார். பெண்கள் என்னதான் மார்டனாக மாறினாலும் அவர்களுக்கு என்று ஒரு வட்டம் வைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பதை கமாலினி முகர்ஜி கதாபாத்திரம் காட்டுகிறது.
 
விஜய் சேதுபதி சற்று அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரத்தில் விசுவாசமும், காதலும் ,கோபமும் கலந்த மனிதனைக் கண்முன் நிறுத்துகிறார்
 
ஜிகர்தண்டாவிற்கு பிறகு தடுமாறிய பாபியை மீண்டும் கார்த்திக் ஒப்பேற்றிவிட்டார். படத்தின் டெக்னிக்கல் விஷயத்தில் கார்த்திக் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் வழக்கம் போல் உயிர் கொடுக்கிறார். சில காட்சிகளுகு புதுமையான இசையை பயன்படுத்தியிருக்கிறார். பாடல்கள் படத்தின் வேகத்தை குறைப்பதை தவிர்க்கமுடியவில்லை. 
 
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் விஜய் முருகனின் கலை இயக்கமும் படத்தின் மிகப்பெரிய பலம்.
 
மொத்தத்தில் ஆண்கள் (முக்கியமாக கணவன்மார்கள்) தவறாமல் பார்க்க வேண்டிய படம் ’இறைவி’.
-Gowtham GA –
Share