பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்விட்ட சரத்குமார்…!

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்விட்ட சரத்குமார்…!

நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் சரத்குமார் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சரத்குமார், “’நடிகர் சங்கத்தில் 15 ஆண்டுகளாக நேர்மையாகப் பணியாற்றினேன். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளேன். நலிந்த கலைஞர்களுக்கு உதவியுள்ளேன். நாங்கள் நியாயமாகவே நடந்திருக்கிறோம். ஆனால், தேர்தல் ஆதாயத்துக்காக நாசர் அணியினர் கூறிய புகார்கள் என்னை மனதளவில் காயப்படுத்தின. என் மீதான குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்களில் உண்மையில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தேன். அப்படியும் அவர்கள் என்னை காயப்படுத்திவிட்டனர்.

முறைகேடு புகார், தொடர்ச்சியாக எழுந்த விமர்சனங்களால் SPI Cinemas நிறுவனத்துடன் பேசி, புதிதாக கட்ட இருந்த கட்டிட ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிட்டோம். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.” “பொது வாழ்க்கைக்கு வந்த இந்த முப்பது வருடத்தில் நான் யாரையும் ஏமாற்றியதாக யாரும் என் மீது குற்றம் சுமத்தியதில்லை. நாசர் அணியினர் வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டினார்கள்” என்று சொல்லும்போது, பேச முடியாமல் தவித்தார். அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கினார்.

கடந்த செப்டம்பர் 29–ந் தேதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்மூலம், என் மீதான களங்கத்தை துடைத்துவிட்டதாக கருதுகிறேன். இதை கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலேயே வெளியிட இருந்தேன். அப்போது கூறியிருந்தால், இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று எதிரணியினர் கூறிவிடுவார்கள் என்றும், அதுவே உங்களுக்கு தேர்தலில் பலவீனமாகிவிடும் என்றும் உடன் இருந்த நண்பர்கள் கூறினார்கள். எனவேதான், அன்று ஒப்பந்தத்தை ரத்து செய்த விபரத்தை தேர்தலுக்கு முன்பு கூறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இதை அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

ரத்து செய்த ஒப்பந்தத்தை எங்கள் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம்கி அவர்கள் மூலம் இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாசரிடம் ஒப்படைக்க இருக்கிறேன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டு இனிமேல் நிறுத்தப்பட்டுவிடும் என்று கருதுகிறேன்” என்றார் சரத்குமார்.

“வெற்றி, தோல்வியை என் வாழ்க்கையில் நிறைய சந்தித்துவிட்டேன். பொது வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கிறேன். தேவைப்பட்டால் நடிகர் சங்கப் பணிகளுக்கு நாசர் அணியினர் என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

Share