பரத் புதிய கதை களத்தில் நடிக்கும் ‘சிம்பா’

பரத் புதிய கதை களத்தில் நடிக்கும் ‘சிம்பா’

பரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ’சிம்பா’. இதன் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றது.

பிரேம்ஜி சிம்பாவில் ஒரு மிக முக்கியமான வேடமேற்று நடித்திருக்கின்றார். பிரேம்ஜியின் முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலான வேடத்தை கொண்ட கதையாக சிம்பா இருந்ததனால், அவர் ஆர்வத்துடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல, அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார். தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (பிரம்மையில்) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இயக்குனர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்கவைக்கும் படியாக சொல்லியிருக்கிறார்.

நடிப்பு நடனம் என எல்லா திறமைகளும் சிறப்பாக கைவரப் பெற்றிருந்தாலும் பரத்திற்கு அவரது நடிப்புத் திறமையின் பன்முகத் தன்மையை வெளிக்கொணரும் இன்னொரு சாட்சியாக சிம்பா திரைப்படம் நிச்சயம் இருக்கும்.

ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர் ஒளிப்பதிவில் பிரத்யேக உபகரணங்களை இறக்குமதி செய்தும், புதிய உபகரணங்கள் பலவற்றை உருவாக்கியும் பயன்படுத்தும் தனித்துவமானவர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 5 நிமிட காட்சி, 100 கேமராக்கள் கொண்டு எடுக்கப்படும் ஒரே ஷாட், என்று வெரைட்டியாக மிரட்டுகிறார்.

இந்த சிம்பா கதையினை பொறுத்தவரை இயக்குனருக்கும் இவருக்குமான ஒரு சிறப்பு புரிதல்தான் இந்ததிரைப்படத்தின் பலமே. கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பல ஒளிப்பதிவு ஜாம்பவான்களில் இவர் நிச்சயமாக ஸ்பெஷல்தான். இனி இவரை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் காம்பினேஷனில் நிச்சயமாக பார்க்கலாம்.

கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த வருடு பட நாயகி பானு மெஹ்ராவும், இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரமணாவும் நடித்திருக்கிறார்கள். தமிழுக்கு புதுவரவாக ஸ்வாதி தீக்ஷித் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார். பவர்ஸ்டார், லோள்ளுசபா ஸ்வாமிநாதன் என காமெடி நடிகர்களும் சில காட்சிகளேயானாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

சிறப்புத்தோற்றத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும், மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல தமிழ் சினிமா ஹீரோயினும் நடிக்க இருக்கின்றனர். ஹீரோயின் யார் என்பது சஸ்பென்ஸ்.

இசை விஷால் சந்திரசேகர், அப்புச்சி கிராமம் உட்பட விரைவில் வெளியாகவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர். சிம்பா கதை விவாதத்தில் ஆரம்பம் முதலே பயணிப்பவர், இயக்குனரின் நெருங்கிய நண்பர். இந்த படத்தில் இயக்குனர் தனக்குக் கொடுத்த சுதந்திரம் தன்னை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக சந்தோஷப்படுகிறார்.

தயாரிப்பாளர் சிவனேஷ்வரனின் முதல் தயாரிப்பாக இருந்தாலும், அவர் படத்திற்கு தேவையான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் முழு ஈடுபாடுடன் தாராளமாக செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பரீட்சார்த்தமாக செய்துப்பார்க்கும் புதிய காட்சியமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களில் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தும் படமாக சிம்பா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Share