No movies to get released on from sep 4th – Tamil Film Producer Council

No movies to get released on from sep 4th – Tamil Film Producer Council

தொடரும் லிங்கா பிரச்சனை செ-4க்கு பிறகு திரைப்படங்கள் நிறுத்தம்.

லிங்கா படத்தினால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு உரிய நஷ்டஈட்டு தொகையை கொடுக்காமல் வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள பாயும் புலி திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்திருத்தது. வரும் வெள்ளி வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பாயும் புலி திரைப்படத்துக்கு இன்னும் செங்கல்பட்டு மாவட்ட தியேட்டர்களில் முன்பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர். உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கோயம்பேடு ரோகிணி உரிமையாளர் பன்னீர் செல்வம் வேண்டுகோள்விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை அவசரமாக கூடிய தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக 4ம்தேதிக்கு பிறகு திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோயம்பேடு ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவர் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் வேலையை செய்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக “பாயும்புலி” திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டடப்பஞ்சாயத்து செய்துவருகிறார். தங்களுக்கு பெருந்தொகை தரவேண்டும் என்றும் அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார்.

இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04.09.2015 முதல் புதிய நேரடித் தமிழ் படங்கள் மற்றும் மாற்றுமொழிப் படங்களும் வெளியிடுவதில்லை என்றும், மேலும் 11.09.2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப்பிரச்சனையில், தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#tamil film producer council decision.

News Source (Pro Jhonson)

Share