வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க – விமர்சனம்

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க – விமர்சனம்

வாசு (சந்தானம்) சரவணன் (ஆர்யா) இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்… வாசுவுக்கும் சீமாவுக்கும் (தாமிரபரணி கதாநாயகி பானு) திருமணம் ஆகிறது. சரவணன் செய்யும் சேட்டைகள் சீமாவுக்கு பிடிக்காமல் போக சரவணன் நட்பை முறித்துக்கொண்டால் தான் முதலிரவு என்று சொல்லிவிடுகிறாள். சரவணனுக்கு கல்யாணம் ஆகிட்டா நம்ம பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைக்கும் வாசு, சரவணக்கு பெண் தேடலில் இறங்க மேட்ரிமோனி கம்பெனி ஒன்றில் ஐஸ்வர்யாவை (தமன்னா) சந்திக்கிறார். தமிழ் சினிமாவின் அக்மார்க் முத்திரையான அதே பார்த்தவுடன் காதல்… காதலிக்க சொல்லி தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் செய்யும் அதே வேலையை செய்கிறார்…

ஐஸ்வர்யாவை வெறுப்பேத்தி காதலை ஒப்புக்கொள்ள அவளின் தோழி கௌசல்யாவை (வித்யூலேகா ராமன்) காதலிப்பதாக நடிக்க அவளோ சீரியஸாக சரவணனை காதலிக்க தொடங்குகிறாள். இது போக அவளின் அண்ணன் அஸ்வினுக்கு (இசையமைப்பாளர் சித்தார்த் விபின்) ஐஸ்வர்யாவை சம்மந்தம் செய்கின்றனர்.

இதிலிருந்து தப்பிக்க சரவணனை காதலிக்க தொடங்குகிறார் ஐஸ்வர்யா. காதல் தொடர வேண்டும் என்றால் வாசுவுடன் நட்பை முறித்துக்கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யா சொல்ல சரவணன் முடியாதென்று பிரிகின்றார்.

வாசுவும் சரவணணும் தன்னைப்போலவே பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். உண்ணாவிரதம் என்ன ஆனது. வாசுவும் சரவணனும் தங்கள் ஜோடிகளுடன் சேர்ந்தார்களா இதுவே மீதிக்கதை…

ஆல்இன்ஆல் அழகுராஜா தோல்விக்கு பிறகு ராஜேஷின் அடுத்த படம் இது. கண்டிப்பாக அந்த தோல்வியை மறக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்பொழுதும் போல படம் முழுக்க ஆர்யாவுடன் சந்தானம் இருக்கிறார். படத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு டைமிங் காமெடிகளால் கோடிட்ட இடங்களை நிரப்புகிறார்.

இதுவரை யுவனிடம் இருந்த கூட்டணியில் இருந்து விலகி இசையமைப்பாளர் இமானுடன் முதல் படம். பெரிதாக சோபிக்கவில்லை.

ஒளிப்பதிவு நீரவ் ஷா. எப்பொழுதும் போல அவருக்கே உரிய பாணியில் அழகான ப்ரேம்களால் அள்ளி வீசிவிட்டார்.

முதல் பாதி கொஞ்சம் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் இரண்டாம் பாதி நச். முழுக்க முழுக்க டைமிக் ஜோக்ஸ். ராஜேஷ் படம் என்பதற்காக எதற்கெடுத்தாலும் குடிக்கும் காட்சிகள் வைத்திருப்பது குடும்பத்துடன் வரும் ஆடியன்ஸ்க்கு கொஞ்சம் நெருடலைக்கொடுக்கும். ஏற்கனவே இதைப்பற்றி முகநூலிலும், ட்விட்டரிலும் எக்கச்சக்கமாக பேச்சு அடிபட்டிருக்கின்றன. இருந்தாலும் இயக்குனர் அவருடைய டெம்ப்ளேட் விஷயங்களை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. எஸ் எம் எஸ்க்கு பிறகு ஷகிலா ஒரு சீனில் வருகிறார். நான் கடவுள் ராஜேந்திரனும் இருந்திருந்தால் கம்ப்ளீட் பேக்கேஜாக இருந்திருக்கும். நட்புக்காக விஷால் ஒரு சீனில் வருகிறார். அவர் மனைவி பெயர் லக்‌ஷ்மி என்றும் சொல்லுகிறார். இது என்னவகையான குறியீடு என தெரியவில்லை.

மொத்ததில் VSOP கண்டிப்பாக ஒரு முறை குடித்துப்பார்க்கலாம்.

– GA கௌதம்…

Share