சிவகுமார் கல்வி அறக்கட்டளை – 36 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

சிவகுமார் கல்வி அறக்கட்டளை – 36 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 35 ஆண்டுகளாக, +2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடங்கினார் திரு. சிவகுமார். அதன் படி இந்த ஆண்டுக்காகா நிகழ்வு, சென்னை சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்விமேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ 1லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்கா பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார், நிகழ்ச்சியை இறைவணக்கம் பாடி தொடங்கிவைத்தார். பின்னர் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பேசிய சிவக்குமார், 30 அண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப்பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப்பணி செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய அளவில் நான் செய்த உதவிகளை, என்னுடைய மகன்கள் இப்போது நல்ல முறையில் இந்த பணிகளை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதில் மிகுந்த மனநிறையை அடைகிறோம். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.” என்று கூறினார்.

விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அறித்தார். அகரம் ஃபவுன்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா. தொடர்ந்து பேசிய சூர்யா “அகரம் ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1300ஆக உயர்ந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது சாத்தியம் இல்லை, தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தில் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன. தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் இந்த நல்ல நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியயை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் சூர்யா.

Share