காக்கா முட்டை – அவசியம் தியேட்டரில் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்

காக்கா முட்டை – அவசியம் தியேட்டரில் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்

காக்கா முட்டை

ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதி A.R.ரகுமானிடம் ஒருமுறை உங்கள் கலாச்சாரத்தில் இருந்து ஏன் உங்கள் நாட்டில் படம் எடுக்கமாட்டிங்கிறாங்க, எப்போதும் காதல் பற்றிய படம் மட்டுமே எடுத்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று கேட்டார்.. அதற்கு A.R.ரகுமான் காவியத்தலைவன் அது போல ஒரு படமாக இருக்கும் என்று ஒரு விழாவில் சொன்னார். ஒரு வேளை காக்கா முட்டை படத்தை ரகுமான் பார்த்து இருந்தால் அவர் அவசியம் இந்த படத்தை எடுத்துகாட்டாக தைரியமாக சொல்லிருப்பார்…

குப்பத்தில் வாழும் இரு சிறுவர்கள் பிட்சா சாப்பிட ஆசைபடுகிறார்கள். அவர்கள் குப்பத்தில் இருப்பதால் பணம் இருந்தும் பிட்சா கடையின் உள்ள அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்கள் இறுதியில் ஆசைப்பட்ட பிட்சாவை சாப்பிட்டார்களா என்பதே கதை சுருக்கம்.

இந்த படத்தில் நடித்து உள்ள இரு சிறுவர்களும் அற்புதமாக மிகை இல்லாமல் நடித்து இருக்கிறார்கள்.. படத்தில் இறுதி வரை அவர்களின் உண்மையான பெயர் என்ன என்பதே தெரியாது பெரிய காக்கா முட்டை சின்ன காக்கா முட்டை தான். பழரசமாக நடித்து உள்ள ஜோமல்லுரி, அந்த குழந்தைகளின் அம்மாவாக நடித்து உள்ள ஐஸ்வர்யா, குழந்தைகளின் பாட்டி, சூது கவும்மில் நடித்து உள்ள ரமேஷ் திலக், யாமிருக்க பயம் படத்தில் நடித்த பன்னிவாயன், பிட்சா கடை ஒனராக நடித்து உள்ள பாபு அந்தோனி, அவரின் நண்பராக கிருஷ்ணமூர்த்தி அனைவரும் இந்த கதைக்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்கள். மிக சிறப்பான நடிப்பையும் வழங்கி இருக்கிறார்கள். வெறும் பிட்சா சாப்பிட ஆசைபடும் சிறுவர்களின் கதை மட்டும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கை முறை சந்தோசம், ஒரு தவறு நடந்தால் மீடியா எவ்வாறு அந்த மேட்டரை பெரிதாக்கி ஷோ நடத்துகிறார்கள். ஒரே அரசியல்வாதி எவ்வாறு ஒரு சென்சிடிவ் ஆனா விஷயத்தில் குளிர் காய்கிறான். ஒரு பிசினஸ்மேன் அவன் செய்த தப்பை கூட மறைத்து அதை வைத்தே எப்படி வியாபாரத்தை பெருக்கி கொள்கிறான் வரை என கட்சிதமாக காட்சிபடுத்தி இருக்கிறார் மணிகண்டன்.

உலக சினிமா என்பது அந்த ஊரில் இருக்கும் சமூக அவலங்களை, அந்த மக்களின் கலாச்சாரத்தை பிம்பமாக காட்டுவதா இருக்கும் அப்படி தமிழில் வந்த காக்கமுட்டை உண்மையில் உலக சினிமா… இந்த படத்தை அவார்ட் வாங்கிய எதோ கலை படம் என்று எண்ணி விட வேண்டாம். படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசிக்கும்படி அமைத்து இருக்கிறார் மணிகண்டன். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்தவரும் மணிகண்டனே மிக சிறந்த ஒளிப்பதிவு, அமரர் ஆகிவிட்ட கிஷோரின் அருமையான எடிட்டிங் GVபிரகாஷின் நல்ல இசை என்று அனைத்து விஷயங்களும் ஒருங்கே ஒரு சில படங்களிலும் தான் அமையும். இந்த படம் அப்படி அமைந்த ஒரு மிக சிறந்த உலக படம். ஆஸ்காரேக்கே அனுப்பலாம் இப்படத்தை ஆஸ்கார் வெல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

ஈரானின் இயக்குனர் Mohsen Makhmalbaf ஒருமுறை சென்னை வந்து இருந்தார் அவரை பார்க்க ஒளிப்பதிவாளர் செழியன் சென்று இருந்தார் . அவரிடம் நீங்கள் எப்படி ஒரு கதையை செலக்ட் செய்து எடுக்கிறிங்கன்னு ஒரு கேள்வி கேட்டு உள்ளார். அப்போது அவர் வடபழனியில் ஒரு ஜூஸ் கடையில் ஜூஸ் அருந்தி கொண்டு இருந்தார் அப்போது ஒரு பிச்சைக்காரர் Mohsen Makhmalbaf இடம் வந்து ஜூஸ் கேட்டார் இவரும் வாங்கி கொடுத்து உள்ளார் அதை வாங்கி கொண்டு எதிரில் இருக்கும் பிளாட்பார்மில் கால் மேல கால் போட்டு கொண்டு அந்த ஜூசை குடித்து உள்ளான். அவனையே பார்த்துகொண்டு இருந்த Mohsen Makhmalbaf அந்த பிச்சைக்காரன் பின்னாடி செல்லுங்கள் அவனிடம் ஒரு கதை இருக்கிறது, இதுபோல தான் என் சினிமா இருக்கும் என்று பதில் சொல்லி உள்ளார். இயக்குனர் மணிகண்டன் அவர் சொன்னதை போலவே காக்கமுட்டை சினிமாவை எடுத்து உள்ளார். இந்த உலகமயமாக்கல்லால் விளிம்புநிலை மனிதர்களின் ஆசை அவர்களின் எவ்வாறு மதிக்கபடுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக சிறப்பாக பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை தயாரித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனை எவ்ளோ பாராட்டினாலும் தகும்.

தமிழ் சினிமாவில் எப்போது ஆவது வரும் குறிஞ்சிபூ இந்த காக்காமுட்டை. மணிகண்டனை பூ மழை தூவியே தமிழ் சினிமாவிற்கு வரவேற்கலாம். இந்த படத்தில் என்னை கேட்டால் ஒரு குறை கூட இல்லை ரசிகர்களை ரசிக்க வைத்த திரைக்கதை காட்சி அமைப்பு. பளிச் வசனங்கள், மிகையில்லா நடிப்பு, சிறந்த இயக்கம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் காக்காமுட்டை. இந்த படத்தை பார்க்காமல் தவற விடுபவர்கள் நிச்சயம் மிக பெரிய துரதிஷ்டசாலிகள். அவசியம் அனைவரும் தியேட்டரில் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்.

Sarath Babu

SarathBabu

Share